புதிய வீடு-மனைகளுக்கு தேவையான பட்டா பெயர் மாற்றம்


புதிய வீடு-மனைகளுக்கு தேவையான பட்டா பெயர் மாற்றம்
x
தினத்தந்தி 10 May 2019 10:30 PM GMT (Updated: 10 May 2019 3:31 PM GMT)

வீடு-மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கான பத்திர பதிவு முடிந்த பிறகு அவற்றிற்குரிய பட்டாவிலும் பெயர் மாற்றம் செய்வதற்கான படிவம் பத்திரப் பதிவுத்துறை மூலம் வருவாய்த் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

பெருநகரம் அல்லது புறநகர் பகுதிகளில் வீடு, மனை வாங்கும் அனைவருமே அவற்றின் வருவாய் ஆவணமான பட்டாவில் பெயர் மாற்றம் அல்லது உட்பிரிவு பட்டா மாற்றம் செய்து கொள்வதில்லை. குறிப்பாக, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் புதிதாக உருவாகும் மனைகளை வாங்குவோர், முறையாக விண்ணப்பித்து, பட்டா அல்லது உட்பிரிவு பட்டா வாங்க வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நிலங்கள் வருவாய்த்துறை ஆவணங்களில் அதன் பழைய நிலையிலேயே இருப்பதாக கணக்கிடப்பட்டு, அப்பகுதியின் வளர்ச்சி திட்டங்களை வருவாய் நிர்வாக ரீதியாக இறுதி செய்வதில் சிக்கல் ஏற்படும். முறையாக உட்பிரிவு பட்டா அளிக்கப்பட்டு இருந்தால் குடியிருப்பு மனைக்கான வரி மட்டும் விதிக்கப்படும்.

வருவாய்த்துறையின் உறுதி ஆவணம்

குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள மனை அல்லது நிலத்தை வாங்குபவர் பெயருக்கு பதிவாகும் கிரையப்பத்திரத்தில் உள்ள நிலத்தின் அளவுகளுக்கு சட்ட ரீதியான உறுதித் தன்மை இருக்காது. பத்திரத்தில் இருக்கும் நில அளவுகள் குறித்து சர்ச்சை ஏற்படும் நிலையில், அது குறித்து வருவாய்த் துறையின் சான்றுதான் இறுதியானதாகக் கொள்ளப்படும். அந்த மனை சர்வேயர்களால் அளக்கப்பட்டு, பட்டா அல்லது உட்பிரிவு பட்டா அளிக்கப்படும் நிலையில்தான் மனையின் அளவுகளுக்கு சட்ட ரீதியான உறுதித்தன்மை கிடைக்கும். உட்பிரிவு செய்யப்பட்ட பட்டாவுக்கான சிட்டா, பதிவேடு, நிலவரி படம் ஆகியவற்றிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பது முக்கியம்.

பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம்

அதன் அடிப்படையில் வீடு-மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கான பத்திர பதிவு முடிந்த பிறகு அவற்றிற்குரிய பட்டாவிலும் பெயர் மாற்றம் செய்வதற்கான படிவம் பத்திரப் பதிவுத்துறை மூலம் வருவாய்த் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டா பெயர் மாறுதல் படிவம் (படிவம்-6) அனுப்பும் வசதி கணினி மூலம் செய்யப்படுகிறது. அசல் பத்திரத்தை திரும்பப் பெறும்போது, அதற்காக சார்-பதிவாளரால் கையொப்பமிட்ட ஒப்புகை சீட்டு அளிக்கப்படும். அதில் வருவாய்த்துறைக்கு அளிக்கப்பட்ட விண்ணப்ப எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த எண்ணை http:// www.eservices.tn.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று Know your applicaion Status என்ற பகுதியில் பதிவு செய்து பட்டா நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், செல்போன் மூலமாக AMMA eservice of land records என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் விண்ணப்ப எண்ணை உள்ளடு செய்தும் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பட்டா உட்பிரிவு கட்டணம்

பத்திர பதிவின்போது உட்பிரிவு தேவைப்படும் இனங்களுக்கு உட்பிரிவு கட்டணம் பதிவு துறையால் வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு பெறப்பட்ட கட்டண விவரங்கள் இணையவழி பட்டா மாறுதல் படிவத்துடன் வருவாய் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். பதிவு பணிகள் முடிவடைந்து அசல் ஆவணம் திரும்ப வழங்கப்படும் நாள் பற்றி பத்திரப்பதிவு சமயத்தில் வழங்கப்படும் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அன்றைய தேதியில் அசல் பத்திரங்களை திரும்ப பெற்றுக்கொள்ளும்போது பட்டா பெயர் மாற்றம் மேற்கொள்ள வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டதற்கான ஒப்புகை சீட்டை பத்திரதாரர்கள் தவறாமல் பெற்றுக்கொள்ளவேண்டும்.

Next Story