வீட்டு கடனுக்கும், வீட்டு மனை கடனுக்கும் உள்ள வித்தியாசங்கள்
சொந்தமாக உள்ள இடம் அல்லது மனையில் வீடு கட்ட வங்கி கடன் பெறுவதற்கும், வீட்டு மனையை வாங்க வங்கி கடன் பெறுவதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.
குடும்ப சூழல் அல்லது எதிர்காலத்திற்கான சேமிப்பு ஆகிய நிலைகளில் செய்யப்படும் பொருளாதார முதலீடுகளில் தக்க முடிவுகளை எடுக்கவேண்டிய சூழலில் இந்த வித்தியாசங்களை கணக்கில் கொண்டு செயல்பட இயலும்.
வங்கிகள் அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (ழிஷீஸீ Banking Financial Company- NBFC) 21 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்களுக்கு நிலம் மற்றும் வீட்டு கடன் வசதிகளை அளிக்கின்றன. வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களை விடவும், வீட்டு மனையின் மீதான கடன் வட்டியை சில நிதி நிறுவனங்கள் குறைவாக அளிக்கின்றன.
சொத்தின் மதிப்புக்கு கடன்
வீடு அல்லது மனைக்கான சொத்து மதிப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் கடன் அளவை சொத்தின் மதிப்பு (Loan To Value- LTV) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் வீட்டு கடனாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் மொத்த மதிப்பில் சுமார் 80 முதல் 85 சதவிகிதம் வரை கடன் தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு.
வீட்டு மனை கடனை பொறுத்தவரை அதிகபட்ச LTV மதிப்பு என்பது கிட்டத்தட்ட 70 சதவீதமாக இருக்கும். மீதம் உள்ள பற்றாக்குறை தொகைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளவேண்டும்.
கடன் தொகை வரையறை
வீட்டு மனைக்கு கடனாக அளிக்கப்படும் அதிக பட்ச தொகையை சில வங்கிகள் வரையறை செய்திருக்கின்றன. அதனால், கடன் அளிக்கும் வங்கிகளை தொடர்பு கொண்டு உச்ச வரம்புகளை அறிந்து கொண்டு விண்ணப்பம் செய்யலாம்.
சொத்தின் அமைவிடம்
வீட்டு மனை கடன் என்பது நகராட்சி அல்லது மாநகராட்சி வரம்புகளுக்குள் உள்ள குடியிருப்பு மனைகளுக்கு வழங்கப்படுகிறது. சிறிது காலம் கழித்து, வீட்டு கடன் பெற்று அந்த மனையில் வீட்டை அமைத்துக்கொள்ளலாம். தொழில்துறை பகுதி அல்லது கிராமப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு வீட்டு மனை கடன் பெறுவது சிரமம்.
கட்டுமான பணிகள்
வங்கிகள் அளிக்கும் வீட்டு மனை கடனை பொறுத்தவரை கடன் பெற்றவர் பிரமாண பத்திரத்தில் உள்ளவாறு குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டின் கட்டுமான பணிகளை தொடங்கினால்தான் அதற்கான கடனை அளிக்கின்றன. சில வங்கி கடன் திட்டங்களில் கடன் பெற்ற 2 ஆண்டுகளுக்குள் வீட்டை கட்டி முடிக்க உறுதி அளிக்கும் நிலையில் மட்டுமே கடனை தருகின்றன.
திரும்ப செலுத்தும் காலம்
பொதுவாக, வீட்டு கடனை விட வீட்டு மனை கடனுக்கு திரும்ப செலுத்தும் கால அளவு குறைவாக இருக்கும். அதாவது மனை கடனுக்கான அதிகபட்ச திரும்ப செலுத்தும் காலம் 15 ஆண்டுகள் என்ற நிலையில் வீட்டு கடன்களுக்கு 30 ஆண்டுகள் வரையிலும் இருக்கலாம். சில தனியார் நிதி நிறுவனங்கள் நிலம் அல்லது வீட்டு மனை கடன்களுக்கு 15 ஆண்டுகள் வரையிலும் கால அவகாசம் அளிப்பதும் உண்டு.
வரி சலுகைகள்
வீட்டு கடன் தவணைகளில் செலுத்தப்பட்ட வட்டி மற்றும் அசல் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட அளவு வருமான வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம். ஆனால், வீட்டு மனை கடன்களுக்கு அந்த சலுகைகள் அளிக்கப்படுவதில்லை. வீட்டு மனைக்காக கடன் பெற்று, அதில் வீடு கட்டி முடித்த பின்னர் அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
Related Tags :
Next Story