வீட்டு உபயோகப் பொருட்களை தாமாக இயங்க வைக்கும் மென்பொருள்


வீட்டு உபயோகப் பொருட்களை தாமாக இயங்க வைக்கும் மென்பொருள்
x
தினத்தந்தி 1 Jun 2019 9:55 AM IST (Updated: 1 Jun 2019 9:55 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களை மேலைநாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

நமது நாட்டிலும் அவற்றில் பல வகைகள் தற்போது அறிமுகமாகி இருக்கின்றன. அதாவது, போனில் கட்டளையிடுவதன் மூலம் வீட்டுக் கதவை தாமாக திறக்க வைக்கலாம். வீட்டுக்கு வெளியிலிருந்து குறிப்பிட்ட அறையை குளிர்ச்சியாக மாற்ற ஏ.சி-யை இயக்கலாம். காபி மேக்கரில் டிகாக்‌ஷன் போடுவது, வாஷிங் மெஷினில் துணிகளை துவைப்பது, உள்ளே நுழையும்போது தாமாக ஒளிரும் விளக்குகள், ஆள் நடமாட்டத்தை கண்காணித்து அதற்கு ஏற்ப வீட்டை சரி செய்து கொள்ளும் சென்சார் அமைப்புகள் போன்ற பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இன்றைய காலகட்டத்தில் சாத்தியமே.

அதிநவீன தொழில்நுட்பம்

பல ஆண்டுகளாக மேலை நாடுகளின் பயன்பாட்டில் இருந்து வரும் இவ்வகை தொழில்நுட்ப வசதிகள் நம் நாட்டில் இப்பொழுதுதான் அறிமுகமாகி இருக்கின்றன. அதிநவீன மின் சாதனங்கள் இவ்வகை வசதிகள் கொண்டதாக இப்போது சந்தையில் கிடைக்கின்றன. நெட்வொர்க் சாப்ட்வேர் மூலம் மொபைல் செயலி வழியாக வீட்டில் உள்ள உபகரணங்களை இணைத்து தொலைவில் இருந்தபடியே செயல்பட வைக்கலாம். இந்த ‘ஹோம் ஆட்டோமேஷன்’ தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

செயல்படும் விதம்

‘ஹோம் ஆட்டோமேஷன்’ முறையில் வீடுகளில் உள்ள உபகரணங்களை தொலைவில் இருந்தபடியே இயக்க ரிசீவர், சென்சார் மற்றும் தக்க சாப்ட்வேர் ஆகிய 3 அம்சங்கள் தேவைப்படுகின்றன.

முதலாவதாக, போன் ரிசீவரில் ‘சிம்’ பொருத்தப்படும். அதன் மூலம் வீட்டில் உள்ள மின் சாதனங்கள் இணைக்கப்பட்டு, ‘இன்டர்நெட் டேட்டா’ மூலம் தொடர்பு ஏற்படுத்தப்படும்.

இரண்டாவதாக, மின்சார சாதனங்களில் சென்சார் அமைப்பு பொருத்தப்படும். அதன் மூலம் தகவல்கள் பெறப்பட்டு, கதவுகள், அறை விளக்குகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் தாமாக இயங்குவதற்கான ‘சிக்னல்’ பெற்று இயங்கும்.

மூன்றாவது அம்சம் மேற்கண்ட இரண்டையும் செயல்படுத்தும் மென்பொருள் என்ற ‘சாப்ட்வேர்’ ஆகும். தொலைவில் இருந்தபடியே உபகரணங்களை இயக்க உதவும் ‘சாப்ட்வேர்’ வகைகள் பெரும்பாலும் குரல் வழியாக இயங்கும்படியே உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பல உலக நாடுகளில் உள்ள நிறுவனங்கள், ‘மாஸ்டர் கன்ட்ரோல் சிஸ்டம்’ என்ற முறையில் வீட்டில் உள்ள அனைத்து உபகரணங்களையும் ஒரே இணைப்புக்குள் செயல்படும் வகையில் ‘சாப்ட்வேர்’ வகைகளை தயாரித்து அளிக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட ‘சாப்ட்வேர்’ என்ற சிக்கல் இதில் இருக்காது.

தொலைவில் இருந்தும் இயக்கலாம்

‘ஹோம் ஆட்டோமேஷன்’ தொழில்நுட்பத்தில் மொபைல் போன் மூலம் வீட்டு விளக்குகளை தொலைவில் இருந்தபடியே இயக்க முடியும். சென்சார் பொருத்தப்பட்ட கதவுகள் அல்லது கேட்டுகளை எளிதாக மூடலாம் அல்லது திறக்கலாம். இணைய வசதி மூலம் செயல்படும் சென்சார் பொருத்திய கதவுகள் ஆட்டோமேஷன் வசதிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. அதாவது, ஆட்டோமேட்டிக் நவீன பூட்டுகளை பொருத்துவதன் மூலம், வீட்டை யார் திறந்தாலும் வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுக்கும்படி உள்ள செட்டிங் அமைப்பு அதன் சிறப்பாகும். இணைய வசதி மூலம் இணைக்கப்பட்ட ரிமோட் மூலம் இயங்கும் பிளக் பாயின்டுகளில் தொடர்புள்ள எந்த மின் சாதனத்தையும் எளிதாக ஆன் அல்லது ஆப் செய்யலாம். மேலும், செல்போன் புளூடூத் மூலம் கதவின் பூட்டுகளை திறக்க செய்யலாம். அத்தகைய வசதிகளை ஒன்றாக இணைத்து ஆட்டோமேஷன் செய்து தரும் தனியார் நிறுவனங்கள் பெருநகரங்களில் உள்ளன.

குரல் வழி கட்டளைகள்

வெயில் காலங்களில் வீட்டில் உள்ள குறிப்பிட்ட அறையின் வெப்பநிலை எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்பதை, வீட்டுக்கு வெளியில் இருந்தே முடிவு செய்து அமைத்துக்கொள்ளலாம். அதாவது, போனில் இடப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப குளுகுளு ஏ.சி-கள் தக்க விதத்தில் இயங்கி அறையை குளிர்ச்சியாக மாற்றி விடும். ‘ஹோம் ஆட்டோமேஷன்’ மூலம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை போன் மூலம் பதிவு செய்து கொடுக்கும் அதிநவீன டி.வி வகைகள், இணைய வசதியில் இயங்கும் பிரிட்ஜ் வகைகள் ஆகியவை தற்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை எல்லாம் ஒன்றிணைத்து, செயல்பட வைக்கும் சென்ட்ரல் ஹப், அதற்கான மென்பொருள்கள் மற்றும் போன் ஆகியவையும் சந்தையில் கிடைக்கின்றன.

அடுக்குமாடி அல்லது வீடுகளின் மேல்மாடி தொட்டியில் நீரை நிரப்புவது, பின்னர் மின் மோட்டார் இயக்கத்தை நிறுத்துவது ஆகிய பணிகளை செய்யும் தானியங்கி நீரேற்று சாதனங்களும் ‘ஆட்டோமேஷன்’ மூலம் செயல்படுகின்றன. வீடுகள் முழுமைக்குமே இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மேலை நாடுகளில் மட்டும் இல்லாமல், நமது பகுதிகளிலும் இப்போது பரவி வருகிறது.


Next Story