குளிர்ச்சியை பரவச்செய்யும் மண் சுவர் வீடு


குளிர்ச்சியை   பரவச்செய்யும் மண்  சுவர்  வீடு
x
தினத்தந்தி 14 Jun 2019 10:30 PM GMT (Updated: 14 Jun 2019 11:11 AM GMT)

கட்டுமானத்துறையில் இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ள பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் கட்டமைப்புகளை விரைவாக அமைப்பதில் உதவுகின்றன.

ட்டுமானத்துறையில் இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ள பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் கட்டமைப்புகளை விரைவாக அமைப்பதில் உதவுகின்றன. நாகரிக உலகிற்கு அவை பொருத்தமாக அமைந்திருந்தாலும், ஒரு வகையில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் சிமெண்டு, கம்பி, மணல் இல்லாமல் கட்டமைப்புகளை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். நமது முன்னோர்கள் அத்தகைய தொழில்நுட்ப அணுகுமுறைகள் ஏதுவும் இல்லாமல்தான் வீடுகள், கோவில்கள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை அமைத்து, வாழ்ந்து வந்தனர்.

செம்மண் வீடுகள்

பழைய காலகட்டங்களில், நமது பகுதிகளில் ஓலைக்குடிசைகளும், செம்மண் வீடுகளும்தான் அதிகமாக இருந்தன. ஆங்காங்கே காரை வீடுகள் என்று சொல்லப்பட்ட சிமெண்டு வீடுகள் இருந்தன. காலப்போக்கில், கருங்கற்கள், செங்கல், சுண்ணாம்பு, மணல் ஆகியவை சேர்க்கப்பட்ட கலவையை கச்சிதமாக குழைத்து வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்தும் கான்கிரீட் கட்டுமானங்களாக உள்ளன. கான்கிரீட் இல்லாமல் சின்ன சுவர் அமைப்பதைக்கூட பொதுமக்கள் விரும்புவதில்லை. 

தற்சார்பு வீடுகள்

இருப்பினும், நமது பகுதிகளில் ஆங்காங்கே பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி, தற்சார்பு வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கட்டுமானங்களை வடிவமைப்பதில் இளம் கட்டுமானப் பொறியாளர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த முறைப்படி, கருங்கற்களால் அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, தளமட்டத்தில் செம்மண் நிரப்பி வலுவாக்கப்படுகிறது. அதன் பின்னர், அஸ்திவார கருங்கல் சுவர்மீது கான்கிரீட் ‘பீம்’ அமைத்து மண் சுவர் எழுப்பப்படும். அதாவது, சலிக்கப்பட்ட செம்மண், 5 சதவீதம் சிமெண்டு, போதிய அளவு தண்ணீர் ஆகியவற்றை நன்றாக கலந்த கலவை தயார் செய்யப்படும். 

சுவர் அமைய உள்ள பகுதியின் இருபுறமும் பலகைகளால் பெட்டி போன்ற தடுப்பு அமைத்து, அதற்குள் அந்த கலவை நிரப்பப்பட்டு, நன்றாக இறுகும்படி செய்யப்படும். ‘பில்லர்கள்’ எதுவும் இல்லாமல் முற்றிலும் மண் சுவராகவே இருக்கும். அதனால் வீட்டுக்குள் கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெது வெதுப்பாகவும் இருக்கும் என்பது அறியப்பட்டுள்ளது. அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் சமாளித்து நிற்கக்கூடிய இவ்வகை கட்டிட அமைப்புகளுக்கு சுவர் மேற்பூச்சு பணிகள் மற்றும் பெயிண்டு பூச்சு ஆகியவை அவசியமில்லை.

Next Story