சிக்கன செலவில் புதுமையான அஸ்திவார கட்டமைப்பு


சிக்கன  செலவில்  புதுமையான  அஸ்திவார  கட்டமைப்பு
x
தினத்தந்தி 13 April 2019 4:00 AM IST (Updated: 12 April 2019 4:43 PM IST)
t-max-icont-min-icon

ஒரு கட்டிடத்தின் மொத்த எடை மற்றும் இதர புறக் காரணங்களால் கட்டிடங்கள் மீது செலுத்தப்படும் பல்வேறு எடைகளையும் அஸ்திவாரம் தாங்கி நிற்கிறது.

ரு கட்டிடத்தின் மொத்த எடை மற்றும் இதர புறக் காரணங்களால் கட்டிடங்கள் மீது செலுத்தப்படும் பல்வேறு எடைகளையும் அஸ்திவாரம் தாங்கி நிற்கிறது. அதன் அடிப்படையில் கடைக்கால் பொறியியல் என்ற பவுன்டே‌ஷன் என்ஜினியரிங் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு யுக்திகள் உலக நாடுகளில் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது கட்டுமான துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. கட்டமைப்புகளுக்கான அஸ்திவார அமைப்பில் அஸ்திவார மண்ணை இறுக்கமாக மாற்றும் (
Stabilised Rammed Earth Foundations
) முறையின் மூலம் அஸ்திவார அமைப்புக்கான செலவை மிச்சப்படுத்தலாம் என்கிறார் ரஷ்யாவின் யூரி விளாசங் என்ற கட்டிடக் கலைஞர்.

அழுத்தப்படும் மண்

அவர் கண்டுபிடித்த முறைப்படி சுமார் 12 டன் எடை கொண்ட இரும்பு சிலிண்டர் ‘கிரேன்’ மூலம் குறிப்பிட்ட உயரம் உயர்த்தப்பட்டு, கீழே போடப்படும். அந்த நிலையில் சிலிண்டர் வேகமாக தரையில் மோதும்போது, கிட்டத்தட்ட 3 மீட்டர் ஆழமுள்ள குழி ஏற்படும். அதை உடனே மண் கொண்டு நிரப்பி விட்டு, மீண்டும் அந்த இடத்தில் கிரேன் மூலம் சிலிண்டரை அதே பகுதியில் மோதும்படி செய்ய வேண்டும். பல முறைகள் இவ்வாறு தொடர்ச்சியாக செய்வதன் மூலம் அஸ்திவாரத்தின் அடித்தளத்தில் உள்ள மண் நன்றாக இறுகிவிடும்.

ஈரப்பதமே காரணம்

மண்ணுக்கு அடியில் உள்ள நீரின் காரணமாக, கட்டிடங்கள் பலவீனம் அடைவதாக அறியப்பட்டுள்ளது. டன் கணக்கில் எடை கொண்ட சிலிண்டர் மோதுவதால் உருவாகும் அழுத்தம் காரணமாக, மண்ணின் கீழ் பரப்பில் உள்ள தண்ணீர் அல்லது ஈரப்பதம் வெளியேற்றப்பட்டு மண்ணின் தன்மை இறுக்கமாக மாறுகிறது. அதிக அழுத்தம் கொடுத்து, நன்றாக இறுக்கப்பட்ட மண் மீது 300 டன் எடை கொண்ட வீட்டை கட்ட இயலும். அதனால், அஸ்திவார செலவுகளில் குறிப்பிட்ட அளவு சிக்கனம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அஸ்திவார கட்டமைப்பு முறைகளை பயன்படுத்தி, வரும் காலங்களில் நிறைய கட்டிடங்கள் அமைக்கப்படலாம் என்று கட்டிட கலைஞர் விளாசங் குறிப்பிட்டுள்ளார்.

கட்டிட சுமையை தாங்கி நிற்கும்

இந்த மண் அழுத்த முறையை பயன்படுத்தி ரஷ்யாவில் உள்ள ‘நோவோசிபிர்ஸ்க்’ என்ற இடத்தில் குடியிருப்புகளை ‘விளாசங்’ அமைத்துள்ளார். களிமண் மற்றும் மணல் நிரம்பிய அந்த பகுதியில் 16 மீட்டர் ஆழம் கொண்ட அஸ்திவாரம் தேவை என்று கணக்கிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதி நிலத்தடியில் பாறைகள் இருந்த காரணத்தால் 11 மீட்டருக்கு மேல் அஸ்திவாரம் எடுக்க இயலவில்லை. அந்த நிலையில் மண்னை அழுத்தி, கடினமாக மாற்றி அதன்மீது கட்டிடம் அமைக்கப்பட்டது என்றும் விளாசங் தெரிவித்திருக்கிறார். 

நமது பகுதியான விழுப்புரம் அருகே உள்ள ஆரோவில் என்ற சர்வதேச நகரத்தில் உள்ள கட்டிடக்கலை வல்லுனர்கள் இந்த முறையை பயன்படுத்தி வீடுகளை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story