சென்னை பெருநகருக்கான பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள்
கடற்கரை நகரமான சென்னை சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை பாதிப்புகள், நில நடுக்கங்கள், பருவ கால வெள்ளங்கள், அண்மைக் காலத்தில் சுனாமி என பல இயற்கைச் சீற்றங்களை சந்தித்துள்ளது.
நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சி, முறையான பராமரிப்புகள் இல்லாத கட்டமைப்புகள் மற்றும் நீர்நிலைகளின் கரைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட வீடுகள் ஆகியவை சென்னையின் அடையாளங்களாக மாறி வருகின்றன.
அவை, பெருமழை, புயல் உள்ளிட்ட இதர இயற்கை சீற்றங்களின்போது பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகளாக அமைந்து விடுகின்றன. அவற்றை சமாளிக்கவும், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும் அரசு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. சென்னை பெருநகரப் பகுதியைப் பொறுத்தவரை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
* சென்னை பெருநகர்ப்பகுதி, நில நடுக்க மண்டலம், 3–ன் கீழ் வருகிறது. மொத்த சென்னை பெருநகர்ப் பகுதியும் இந்த மண்டலத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
* சென்னைப் பெருநகர்ப் பகுதி கடற்கரையிலிருந்து 20 கி.மீ தூரம் வரை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் பகுதியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. கடும் புயலுடனான சூறாவளி, வேகமான காற்று, உயர் அலைகளின் காரணமாகக் கடல் நீரால் ஏற்படும் வெள்ளம் ஆகியவற்றால் அப்பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.
* புது டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத்துறையால் அளிக்கப்பட்ட வெள்ள இடையூறுகளைக் காட்டும் வரைபடத்தில், வெள்ள அபாய மண்டலமாக தமிழ்நாட்டின் எந்தப்பகுதியும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும்,
உள்ளாட்சி அமைப்புப் பகுதிக்குள் உள்ள ஆறுகள், கால்வாய்கள் போன்ற முக்கிய வடிகால் அமைப்புகளுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளைப் பொறுத்து வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை வரைபடமாக காட்ட அரசு பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.
தக்க அனுமதி
சென்னைப் பெருநகர்ப் பகுதியில், கடும் புயல்களின்போது ஏற்படும் வெள்ள நீர்ப்பெருக்குக்கு உள்ளாகும் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் உள்ளன. சென்னைப் பெருநகரில் கண்டறியப்பட்ட புயல் மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளைக் காட்டும் வரைபடம் முழுமைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட வளர்ச்சிக்கான தர நிலைகளுக்கு ஏற்பவும், பொதுப்பணித் துறையிடமிருந்து வெள்ளம் பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளுக்கான ஒப்புதலும் பெற்ற பிறகே அத்தகைய தாழ்வான பகுதிகளில் கட்டுமானங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சென்னை நகரின் பெரு மற்றும் குறு வடிகால் இணைப்புகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மழைநீர் வடிந்து செல்ல வழிவகுக்கிறது.
பேரிடர் மேலாண்மைக் கொள்கை
தமிழக அளவில் பேரிடர் மேலாண்மைக் கொள்கை 2004–2005 ஆண்டிலிருந்து நடப்பில் இருந்து வருகிறது. பேரிடர் வந்தபின், நிவாரணம் அளிப்பது, குடியிருப்புகளை வேறு இடத்திற்கு மாற்றுவது, மீண்டும் குடியிருப்புகளைக் கட்டித் தருவது ஆகியவற்றை விடவும், முன்னதாகவே தக்க நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் மக்களை பாதுகாப்பான இடத்தில் குடி அமர்த்துவது ஆகியவை இக்கொள்கையின் நோக்கமாக உள்ளது.
கட்டுமானங்களுக்கான வரையறைகள்
சென்னைப் பெருநகரில் கட்டிடங்களை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளில், நில உபயோகம், இடம், உயரம், தளங்கள் எண்ணிக்கை, கட்டிட அளவுகள், அவற்றைச் சுற்றியுள்ள இடைவெளிகள், நிலம் மற்றும் கட்டிடப் பயன்பாடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. உள்ளாட்சி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் கட்டிட விதிகளில், கடைக்கால், தரைத்தள உயரம், சுவர்கள், தளங்கள், அறைகள், நில அளவையாளருக்கு உரிமம் அளித்தல், கட்டிடம் கட்டும் தருவாயில் பல நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய கள ஆய்வுகள், கட்டிடங்களின் எடை பற்றிய வரையறைகள், காற்றழுத்தத்தால் கட்டிடங்களில் ஏற்படும் சுமை போன்றவை வரையறுக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story