மூத்த குடிமக்கள் வசதிக்கேற்ற குடியிருப்பு திட்டங்கள்


மூத்த குடிமக்கள் வசதிக்கேற்ற குடியிருப்பு திட்டங்கள்
x
தினத்தந்தி 15 Dec 2018 7:48 AM GMT (Updated: 15 Dec 2018 7:48 AM GMT)

மூத்த குடிமக்களுக்கான ‘கேட்டடு சீனியர் லிவிங் கம்யூனிட்டி’ மற்றும் ‘ரிட்டயர்மெண்டு கம்யூனிட்டி’ ஆகிய குடியிருப்பு திட்டங்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 16 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் என்றும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் அந்த அளவு 3 சதவிகிதம் என்ற அளவில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதனால் மூத்த குடிமக்களுக்கான ‘கேட்டடு சீனியர் லிவிங் கம்யூனிட்டி’ மற்றும் ‘ரிட்டயர்மெண்டு கம்யூனிட்டி’ ஆகிய குடியிருப்பு திட்டங்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது.

பல்வேறு வசதிகள்

முதியோர்கள் வாழ்க்கைக்கு ஏற்ற நகரமாக தமிழக அளவில் கோயம்புத்தூர் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது சென்னை பெருநகரத்திலும் போதுமான உள்கட்டமைப்பு, தேவையான மருத்துவ வசதிகள், பாதுகாப்பான சுற்றுச்சூழல் போன்ற அம்சங்கள் கொண்ட மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய கட்டுமான திட்டங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் கட்டுநர்கள் அவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பெருநகரங்கள்

வழக்கமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வயதான தாய்-தந்தையயர்களை பராமரிக்க ஏற்ற வசதிகள் அமைந்திருப்பதில்லை. மேலும், மூத்த குடிமக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்து குடியிருப்புகளிலும் செய்யப்பட்டிருப்பதில்லை என்ற அடிப்படையில் பெருநகரங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் மூத்த குடிமக்கள் குடியிருப்பு திட்டங்களை ஓய்வு பெற்றவர்கள் தங்களது குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ தேர்ந்தெடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.

கூடுதல் கட்டமைப்புகள்

மேற்கண்ட குடியிருப்புகளில் தேவையான மருத்துவ வசதிகள், நல்ல உள்கட்டமைப்பு, பொழுதுபோக்கு வசதிகள் என பல்வேறு அம்சங்கள் இருக்கும். முதியோர்களுக்கு ஏற்ற உணவு வகைகள், பாத்ரூமில் ஆன்டி ஸ்கிட் டைல்ஸ், டாய்லெட்டில் அமர்ந்து எழும்போது பிடித்துக்கொண்டு எழ வசதியாக ‘ஹேண்ட் கிராப் பார்கள்’, இன்டர்நெட் வசதி, அவ்வப்போது கோயில்களுக்கு அழைத்து செல்வது, தியேட்டர், டின்னர் ஆகிய விஷயங்களும் செய்து தரப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு வீட்டையும் நிர்வகிக்க தனிப்பட்ட சேவையாளர் வசதி அளிக்கப்படுவதும் முதியோர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

சென்னையில் ‘சீனியர் லிவிங் கம்யூனிட்டி’

சென்னை பெருநகரத்தை பொறுத்தவரை ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி, இ.சி.ஆர் போன்ற தென்பகுதிகளில் இத்தகைய கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலும் அதற்கடுத்து உள்ள மூன்றாம் நிலை நகரங்களிலும் மேற்கண்ட கட்டுமான திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமுதாய அளவில் ‘சீனியர் லிவிங் கம்யூனிட்டி’ குடியிருப்புகள் முதியோர் இல்லங்களுக்கு மாற்றாக அமைந்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். பணி நிறைவடைவதற்கு 4 அல்லது 6 வருடங்கள் முன்னதாகவே பலரும் தங்களுடைய ஓய்வுகால திட்டமாக மேற்கண்ட குடியிருப்புகளில் முதலீடு செய்து வருகிறார்கள்.

சக்கர நாற்காலிகளுக்கேற்ற பாதைகள், மருத்துவ பராமரிப்புக்கு முன்னுரிமை, அவசர அழைப்புக்கான ஸ்விட்ச் வசதி, அழைத்தவுடன் மருத்துவர்கள் வீட்டுக்கு வருவது, நர்ஸ் வசதிகள் போன்ற பல ஏற்பாடுகள் மேற்கண்ட குடியிருப்புகளில் செய்து தரப்பட்டிருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர்.

பட்ஜெட் குடியிருப்புகள்

அந்த திட்டங்களில் முதிய தம்பதியினர்களுக்கு ஏற்ற வகையில் 700 முதல் 1400 சதுரடி அளவில் ஒரு பெட்ரூம் அல்லது 2 பெட்ரூம் வசதியுடன் சிறிய வீடுகளாக அமைந்து சுலபமாக வாங்கவும் அவற்றில் பராமரிப்பு பணிகளை எளிதாக செய்யும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டை கணக்கில் கொண்டு மலிவு விலை பிரிவு மற்றும் நடுத்தர விலை பிரிவு திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, 60 முதல் 80 வயதுக்குள் இருப்பவர்களுக்கு தேவையான வசதிகள் கொண்ட குடியிருப்புகள் இந்திய அளவில் இன்னும் பெரிய அளவில் இல்லை என்ற நிலையில் பல கட்டுமான நிறுவனங்கள் அவற்றில் கவனம் செலுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

Next Story