உலக நாடுகளில் உள்ள வித்தியாசமான வீடுகள்


உலக நாடுகளில் உள்ள வித்தியாசமான வீடுகள்
x
தினத்தந்தி 25 Jan 2020 6:34 PM IST (Updated: 25 Jan 2020 6:34 PM IST)
t-max-icont-min-icon

உறைவிடம் என்ற வீடுகள் பாதுகாப்பான வாழ்க்கைக்கு அடிப்படையான கட்டமைப்பு ஆகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுகம் அவற்றின் வடிவமைப்பில் புதுமைகளை செய்து வந்திருக்கிறது.

சமவெளிகள், மலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப குடில் அல்லது வீடுகளை கட்டமைப்பது இன்று வரை வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் உலக நாடுகளில் பலவற்றிலும் அதிநவீன வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில வித்தியாசமான வீடுகளை இங்கே காணலாம்.  

நடு ஆற்றில் ஒரு வீடு  

ஐரோப்பிய நாடான செர்பியாவின் மேற்கு பகுதியில் உள்ள ‘ட்ரினா’ ஆற்றின் நடுவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. அதனால் ஆற்றின் பெயரை குறிக்கும் வகையில் ‘ட்ரினா ஹவுஸ்’ என்றே வீட்டுக்கு பெயர் வைத்துள்ளார்கள். குளிர் நாடான செர்பியாவில் உள்ள ‘ட்ரினா’ நதிக்கரையில் வெயில் காலத்தில் ஒய்வெடுக்கும் இளைஞர்கள் கண்ணில் நதியின் மத்தியில் அமைந்துள்ள பெரிய பாறை கண்ணில் பட்டது. அதில் ஒய்வெடுக்க சென்றவர்களுக்கு ஒரு குடிலை அமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. படகுகள் மூலம் மரப்பலகைகளை எடுத்து சென்று வீட்டை அமைத்து விட்டனர். 1968-ம் ஆண்டு வெயில் காலத்தில், அந்த பாறையில் ஒரு வீட்டை அந்த இளைஞர்கள் குழு கட்டி முடித்தது. படத்தில் நாம் பார்ப்பது 6-வது வீடாகும். அதாவது, கடந்த 50 ஆண்டுகளில் அவ்வப்போது ஆற்றில் ஏற்படும் வெள்ளம் காரணமாக 5 வீடுகள் அடித்துச்செல்லப்பட்டு விட்டன. அதன் பின்னர் சிறிது காலத்திற்குள், அதே குழுவினர் மீண்டும் இன்னொரு வீடு அமைப்பது வழக்கமாகி விட்டது. ‘நேஷனல் ஜியாக்ரபிக்’ இதழில் இந்த வீட்டின் படம் வெளியானதிலிருந்து, உலக அளவில் பிரபலமாகி விட்டது. செர்பியாவுக்கு சுற்றுலா செல்பவர்களை கவரும் இடமாகவும் மாறிவிட்டது. 



பூமி அதிர்ச்சி பாதிக்காத கால்பந்து வீடு   

ஜப்பான் நாட்டில் அடிக்கடி பூமி அதிர்ச்சி ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஜப்பானிய மக்கள் பூகம்பத்துடன் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பழகி விட்டார்கள். உலக அளவில் ஜப்பானில்தான் கட்டுமான விதிமுறைகள் மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆழமான அஸ்திவாரம் மற்றும் அதில் அதிர்வுகளை சமப்படுத்தும் ‘ஷாக் அப்சார்பர்’ அமைப்புகள் கொண்டதாக அனைத்து கட்டிடங்களும் கட்டப்படுகின்றன. கடும் நில நடுக்கத்துக்கு ஆளாகும் பகுதிகளில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கால்பந்து வடிவிலான நவீன வீடுகள் ஜப்பானில் அறிமுகமாகியுள்ளன. பாலிமர் அடிப்படையிலான ‘பாலியூரிதேன்’ கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இவ்வகை வீடுகள் ‘பாரியர்’ என்று அழைக்கப்படுகின்றன. 32 பக்கங்கள் கொண்ட குடில் போன்ற இந்த அமைப்பு தண்ணீரில் மிதக்கக்கூடியது. அதனால், பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்புக்கு ஏற்றது என்று அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 3 பேர் தங்கும் வகையில் உள்ள இந்த குடிலை நிலத்தில் அல்லது தண்ணீரில் வைத்தும் பயன்படுத்த இயலும். 



