குழந்தைகளின் வளர்ச்சிக்கு வித்திடும் வீட்டு சூழல்


குழந்தைகளின் வளர்ச்சிக்கு வித்திடும் வீட்டு சூழல்
x
தினத்தந்தி 1 Dec 2018 12:24 PM IST (Updated: 1 Dec 2018 12:24 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் வீடு மாற்றத்திற்கேற்ப தங்களை சீரமைத்துக்கொள்வதில் சிரமம் அடைவதாக மன நல வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய காலகட்ட வாழ்க்கை முறைகளில் பணியிட மாற்றம், வாடகை மற்றும் சொந்த வீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பலரும் குடியிருக்கும் வீடுகளை மாற்றம் செய்வதுண்டு. அந்த நிலையில், வளரும் குழந்தைகள் வீடு மாற்றத்திற்கேற்ப தங்களை சீரமைத்துக்கொள்வதில் சிரமம் அடைவதாக மன நல வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நிம்மதியான வீட்டு சூழல்

அதாவது, ஒரே இடத்தில் வளரும் குழந்தைகளுக்கு நிம்மதியான வீட்டு சூழலில் பெற்றோருடன் இணைந்து வசிப்பதால் திடமானவர்களாக வளர்கிறார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. அந்த நிலையில் படிப்பு உள்ளிட்ட இதர நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் குழந்தைகள் வீடு மாற்றம் செய்யும்போது, சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள அதிக சிரமம் அடைகிறார்கள்.

குழந்தைகள் மன நலம்

நல்ல நட்பு உள்ளிட்ட சுற்றுப்புற தொடர்புகளை உருவாக்கிக்கொள்வதிலும் குழந்தைகள் தடுமாறுகிறார்கள். அதன் காரணமாக வீடு மாறுவது அல்லது புதியதாக வீடு வாங்கி குடியேறுவது போன்ற நிலைகளில் சிறு குழந்தைகளின் மன நலனுக்கு ஏற்ற சூழலை கருத்தில் கொண்டு செயல்படுவதும் அவசியமானது.

சூழல் அறிமுகம்

வாடகை வீட்டிலிருந்து புதுவீடு வாங்க முடிவு செய்யும் நிலையில் குழந்தைகளின் படிப்பு, நட்பு வட்டம், செயல்திறன் உள்ளிட்ட பல விஷயங்களை கணக்கில் கொள்வது பெற்றோர்களுக்கு அவசியமானது. அவ்வாறு வீடு வாங்கும் நிலையில் குழந்தைகளின் மனதில் புது வீடு பற்றிய ஆவலை ஏற்படுத்தி, அங்குள்ள சூழலுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பழக்கம் ஏற்படுத்தி பின்னர் குடியேறுவதும் ஒரு வகையில் நல்லது.

படிப்பு மற்றும் விளையாட்டு

வாடகை வீடு அல்லது சொந்த வீட்டில் குடியேறும்போது அவற்றின் சுற்றுப்புற சூழ்நிலைகள், குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களது விளையாட்டு மற்றும் வீட்டுக்கு அருகில் பள்ளி ஆகிய விஷயங்களுக்கு ஏற்றதாக அமையவேண்டும்.

அமரும் சேர்கள்

குறிப்பாக, வீடுகளில் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற பிரத்யேகமான நாற்காலி, மேசை, ஊஞ்சல் போன்றவற்றை வாங்குவது அவசியமானது. வழக்கமான பர்னிச்சர் வகைகளை விடவும் அவர்களின் உடல் அளவிற்கு பொருத்தமாக பிரம்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட சிறு கூடை சேர்கள் குழந்தைகள் கச்சிதமாக அமர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்.

குழந்தைகள் ‘டைனிங்’

பொதுவாக, வீடுகளில் டைனிங் டேபிள் மற்றும் சேர்கள் பெரியவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதனால், குழந்தைகளுக்கான பிரத்யேக டைனிங் சேர்களை பயன்படுத்தலாம். அவை, உயரம் கூடுதலாகவும், அதன் பகுதி குறுகலாகவும் இருப்பதால் அதில் உட்கார்ந்து சாப்பிடும் குழந்தைகள் டேபிளில் வசதியாக சாப்பிடுவார்கள்.

படிப்பு மேசை

பொதுவாக, குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக படிப்பு மேஜை இருந்தால் அவர்களின் கவனம் சிதறாது. உட்காரும் சேரிலேயே இணைந்த மேஜை, சேரில் ஒரு பலகை இணைத்து அதன் மேல் புத்தகம் வைத்து கொள்வது போன்ற எளிய மாடல்கள் அவர்களுக்கு ஏற்றது.

குட்டி ஊஞ்சல்

சிறு ஊஞ்சல் அல்லது சாய்ந்து ஆடக்கூடிய ராக்கிங் சேர், குட்டியான சைஸ் கொண்ட பீன் பேக், பொம்மை, துணிகள் போன்றவற்றை சுலபமாக வைத்து எடுப்பதற்கு வசதியான அலமாரிகள் வீடுகளில் இருப்பது அவர்களுக்கு குஷியாக இருக்கும். குழந்தைகள் உறங்க வசதியான பங்கர் கட்டில்களும் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

Next Story