மனை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய பட்டா விவரம்


மனை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய பட்டா விவரம்
x
தினத்தந்தி 3 Aug 2019 10:49 AM GMT (Updated: 3 Aug 2019 10:49 AM GMT)

புறநகர் பகுதிகளில் வீட்டுமனைகள் வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட மனைக்கான பட்டா விஷயத்தில் சற்று கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மனை வாங்குபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பஞ்சமி நிலம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

பஞ்சமி நிலம்

பஞ்சமி நிலம் அதாவது டி.சி நிலம் 0 (Depressed Class Land) என்பது நிலமற்ற ஏழை பட்டியல் பிரிவு மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக 1892-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளை நிலங்கள் ஆகும். அவர்களது ஆட்சிக் காலத்தில் இந்திய அரசின் வருவாய்த்துறை பதிவேடுகளில் உள்ள விளை நிலங்களில் பஞ்சமி நிலம் என்பதை தனியாகவும், மற்ற நில வகைகளை நத்தம் புறம்போக்கு, புறம்போக்கு, மானாவாரி, தரிசு, நீர்ப்பாசன சாகுபடி நிலம் என்றும் வகைப்படுத்தி வைக்கப்பட்டன.

சட்ட நடைமுறை

ஆங்கில அரசாங்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளித்த பஞ்சமி நிலங்களை ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களைத் தவிர வேறு யாரும் வாங்கக் கூடாது என்றும், அவ்வாறு வாங்கினால் அந்த விற்பனை செல்லாது என்ற கண்டிசன் இன்றும் சட்ட நடைமுறையில் உள்ளது. 1950-க்கு பின்னர் வினோபாவின் பூதான இயக்கத்தின் கீழ் நிறைய நிலங்கள் பட்டியல் இன மக்களுக்கு அரசாங்கம் மூலம் வழங்கப்பட்டது. அத்தகைய நிலங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளன.

பட்டாவில் உள்ள தகவல்கள்

பஞ்சமி நிலம் பற்றி அறிய அதன் பட்டா பற்றி அறிந்து கொள்வது முக்கியம். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. அதாவது, சம்பந்தப்பட்ட மனை அல்லது இடம் அமைந்துள்ள பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள பட்டா சம்பந்தப்பட்ட மேனுவல் அ-பதிவேடுகளை பார்வையிட்டு கண்டறியலாம். அதில், கண்டிசன் நிலம், கிரயம் தடை செய்யப்பட்ட நிலம், டி.சி நிலம் என்று குறிப்புகள் இருந்தால் எச்சரிக்கையாக செயல்படலாம்.

கூடுதல் கவனம்

இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட மனை உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆர்.எஸ்.எல்.ஆர் (ReSettlement Land Record - RSLR) ஆவணத்தை பெற்று கவனிக்க வேண்டும். அதில் டி.சி நிலம் (Depressed Class Land) என்ற குறிப்பு இருக்கும் பட்சத்தில் அது பஞ்சமி நிலம் என்பதை அறிந்து எச்சரிக்கையாக செயல்படலாம். ‘ரீ-செட்டில்மெண்டு லேண்டு ரிக்கார்டு’ (RSLR) என்பது இப்போது பயன்பாட்டில் உள்ள அ-பதிவேடான யு.டி.ஆர்-க்கு (Updating Registry Scheme UDR) முந்தைய பழைய கிராம கணக்கு ஆகும்.

நான்கு வித ஆவணங்கள்

நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் குறிப்பிட்ட மனை அல்லது நிலம் குறித்து சந்தேகம் எழும் நிலையில் பட்டா, சிட்டா, அடங்கல் அ-பதிவேடு மற்றும் RSLR ஆகிய ஆவணங்களை கவனிக்க வேண்டும். அதன் பின்னரே சம்பந்தப்பட்ட மனை அல்லது நிலத்தை வாங்குவது பற்றிய முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

Next Story