‘லிப்டு’ அமைப்புகளுக்கு உரிமம் பெறுவது அவசியம்
கட்டிட உரிமையாளர்கள் லிப்டு அமைப்பு சட்டம் பற்றிய விதிமுறைகள் பற்றிய தகவல்கள் அறியாமல் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
குடியிருப்புகள் உள்ளிட்ட வர்த்தக கட்டிடங்களில் உள்ள மாடிகளுக்கு செல்ல மின்தூக்கி என்ற லிப்டு பயன்படுத்தப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு மின்தூக்கி சட்டம் 1997 (Tamil Nadu Lift Act -1977) தமிழ்நாடு மின்தூக்கி விதிமுறைகள் 1977 (Tamil Nadu Lift Rules-1977) ஆகியவை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. அந்த சட்ட விதிமுறைகளின்படி லிப்டு அமைக்கப்பட்டுள்ள கட்டிட உரிமையாளர்கள் அதற்கான உரிமத்தை அரசு தலைமை மின் இயக்குனரிடமிருந்து பெற வேண்டும். மேலும், லிப்டு ஆய்வாளரிடமிருந்தும் உரிமம் பெற்று, அதை ஆண்டு தோறும் புதுப்பித்துக்கொள்வதும் அவசியம். இந்த சட்டம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னரே அமைக்கப்பட்ட லிப்டு அமைப்புகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மின் ஆய்வு ஆய்வுத்துறை அலுவலகத்திலும் உள்ள லிப்டு ஆய்வாளரிடம், மின்தூக்கி என்ற லிப்டை அமைக்க விரும்பும் ஒரு கட்டமைப்பின் உரிமையாளர் அதற்குரிய படிவம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அத்துடன் லிப்டு அமைக்கப்படும் இடத்தின் வரைபடத்தையும் இணைத்து அனுப்பவேண்டும். அதில், லிப்டு அமைப்பிற்கான திட்டம், கதவுகள் அமைப்பு, லிப்டு சென்று வரும் காலியிடப் பகுதி, எந்திர அறையின் அளவு மற்றும் நிலை ஆகியவை பற்றிய குறிப்புகள் இருக்கவேண்டும். அவற்றை தவிரவும் எத்தனை தளங்களுக்கு லிப்டு ஏறி இறங்கும் என்ற விவரம், அவற்றின் வயரிங் வரைபடம் மற்ரும் நகராட்சி அல்லது ஊராட்சி அலுவலகம் மூலம் பெறப்பட்ட ஒப்புதலுடன், தக்க கட்டணத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். லிப்டு ஆய்வாளர் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை சரிபார்த்து லிப்டு அமைப்பதற்கான அனுமதியை படிவம்-பி மூலம் குறிப்பிடுவார். அனுமதியில் குறிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்படும் நிலையில் அபராதம் விதிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழக அளவில் உள்ள பெரும்பாலான கட்டிட உரிமையாளர்கள் லிப்டு அமைப்பு சட்டம் பற்றிய விதிமுறைகள் பற்றிய தகவல்கள் அறியாமல் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அதனால், லிப்டு தயாரிப்பாளர்கள் மற்றும் அவற்றை அமைக்கும் நிறுவனங்களும், லிப்டுக்கான உரிமம் பற்றி கட்டிட உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது அவசியம். லிப்டுக்கான உரிமம் பெறுவதுடன் அதன் வருடாந்திர பராமரிப்பு பணிகளையும் கச்சிதமாக மேற்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவிப்பது அவசியம். குறிப்பாக, லிப்டுகளுக்கு தனிப்பட்ட முறையில் பொருத்தப்பட்ட ஜெனரேட்டர் உதவி என்பது முக்கியம். அப்போதுதான் மின்சார தடை காரணமாக, இடையில் நின்றுவிட்டால் லிப்டு தொடர்ந்து இயங்குவதற்கு ஜெனரேட்டர்கள் மிகவும் அவசியம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
Related Tags :
Next Story