தரைத்தள அழகை கூட்டும் விதவிதமான ‘டைல்ஸ்’ வகைகள்


தரைத்தள அழகை கூட்டும் விதவிதமான ‘டைல்ஸ்’ வகைகள்
x
தினத்தந்தி 8 Dec 2018 8:34 AM GMT (Updated: 8 Dec 2018 8:34 AM GMT)

கட்டமைப்புகளின் தரைத்தளம் மற்றும் சுவர் ஆகியவற்றில் பதிப்பதற்கு ஏற்ற பல்வேறு வகை பதிகற்கள் சந்தையில் கிடைக்கின்றன. பல்வேறு விதங்களில் உள்ள அவற்றின் தன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

‘போர்சிலின் டைல்ஸ்’

மணல் மற்றும் பாறை பொடி ஆகியவற்றை அதிகபட்ச வெப்பநிலையில் உருக்கி பல படிகளில் உருவாக்கப்படுவதால் இவை உறுதியாக இருக்கும். இவற்றில் நீர் உறிஞ்சும் தன்மை குறைவு. அதனால், டைல்ஸ் மேற்பரப்பில் நீர் பரவும் பிரச்சினை ஏற்படுவதில்லை. தேய்மான குறைவு என்ற நிலையில் அதிக உபயோகம் உள்ள தரை தளங்களுக்கு இவை பொருத்தமாக குறிப்பிடப்படுகின்றன.

‘கிளாஸ் டைல்ஸ்’

பல வண்ண கண்ணாடி பொடி, களிமண் உள்ளிட்ட இதர பொருட்கள் கலந்து, அதிக வெப்பத்தில் உருக்கி தயார் செய்யப்படும் இவ்வகை டைல்ஸ் முற்றிலும் கண்ணாடி என்பதால் தரைத்தளத்தை விடவும் சுவர்களுக்கு ஏற்றது. உள் அலங்கார முறைகளில் கிளாஸ் டைல்ஸ் பயன்பாடு என்பது மிடுக்கான தோற்றத்தை அளிக்கக்கூடியது. கட்டிடத்தின் உள் புறத்திலும் வெளிப்புறத்திலும் பயன்படுத்த உகந்ததால் பெரும்பாலான அலுவலக கட்டிடங்களில் இவ்வகை டைல்ஸ் பதிக்கப்படுகின்றன. ஈரத்தை உறிஞ்சாது என்பதால் சமையலறை மற்றும் குளியலறைகளில் பயன்படுத்துவது வழக்கம்.

செராமிக் டைல்கள்

இவை களிமண், மணல் மற்றும் இதர இயற்கை பொருள்களை கலந்து உருவாக்கப்படுகிறது. கட்டிடங்களின் உள்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகியவற்றுக்கு பொருத்தமானது. சுத்தம் செய்ய எளிது என்ற நிலையில் வீடுகளின் சுவர்கள் மற்றும் தரை தளம் ஆகியவற்றில் பதிக்கப்படுகின்றன. ஈரப்பதத்தால் பாதிக்கப்படுவதில்லை என்பதுடன் கறைகளும் இவற்றின்மீது பெரிதாக படிவதில்லை. குறைவான விலையில் கிடைக்கும் என்பதால் பட்ஜெட் வீடுகள் பலவும் அதிகம் பயன்படுத்தும் டைல்ஸ் வகையாக செராமிக் ரகம் திகழ்கிறது.

விர்டிபைடு டைல்கள்

களிமண், சிலிக்கா, குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பர் கனிம பொருள் ஆகியவற்றை அதிக வெப்பத்தில் உருக்கி, பளபளப்பான மேற்புறம் கொண்டதாக இவை உருவாக்கப்படுகின்றன. நீர் படிவது, கறைகள் உருவாவது போன்ற சிக்கல்கள் இல்லாமலும், வண்ணங்கள் மங்கி விடாமலும், கீறல்கள் விழாமலும் உறுதியாக உழைப்பதாகவும் சொல்லப்படுகிறது. தரைத்தளம் மற்றும் சுவர்கள் ஆகியவற்றுக்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன. தரைத்தளத்துடன் ஒருங்கிணைய அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக செட்டாகி விடுவதுடன், பாலிஷ் செய்ய வேண்டிய அவசியமும் பெரிய அளவில் இருப்பதில்லை.

