தண்ணீர் சேமிப்புக்கு ஏற்ற சிக்கன நடவடிக்கைகள்
நகரமயமாக்கல் காரணமாக அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் வருடாந்திர மழைப்பொழிவு குறைவு
அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் வருடாந்திர மழைப்பொழிவு குறைவு ஆகிய காரணங்களால் சமீப காலங்களில் நகர்ப்புறங்களில் பெருமளவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மிகவும் ஆழமாக சென்றுவிட்ட நிலையில், பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் லாரிகளை எதிர்பார்க்கும் நிலை பெருநகரங்களில் ஏற்பட்டுள்ளது. நீர் வளத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பல தனிநபர்களும், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுக்களும், அழிந்து கொண்டிருக்கும் நீர் ஆதாரங்களை மீட்பதற்கான பல்வேறு வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர். சென்னை போன்ற நகர்ப்புறங்களின் நிலத்தடி நீரை ரீ-சார்ஜ் செய்யும் முயற்சிகளிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, பழைய கிணறு அல்லது போர்வெல் ஆகியவற்றில் மழை நீர் சேகரிப்பு முறை உள்ளிட்ட தண்ணீர் சேகரிப்பு யுக்திகளை செயல்படுத்த முனைந்துள்ளார்கள்.
மேற்சொன்ன விஷயங்களின் அடிப்படையில், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள ஆர்.ஓ பில்டர்களில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படும்போது, அதிகமாக தண்ணீர் வெளியேறுவது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியேறும் அதிகப்படியான தண்ணீரை இதர உபயோகங்களுக்கு பயன்படுத்தும் முயற்சி சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் ஆ.ஓ மூலம் வெளிப்படும் தண்ணீரை சேகரித்து, வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு சின்ன டிரம்மில் நிரப்பி வைக்கின்றனர். பின்னர், அந்த தண்ணீர் பெரிய டிரம்மில் சேகரிக்கப்பட்டு, காரை சுத்தப்படுத்துதல், பார்க்கிங் பகுதியை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலம் குடியிருப்பு பகுதியில் தினமும் 500 லிட்டர் வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
மேலும், குடியிருப்புகளில் உள்ள தண்ணீர் குழாய்களில் நீரின் வேகத்தை குறைக்கக்கூடிய சாதனமும் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம், ஒரு நிமிடத்திற்கு ஐந்து முதல் ஆறு லிட்டர் வரையில் தண்ணீரை வெளியேற்றும் குழாய்கள், சாதனங்கள் பொருத்தப்பட்ட பின்னர் ஒரு நிமிடத்திற்கு மூன்று லிட்டர் தண்ணீரை மட்டும் வெளியேற்றுவதாக தெரிய வந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மூலம் தினமும் கிட்டத்தட்ட 500 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இத்தகைய சிக்கன நடவடிக்கைகள் மூலம் சேமிக்கப்படும் தண்ணீர், கூடுதல் பயன்பாட்டுக்கு உதவும் என்ற விஷயம் மனதில் கொள்ள வேண்டியது இன்றைய சூழலில் அவசியம்.
Related Tags :
Next Story