கட்டுமான பணி இடங்களில் ஏற்படும் ஒலி அளவுக்கான கட்டுப்பாடு
சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் ஒலி மாசு குறித்து பல்வேறு உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடக்கும் கட்டுமான பணிகளில் வெளிப்படும் ஒலி அளவுக்கான அதிகபட்ச அளவை ‘டெசிபல்’ முறையில் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கும் அதிகமாக சத்தம் வரக்கூடிய கட்டுமான பணியிடங்களில் உருவாகும் ஒலி அளவு பதிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு அரசு அபராதம் விதிக்கிறது.
கட்டுமான பணிகள் நடக்கும்போது காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஆகியவற்றால் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவதன் அடிப்படையில் உலக சுகாதார மையம் பல்வேறு நெறிமுறைகளை வகுத்து அளித்துள்ளது.
மேலை நாடுகளில் கட்டுமான பணிகளின் ஆரம்ப கட்டத்தில், அப்பகுதியில் சுமார் 150 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள சில கட்டிடங்களில் ஒலியின் அளவை பதிவு செய்யும் சிறிய உபகரணம் பொருத்தப்படும். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் அதில் பதிவான சத்த அளவுகளுக்கான பதிவுகள் உரிய அலுவலகத்துக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே அவை ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த விஷயத்தில் நமது சுற்றுசுழல் அமைச்சகமும் சில விதிமுறைகளை நிர்ணயம் செய்துள்ளது. காலை முதல் மாலை வரை ஏற்படும் சத்தத்தின் டெசிபல் அளவீடுகள் ஒரு வகையாகவும், மாலை முதல் காலை வரை ஏற்படக்கூடிய சத்தத்தின் டெசிபல் அளவீடுகள் இன்னொரு வகையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது, பகல் நேரங்களில் 65 டெசிபல் அளவுக்கு உட்பட்ட சத்தமும், இரவு நேரங்களில் 55 டெசிபல் அளவுக்கு உட்பட்டதாகவும் சத்தம் இருக்க வேண்டும்.
Related Tags :
Next Story