டிஜிட்டல் டைல்கள்

சுவர்கள் மீது ஒட்ட இவ்வகை டைல்ஸ் பயன்படுகிறது. அழகான டிசைன்கள் டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதால் குளியலறை, சமையலறை போன்றவற்றின் சுவர்களுக்கு இந்த வகை டைல்ஸ் பொருத்தமானதாக குறிப்பிடப்படுகிறது.

3டி வகை டைல்ஸ்

முப்பரிமாண டைல்ஸ் (3D Tiles) வகைகளில் அழகிய காட்சிகளை பதித்துக்கொள்ளலாம். ரசனைக்கு ஏற்ப வெவ்வேறு விதமான வகைகளை அறைகளுக்கு ஏற்ப பயன்படுத்தி வீட்டை அழகாக மாற்றலாம். குளியலறையில் மீன்கள் மற்றும் டால்பின்கள் கொண்ட கடல், சமையலறையில் மரத்தில் பழங்கள் பழுத்துள்ள காட்சி. குழந்தைகளுக்கான அறையில் வண்ணத்து பூச்சிகள், பூக்கள் கொண்ட சிறிய தோட்டம் ஆகிவவற்றை இவ்வகை டைல்ஸ் மூலம் காட்டலாம். பளபளப்பாக இருந்தாலும் இவற்றின் மேற்புறத்தில் போதுமான சொரசொரப்பு கொண்டதாகவும் இருக்கும்.

‘ஆன்டி ஸ்கிட்’ வகைகள்

மாடிப்படிகள், குளியலறை, வயதானவர்கள் அறை ஆகியவற்றுக்கு ஏற்றது. சமையல் அறையில் அதிகமான தண்ணீர் பயன்பாடு காரணமாக அங்கு இதை பதிக்கலாம். செடிகள் வைக்கும் இடங்கள், தண்ணீர் உபயோகிக்கும் பகுதிகள், நீச்சல் குளம் அருகில், போர்டிகோ போன்ற இடங்களுக்கு இவை பொருத்தமானது.

ஸ்டெய்ன் பிரீ டைல்ஸ்

வீட்டின் சமையலறைக்கு ஏற்றதாக ஸ்டெய்ன் பிரீ டைல்ஸ் உள்ளது. இவற்றின்மீது காபி அல்லது எண்ணெய் சிந்தினால் எளிதாக சுத்தப்படுத்த இயலும் என்பதால் சமையலறைக்கான பிரத்யேகமாக தேர்வாக உள்ளது. பொதுவாக, சமையல் அறையில் சிம்னி உயரம் வரை வால் டைல்ஸ் பதிப்பது வழக்கம்.

நேச்சுரல் ஸ்டோன்

இவ்வகை டைல்ஸ் ரகங்கள் பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும். வீடுகளின் உட்புறம் மட்டுமல்லாமல் சுற்றுச்சுவரை ஒட்டிய நடைபாதைகள், தோட்டத்திற்கான நடைபாதை ஆகிய பகுதிகளிலும் பயன்படுத்தலாம். குறிப்பாக மற்ற டைல்ஸ் ரகங்களைவிட கூடுதலான காலத்திற்கு நீடித்து உழைப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. குளியலறை மற்றும் சமையலறைகளுக்கு பயன்படுத்தும்போது சொரசொரப்பான மேற்புறம் கொண்டதாக மாற்றி பதித்துக்கொள்ளலாம். 

Next Story