வீடு-மனை வாங்குபவர்களுக்கு அவசியமான ஆவணங்கள்


வீடு-மனை வாங்குபவர்களுக்கு அவசியமான ஆவணங்கள்
x
தினத்தந்தி 23 Feb 2021 10:45 PM GMT (Updated: 2021-02-20T19:19:02+05:30)

வீடு அல்லது மனை ஆகியவற்றின் அடிப்படை ஆதார ஆவணங்கள் உள்ளிட்ட இதர விஷயங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம் என்று ரியல் எஸ்டேட் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நகர் பகுதி அல்லது புற நகரில் அமைந்துள்ள இடத்தில் வாங்கப்படும் வீடு அல்லது மனை ஆகியவற்றின் அடிப்படை ஆதார ஆவணங்கள் உள்ளிட்ட இதர விஷயங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம் என்று ரியல் எஸ்டேட் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றை கவனத்தில் கொள்வதுடன், பரிசோதித்து அறிவதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்க இயலும். அத்தகைய தகவல்களை இங்கே காணலாம்.

* இடம் அல்லது வீட்டு மனைக்கு ஆதாரமாக 3 அடிப்படை ஆவணங்கள் உள்ளன. அதாவது, நிலத்தின் தாய் பத்திரம், பிளாட் புரமோட்டரிடம் உள்ள ஆவணம் மற்றும் கட்டுமான நிறுவனத்துக்கும், வீட்டு மனையின் உரிமையாளருக்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்த பத்திரம்.

* மனை உரிமையாளருக்கு அதன் மீதுள்ள உரிமையை குறிக்கும் சட்ட ரீதியான பதிவேடு பட்டா ஆகும். பல நிலைகளில் அவசியம் கொண்ட பட்டாவை முதலில் கவனிக்கவேண்டும்.

* நிலத்தின் அசல் பத்திரத்தில் ஏதேனும் உயில் சம்பந்தம் இருப்பின் அது குறித்த நகல்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், மற்றொருவருக்கு மனையின் முந்தைய உரிமையாளரால் பாத்தியதை ஏதும் தரப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும்.

* மனையின் உரிமை உயிலின் மூலம் பெறப்பட்டதாக இருப்பின், அதன் முந்தைய நிலை மற்றும் எவ்வகையில் அது உரிமையாளரின் உயிலாக மாறியது என்பதற்கான முறையான சான்று அவசியம்.

* மனையின் மொத்த நிலப்பகுதி வேறொரு உரிமையாளரிடம் இருந்து பிரிக்கப்பட்ட பகுதியாக இருந்தால் அதற்கான பிரிவு ஒப்பந்தத்தின் நிலை, நில உரிமையாளரால் வேறு யாருக்காவது அந்த உரிமை தரப்பட்டுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும்.

* மனையை வேறொருவரிடம் இருந்து புரமோட்டர் வாங்கியிருக்கும் நிலையில் அதற்கான ஒப்பந்தம் மற்றும் நகல் சோதனை ஆகியவற்றோடு, தாய் பத்திரத்தின் ஒரிஜினல் உள்ளிட்ட பிற சான்றளிக்கப்பட்ட நகல்களையும் சரிபார்ப்பது அவசியம்.

* வீடு அல்லது மனையின்மீது 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ் சொத்து வாங்கும் நாள் வரை பெறப்படுவதோடு, மனைக்கான பட்டா விற்பவரிடமிருந்து மனையை வாங்குபவர் பெயருக்கு மாற்றல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* மனை நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்டுள்ளதா அல்லது தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக அரசு அனுமதி பெற்ற பகுதியா என்பது போன்ற தகவல்களை தக்க அரசு அலுவலகம் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

* குடியிருப்புகள் அமைப்பதற்கு ஏற்ப சி.எம்.டி.ஏ அப்ரூவல் சர்வே எண் மற்றும் ஏற்கனவே மனை நிலத்தில் ஒருவர் குடியிருந்தால் அவருக்கும் நில உரிமையாளருக்கும் உள்ள ஒப்பந்த நிலை ஆகியவற்றை கவனிக்கவேண்டும்.

* மனைப்பகுதியில் அரசின் கையகப்படுத்தும் திட்டம் ஏதேனும் செயல்படுத்தப்பட உள்ளதா மற்றும் கட்டுமானத் திட்டம் மற்றும் கட்டுமான ‘பெர்மிட்’ ஆகியவை பெறப்பட்டுள்ளதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி மூலம் பெறப்பட்ட கட்டுமான பணி நிறைவு சான்றிதழ், சென்னை மாநகராட்சி சான்றிதழ் மற்றும் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அளித்துள்ள அனைத்து ரசீதுகளையும் பெற்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

Next Story