கவனத்தில் கொள்ள வேண்டிய சமையலறை பாதுகாப்பு அம்சங்கள்


கவனத்தில் கொள்ள வேண்டிய சமையலறை பாதுகாப்பு அம்சங்கள்
x
தினத்தந்தி 11 May 2019 4:30 AM IST (Updated: 10 May 2019 5:15 PM IST)
t-max-icont-min-icon

சமையல் அறையில் மின்சாரம், மின் உபகரணங்கள், கூர்மையான பொருட்கள், எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் ஆகியவை அன்றாடம் பயன்படுத்தப்படுகின்றன.

நெருப்பினால் உண்டாகும் பாதிப்புகள் கவனக்குறைவு மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது ஆகிய காரணங்களால் ஏற்படுகின்றன. குடியிருப்புகளில் உருவாகும் நெருப்பு பாதிப்புகளில் பெரும்பாலானவை சமையலறையில் ஏற்படுவதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இல்லத்தரசிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

* காற்றோட்டமான தரைமட்ட பகுதியில், நிமிர்ந்த நிலையிலேயே எப்போதும் சிலிண்டர் வைக்கப்படவேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் கியாஸ் அடுப்பு இருக்க வேண்டும். ‘கியாஸ் டியூப்பில்’ விரிசல்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது அவசியம். பயன்படுத்தாத சமயங்களில் சிலிண்டர் ‘நாப்’ மூடிய நிலையில் இருக்கவேண்டும்.

* பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைப்பதை தவிர்ப்பது அவசியம். அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் பெரும் பாதிப்பாக உருவாகலாம்.

* காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நிலையில் அது தரைமட்ட அளவில் பரவி நிற்கும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால், அறையில் உள்ள சுவிட்சுகளை பயன்படுத்தாமல், ஜன்னல், கதவுகளை நன்றாக திறந்து வைத்து காற்றோட்டத்தை ஏற்படுத்தி கியாஸ் வெளியேறும்படி செய்ய வேண்டும்.

* கியாஸ் கசிவை கண்டறிந்து எச்சரிக்கை எழுப்பும் கருவியை (Gas Leak Detectors) பொருத்திக்கொள்வது பல வகைகளில் பாதுகாப்பானது.

* சமையலறையில் கூர்மையான பல கருவிகள் சமையலறை மேடையில் உள்ள நிலையில், குழந்தைகள் அவற்றால் காயம் அடையும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், குழந்தைகளை சமையலறைக்குள் அனுமதிப்பது கூடாது.

* சமையலறையில் கால்களை மூடும் வகையில் செருப்புகள் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. அதன் மூலம், தவறுதலாக கத்தி போன்ற கூர்மையான கருவிகள் கீழே விழுவதால், கால்களில் ஏற்படும் காயங்கள் தவிர்க்கப்படும்.

* சமையலறையில் நீண்ட கைகள் கொண்ட தொளதொளப்பான ஆடைகள் அணியக் கூடாது. அவ்வகை துணிகளில் எளிதில் நெருப்பு பற்றும் வாய்ப்பு கொண்டவை. மேலும், சிந்தெடிக் வகை ஆடைகளும் பாதுகாப்பானதாக இருக்காது. காரணம் எதிர்பாராத விதமாக நெருப்பு பட்டால் உடலுடன் அவை ஒட்டிக்கொள்ளும்.

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமையலறையில் உள்ள மின்சார இணைப்புகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.

* சிறிய அளவில் உருவான தீ விபத்துக்களின்போது பயன்படுத்த, ‘பயர் பிளாங்கெட்’ (Fire blanket) மற்றும் தீ அணைப்பான் (fire extinguisher) ஆகியவற்றை வீடுகளில் வைத்திருப்பது பாதுகாப்பானது.

* உடைந்த மின்சார சுவிட்சுகளை தொட்டு விடாமல், அவற்றை உடனடியாக மாற்றி விட வேண்டும்.

* மின் சாதனங்கள் அல்லது மின்சார வயர்களில் எதிர்பாராத நிலையில் தீப்பிடித்துக் கொண்டால், தண்ணீரை ஊற்றுவது தவறானது. மெயின் சுவிட்சை உடனடியாக அணைத்து விட்டு, தீயணைப்பான் மூலம் நெருப்பை அணைப்பதே பாதுகாப்பானது.

* நெருப்பை உணர்ந்து அதனை ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவியை (Automatic Fire Detection And Alarm System) பொருத்திக்கொள்வது பாதுகாப்புக்கு ஏற்றதாக அமையும்.

Next Story