கட்டிட பணிகளில் ‘அலுமினியம் பார்ம் ஒர்க்’


கட்டிட பணிகளில் ‘அலுமினியம் பார்ம் ஒர்க்’
x
தினத்தந்தி 24 Nov 2018 10:01 AM GMT (Updated: 2018-11-24T15:31:06+05:30)

கட்டுமான பணிகளில் அஸ்திவார அமைப்புகள், சுவர்கள், மேற்கூரைகள், குறுக்கு விட்டங்கள் மற்றும் தூண்கள் ஆகியவற்றை கட்டமைக்கும் கான்கிரீட் வேலைகளை எளிதாக செய்து முடிக்க ‘பார்ம் ஒர்க்’ (Form Work) என்ற முட்டு பலகை அமைப்பு மிக அவசியமானது.

வெவ்வேறு பொருட்கள்

‘ஷட்டரிங்’ (Shuttering) என்று கட்டுமான பொறியாளர்களால் குறிப்பிடப்படும் ‘பார்ம் ஒர்க்’ என்பது ஆரம்பத்தில் மரப்பலகை மற்றும் பிளைவுட் ஆகிய பொருட்களால் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் க னமான இரும்பு பிளேட்கள் கொண்டு செய்யப்பட்டன. தொழில் நுட்பம் வளர்ந்த இன்றைய சூழலில் எடை குறைவான அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘பார்ம் ஒர்க்’ அமைப்புகள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எளிதான உபயோகம்

அலுமினியம் என்பது லேசான உலோகம் என்ற நிலையில் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படுவதற்காக உறுதியாகவும், எடை தாங்கக்கூடிய வகையிலும் தயாரிக்கப்படுவதால் கான்கிரீட் பணிகளை வேகமாகவும், எளிமையாகவும், கச்சிதமாகவும் செய்யலாம். குறிப்பாக, அதன் மொத்த எடை குறைவாக இருப்பதால் அனைத்து பணியிடங்களிலும் பொருத்த கிரேன்கள் வேண்டியதில்லை.

குழாய்களுக்கான இடைவெளிகள்

இரும்பை விடவும் அலுமினியத்தில் எளிதாக வடிவமைப்பு மாற்றங்களை செய்ய முடியும் என்ற அடிப்படையில் கான்கிரீட் தளங்கள் மற்றும் பில்லர்களுக்கு இடையில் அமைப்படவேண்டிய ‘பிளம்பிங்’ மற்றும் ‘எலக்ட்ரிகல் பைப்’ ஆகியவற்றுக்காக தேவையான இடைவெளியை தக்க விதத்தில் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

மேற்பூச்சு பணிகள் அவசியமில்லை

கட்டிடத்தின் அடிப்படை அமைப்புகள் தவிர்த்து படிக்கட்டுகள், பால்கனிகள், கைப்பிடிகள் போன்ற அனைத்து பகுதிகளையும் சீரான ‘பினிஷிங்’ கொண்டதாக கட்டமைக்க ஏற்றதாக இருப்பதுடன், அவற்றை அமைப்பது மற்றும் பணிகள் முடிந்த பிறகு அகற்றுவது ஆகிய பணிகளை எளிதாக செய்ய முடியும்.

பொதுவாக, அலுமினிய பார்ம் ஒர்க் முறைப்படி அமைக்கப்பட்ட சுவர்கள் உள்ளிட்ட கான்கிரீட் தளங்களுக்கு மேற்பூச்சு பணிகள் அவசியமாக இருப்பதில்லை. அதன் காரணமாக கட்டுமான தொழிலில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்த முறைக்கு மாறியிருப்பது கவனிக்கத்தக்கது. 

Next Story