பத்திரப் பதிவுக்கு அவசியமான ஆவணங்கள்
சொத்துக்களின் உரிமை மாற்றத்திற்கான பத்திரப்பதிவு சமயத்தில் தாக்கல் செய்வதற்கு பல்வேறு ஆவணங்கள் மற்றும் சான்றுகளை சொத்து வாங்குபவர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அத்தகைய ஆவணங்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
* சொத்து விற்பவரால் எழுதிக் கொடுக்கப்பட்ட அசல் ஆவணம்
* பட்டா மாற்றம் செய்வதற்கான விண்ணப்பம் மற்றும் அதற்கான நீதிமன்ற வில்லை
* சொத்தில் கட்டிடம் இருப்பின் பூர்த்தி செய்யப்பட்ட ‘வி’ படிவம்
* எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதிப் பெறுபவர் ஆகியோரது புகைப்பட அடையாள அடையின் ஒரிஜினல் மற்றும் நகல்கள்
* அதிகாரப் பத்திரம் என்றால் சாட்சிகளின் புகைப்பட அடையாள அட்டைக்கான ஒரிஜினல் மற்றும் நகல்களும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
* ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் ஆகிய ஐந்து வகை அடையாள அட்டைகள் மட்டும் ஏற்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.
* சொத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ள நிலையில் எழுதிப் பெறுபவர் மற்றும் எழுதிக் கொடுப்பவர் ஆகியோரது ‘பான் கார்டு’ தாக்கல் செய்யப்பட வேண்டும். ‘பான் கார்டு’ இல்லாதவர்கள் அதற்குரிய படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
* சரியான அல்லது குறைவான முத்திரைத் தீர்வையை ரொக்கம் அல்லது டிமாண்டு டிராப்டு-ஆக செலுத்தப்படும் நிலையில், இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 41-ன் கீழ் அதற்கான விண்ணப்பத்துடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
* சந்தை மதிப்புக்கு குறைவான மதிப்பில் ஆவணம் தாக்கல் செய்யும் நிலையில் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47கி(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி அசல் ஆவணத்துடன் பதிவு அஞ்சலில் அனுப்ப ஏதுவாக சுய முகவரி இடப்பட்ட மூன்று உறைகளை உரிய தபால் தலையுடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
* ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து 20 சென்டிற்கு கீழ் உள்ள நிலையில் விவசாய நிலம் மனையாக மாற வாய்ப்புள்ளதாக சார்பதிவாளர் கருதும் பட்சத்தில் அசல் ஆவணத்துடன் சொத்தினை அடையாளம் காண்பிக்க ஏதுவாக FMB மற்றும் To-po வரைபடமும் தாக்கல் செய்யபட வேண்டும்.
* அரசு நிலம், இந்து அறநிலையத்துறை, வக்பு வாரியம் அல்லது இதர பதிவு செய்ய தடை கொண்ட சொத்து தொடர்பாக ஆவணம் தாக்கல் செய்யப்படும்போது, சம்பந்தப்பட்ட துறையின் தடையில்லாச் சான்று பெற்று தாக்கல் செய்யப்பட வேண்டும்.
* சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட சொத்துக்களை அந்தந்த சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யலாம் அல்லது அந்த சார்பதிவாளர் எந்த மாவட்டப் பதிவாளரின் கீழ் பணியாற்றுகிறாரோ, அந்த மாவட்டப் பதிவாளரிடம் பதிவு ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.
Related Tags :
Next Story