கூடவே வரும் ‘மொபைல்’ வீடு       

அமெரிக்க நாட்டின் கொலராடோ மாகாணத்தில் அமைந்துள்ள ‘பவுல்டர்’ பெருநகரில் இவ்வகை வீடுகளை காண இயலும். ‘டம்பிள்வீட் பிராண்டு சைப்ரஸ் 24’ என்று பெயரிடப்பட்ட இந்த வீடுகள் 1000 சதுரடி முதல் 100 சதுரடி வரை அளவுகள் கொண்டதாக கிடைக்கின்றன. அமெரிக்கா போன்ற விஸ்தாரமான நிலப்பரப்பு கொண்ட நாடுகளில் எளிமையாக வாழ விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த வீடுகள் உள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். வீட்டு மனை, வங்கி கடன், பல ஆண்டுகள் மாதாந்திர தவணை போன்ற சிக்கல்கள் ஏதுவும் இந்த வீட்டுக்கு இல்லை. காரின் பின்னால் மாட்டிக்கொண்டு வேண்டிய பகுதிக்கு சென்று நிறுத்திக்கொள்ளலாம். சில நாட்கள் கழிந்ததும் இன்னொரு பகுதிக்கு சென்று விடலாம். இளம் வயதினர் மனதை வெகுவாக கவர்ந்த ‘மொபைல்’ வீடாக இருக்கிறது. சுற்றுலா செல்பவர்கள் அறை எடுத்து தங்க அலைய வேண்டிய அவசியமே கிடையாது. செல்லும் ஊருக்கு வீட்டை இழுத்து சென்று ஓரிடத்தில் நிறுத்தி விட்டு அதில் தங்கிக்கொள்ளலாம். 3 முதல் 5 பேர்கள் வரை எளிதாக தங்கும் வகையில் உள்ள இந்த வீட்டில் சமையல், படுக்கை, படிப்பு, பாத்ரும் போன்ற வசதிகள் உள்ளன. போகும் இடங்களில் சமையலுக்கான பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொண்டு எளிமையாக வாழ வேண்டியதுதான் என்று அதை பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



விமான வடிவ மாடி வீடு     

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஒரு சிறிய நாடு லெபனான் குடியரசு. அதன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ‘மிஜியாரா’ என்ற கிராமத்தில் இந்த விமான வடிவ வீடு அமைந்துள்ளது. மைக்கேல் சுலைமான் என்பவரால் 1975-ம் ஆண்டில் போயிங் A 380 ரக விமான வடிவத்தில் இந்த வீடு கட்டப்பட்டது. அவரது இளம் வயதில் விமானங்களின் மீது பெரும் ஈர்ப்பு கொண்டிருந்த நிலையில், பெரியவராக வளர்ந்த பின்னர் அவரது சொந்த வீட்டு கனவை இவ்விதம் நிறைவேற்றி கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு மாடிகள் கொண்ட இந்த வீடு அவரது குடும்பத்தினருக்கு கோடை காலத்தில் ஓய்வு இல்லமாக பயன்படுகிறது. ஒரு விமானத்தின் வடிமைப்பிலிருந்து எவ்விதம் மாற்றமும் இல்லாமல், அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் இரு புறமும் உள்ள பக்கவாட்டு பகுதியில் 60 ஜன்னல்கள் உள்ளன. இரண்டு நுழைவாசல்கள் கொண்ட இந்த வீட்டுக்குள் நுழைய, விமான படிக்கட்டுகள் போன்ற படிகளில் ஏறிச்செல்லவேண்டும். கதவுகளும் விமானத்தில் உள்ளது போன்று ‘ஸ்லைடிங் டோர்’ அமைப்பாக உள்ளது. 

Next Story