‘கரையான் தாக்குதல்.. கவனம் அவசியம்..’
கட்டி முடித்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன கட்டமைப்புகள், விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள கட்டிடங்கள் ஆகியவை கரையான்களால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பல்வேறு காரணங்களால் வீடுகளுக்குள் புகுந்த கரையான்கள் மரத்தால் செய்யப்பட்ட நிலைகள், கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை அரித்து விடுகின்றன. பழைய வீடுகளில் ஏற்பட்ட கரையான் தாக்குதல்களை கட்டுப்படுத்த, தரைமட்ட அளவில் உள்ள சுவர்களில் துளையிட்டு கரையான் தடுப்பு ரசாயனங்களை அதில் செலுத்தும் முறைகளை தனியார் நிறுவனங்கள் ( Pest Control) செய்து தருகின்றன. அதை முயற்சி செய்யலாம் அல்லது கட்டுமான பொறியாளர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பல ஆண்டுகள் வயது கொண்ட வீடுகளை வாங்குபவர்கள் கரையான்கள் உள்ளிட்ட பூச்சி தொல்லை பற்றி கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக, புதிய அடுக்குமாடிகள் அமைப்பதற்கு முன்பாக தகுந்த முறைகளில் கரையான் தடுப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டியது அவசியம்.
நிலத்தின் அடியில் நீண்ட காலமாக கரையான்கள் இருந்து வரும் நிலையில், மழைக்காலம் அல்லது குளிர் காலத்தில் வீட்டின் சுவர்களில் நீள வாக்கில் ஈரமான மண் அடுக்கை ஏற்படுத்தி அதன் உட்புறம் வழியாக மரத்தால் செய்யப்பட்ட பொருட்களை தேடிச்செல்கின்றன. புதிய வீட்டுக்கான கட்டுமான பணிகளின்போது, மனையிலுள்ள மரம், செடி, கொடிகளை முற்றிலும் அகற்றிவிட வேண்டும். மரங்களை அவற்றின் மேற்பகுதிகளை மட்டுமே வெட்டி அகற்றி விட்டு, அதன் வேர்ப்பகுதியை அப்படியே விட்டுவிடுவது சரியான முறையல்ல. ஏனென்றால், நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள மரத்தின் வேர்ப்பகுதிகள் உலர்ந்து விடும்போது, அவற்றில் கரையான்கள் சுலபமாக குடியேறி விடுகின்றன. அங்கிருந்து வீடுகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள மரத்தாலான பொருட்களை அவை எளிதாக உணர்ந்து தேடி வருகின்றன.
குறிப்பாக, வீட்டை சுற்றிலும் தோட்டம் அமைத்து அவற்றில் செம்மண்ணை நிரப்பும் நிலையிலும் கரையான்களின் தாக்குதல் ஏற்படலாம். மேலும், அஸ்திவார குழிகள் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் முளைக்குச்சிகள் நிலத்திலேயே விடப்பட்டாலும் அவற்றில் கரையான்கள் குடியேறும் வாய்ப்பும் இருக்கிறது. மனைக்கு அருகில் அமைந்துள்ள நிலங்களிலிருந்தும்கூட கரையான்கள் வருவதற்கான வாய் ப்பு உள்ளது. அதனால், கட்டுமான பணிகளின்போதே ‘பெஸ்ட் கண்ட்ரோல்’ (Pest Control) வல்லுனர்களின் பரிந்துரையின் பேரில் தக்க ரசாயன பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
Related Tags :
Next Story