பத்திர பதிவுக்கு பின்பு பட்டா பெயர் மாற்றும் நடைமுறை


பத்திர பதிவுக்கு பின்பு பட்டா பெயர் மாற்றும் நடைமுறை
x
தினத்தந்தி 1 Dec 2018 7:01 AM GMT (Updated: 1 Dec 2018 7:01 AM GMT)

இணையவழி பட்டா மாறுதல் படிவத்துக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் புதிய முறை கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்ட விண்ணப்ப எண்ணை வைத்தே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன வென்று அறிய முடியும். இது குறித்து அரசு பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திகள் பற்றி இங்கே காணலாம்.

இணைய வழி

வீடு-மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கான பத்திர பதிவு முடிந்த பிறகு அவற்றிற்குரிய பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கான படிவம் பத்திர பதிவு துறை மூலம் வருவாய் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்காக ஒருங்கிணைந்த இணைய அடிப்படையில் ஸ்டார் 2.0 என்ற திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

பெயர் மாற்ற படிவம்

அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டா பெயர் மாறுதல் படிவம் (படிவம்-6) அனுப்பும் வசதி கணினி மூலம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு பத்திர பதிவுக்குப்பின்னர் அதற்கான பட்டா பெயர் மாற்றம் செய்யும் படிவத்தை இணைய வழி மூலம் வருவாய் துறைக்கு உடனுக்குடன் அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்பட்டதற்கு சான்றாக ஒப்புகை சீட்டு எண்ணுடன் பத்திரதாரருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் வசதியும் இருந்தது.

பெயர் மாற்ற விண்ணப்பம்

ஆனால், அவ்வாறு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கான ஒப்புகை சீட்டு எண் பெற்ற நிலையிலும் அரசு பொது சேவை மையத்தில் பட்டா பெயர் மாறுதல் செய்வதற்கு பத்திரதாரர்கள் விண்ணப்பங்களை அனுப்பி வந்தனர். அதனால் ஒரே சொத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறக்கூடிய நிலை ஏற்பட்டது.

விண்ணப்ப எண்

மேற்கண்ட சிக்கலை தவிர்க்கும் விதமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பியதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அசல் பத்திரத்தை திரும்பப் பெறும்போது சார்பதிவாளரால் கையொப்பமிட்ட ஒப்புகை சீட்டு அளிக்கப்படும். அதில் வருவாய்த்துறைக்கு அளிக்கப்பட்ட விண்ணப்ப எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

செயலி பதிவிறக்கம்

அந்த எண்ணை http:// www.eservices.tn.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று Know your applicaion Status என்ற பகுதியில் பதிவு செய்து பட்டா நிலவரம் பற்றி அறியலாம். மேலும், செல்போன் மூலமாக AMMA eservice of land records என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் விண்ணப்ப எண்ணை உள்ளடு செய்தும் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிந்து கொள்ள இயலும்.

ஒப்புகை சீட்டு அவசியம்

பதிவு பணிகள் முடிவடைந்து அசல் ஆவணம் திரும்ப வழங்கப்படும் நாள் பற்றி பத்திரப்பதிவு சமயத்தில் வழங்கப்படும் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அன்றைய தேதியில் அசல் பத்திரங்களை திரும்ப பெற்றுக்கொள்ளும்போது பட்டா பெயர் மாற்றம் மேற்கொள்ள வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டதற்கான ஒப்புகை சீட்டை பத்திரதாரர்கள் தவறாமல் பெற்றுக்கொள்ளவேண்டும்.

பழைய முறை தொடரும்

இந்த வசதி தற்போது கிராம புல எண்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் நத்தம் மற்றும் நகர புல எண்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போது நத்தம் மற்றும் நகர புல எண்களுக்கு பத்திர பதிவின்போது பத்திரதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட பட்டா பெயர் மாற்ற படிவங்கள், சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து வாரந்தோறும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிடையாக வழங்கப்படும் நடைமுறை தொடர்ந்து இருக்கும்.

உட்பிரிவு கட்டணம்

பத்திர பதிவின்போது உட்பிரிவு தேவைப்படும் இனங்களுக்கு உட்பிரிவு கட்டணம் பதிவு துறையால் வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு பெறப்பட்ட கட்டண விவரங்கள் இணையவழி பட்டா மாறுதல் படிவத்துடன் வருவாய் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

நடைமுறை தொடங்கியது

அதன் காரணமாக, தனிப்பட்ட உட்பிரிவு கட்டணங்கள் எதுவும் வருவாய் துறைக்கு செலுத்த வேண்டியதில்லை. மேலும், பொதுமக்கள் ஆவணப்பதிவு முடிந்தவுடன் தனியாக பட்டா பெயர் மாறுதல் படிவங்களை அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருவாய் துறைக்கு அனுப்ப வேண்டியதில்லை. இந்த நடைமுறையானது சென்ற அக்டோபர் மாதம் 29-ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு பொருந்தும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

Next Story