அழகான கனவு.. ஆரோக்கியமான வீடு..


அழகான கனவு.. ஆரோக்கியமான வீடு..
x
தினத்தந்தி 21 Feb 2021 3:50 PM GMT (Updated: 21 Feb 2021 3:50 PM GMT)

உலகில் மனிதர்களுக்கு அமைதியையும், ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தருவது அவர்களது வீடுதான்.

வீடுகள் மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றிருப்பதால், ஆரோக்கியம் தரும் விதத்தில் வீடுகளை சிறப்பாக வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்ற புதிய சிந்தனை மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. விசாலமான, காற்றோட்டமான, மரங்கள் அடர்ந்த சூழலில் வீட்டை கட்டவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

முற்காலத்தில் கைகளால் மண்ணைப் பிசைந்து சுவரை எழுப்பி, ஓலை வேய்ந்த கூரையை உருவாக்கி குடிசை வீடுகளை அமைத்தார்கள். தரையை சாணத்தால் மெழுகினார்கள். பின்பு மண்ணை குழைத்து அச்சுகள் மூலம் மண் கட்டைகளை உருவாக்கி அதனால் வீட்டை கட்டினார்கள். ஓலைக்கு பதிலாக மண்ணில் செய்த ஓடுகளை வேய்ந்தனர். சுவ ரும், கூரையும் மண்களால் அமைக்கப்பட்டதால் வீடு குளிர்ச்சி நிறைந்ததாக இருந்தது. இப்போது சிமெண்டின் பயன்பாடு சுவரிலும், கூரையிலும் அதிகமாக இருப்பதால் வீடு உஷ்ணம் நிறைந்ததாக மாறிவிட்டது.

மண், இயற்கை வழங்கும் பொக்கிஷமாகும். அதற்கு கிருமிகளை ஒழிக்கும் தன்மையும், அலர்ஜியை தடுக்கும் ஆற்றலும் உண்டு. மண் சுவரில் கண்களுக்கு தெரியாத நுண்ணிய ஓட்டைகள் இருக்கும். அதன் மூலம் காற்று கடந்து செல்லும். ஆகவே மண் வீடுகள் குளிர்ச்சி தந்தன. சிமெண்ட் கட்டுமானங்களும், சிமெண்ட் பூச்சுகளும் குளிர்ச்சிக்கு பதிலாக சூட்டினை தந்துகொண்டிருக்கின்றன. ‘இன்டர்லாக்’ செங்கற்கள் பயன்படுத்தி வீடு கட்டினால், செங்கற்களுக்கு இடையே சிமெண்ட் பூச்சு தேவையில்லை. மேல் பூச்சுவான ‘பிளாஸ்டிங்’ வேலைகளும் செய்யவேண்டியதில்லை. சாதாரண செங்கற்களால் கட்டினால், ‘பிளாஸ்டிங்’ செய்யா மலும் விட்டுவிடலாம்.

முன்பு தரையை சாணத்தால் மெழுகினார்கள். இப்போது அந்த முறை இல்லை என்பது மட்டுமல்ல, தரை மினுமினுப்பாக ஜொலிக்கவேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். அதனால் பளபளப்பான ‘டைல்ஸ்’களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். பளபளப்பான தரை பலவிதங்களில் ஆரோக்கிய சீர்கேட்டினை உருவாக்குகிறது.

வழுவழுப்பான டைல்ஸ்கள் பார்வை கோளாறை உருவாக்குவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐம்பது வயதைக்கடந்த பலருக்கு நடக்கும்போது ‘பேலன்ஸ்’ இல்லாத நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் வழுவழுப்பான தரையில் நடப்பது அவர்கள் வழுக்கி விழுந்து காயமடையும் சூழ்நிலையை உருவாக்குகிறது.

‘டைல்ஸ்’கள் குளிர்ச்சி நிறைந்ததாக இருப்பதால், வாத நோய்கள் கொண்டவர்களுக்கு அதில் நடப்பது சிரமமாகிவிடும். அவர்களுக்கு கால்களில் எரிச்சல் ஏற்படவும் டைல்ஸ்கள் காரணமாகிவிடுகின்றன. தரையில் மர பலகைகளை பதிப்பது ஆரோக்கியமானது. இல்லாவிட்டால் தரை ஒட்டினை பயன்படுத்தலாம். ‘ஆக்சைடு புளோரிங்’ செய்வதும் நல்லது. மார்பிள், கிரானைட் போன்ற இயற்கை கற்களும் சிறந்ததாகும்.

இப்போது பெரும்பாலானவர்கள் ‘ஆஸ்பெட்டாஸ்’ உபயோகித்து கூரை போடுவதில்லை. ஆஸ்பெட்டாஸ் கூரை கொண்ட வீட்டில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறப்படுவதால், கிட்டத்தட்ட அனைவருமே சிமெண்டால் உருவாக்கப்படும் ‘கான்கிரீட்’ அமைக்கிறார்கள். இது வீட்டிற்குள் அதிக உஷ்ணத்தை உருவாக்குவதால், ‘சீலிங்’ உயரத்தை அதிகரிக்கவேண்டும். மரத்தால் ஆன மாடியை உருவாக்கி அதன் மேல் ஓடு வேய்ந்த கூரையை அமைப்பது, ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மாடியின் தேவைக்கு பழைய மரங்களை பயன்படுத்தினால் போதுமானது.

வீட்டின் அறைகளுக்குள் காற்று நன்றாக வரவேண்டும். ஒரு ஜன்னல் வழியே உள்ளே புகும் காற்று, அதே அறையில் உள்ள இன்னொரு ஜன்னல் வழியாக வெளியேறும்விதத்தில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். ‘கிராஸ்வென்டிலேஷன்’ என்ற இந்த முறையில் அமைக்கப்படும் அறைகளுக்குள் காற்று அதிகமாக வருவதோடு, பூச்சி தொந்தரவுகளும் ஏற்படாமல் இருக்கும்.

பளிச்சென்ற வர்ணங்கள் பூசப்பட்ட வீடுகள் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். ஆனால் பெயிண்ட் வகைகளை கவனமாக தேர்ந்தெடுக்கவேண்டும். தடை செய்யப்பட்ட, ரசாயனங்கள் பெயிண்ட்டிங்கில் கலக்கப்பட்டிருக்கிறது. அவை ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கிவிடும். அடர்த்தியான நிறங்களை கொண்ட பெயிண்ட்களில் தான் அதிக விஷத்தன்மை இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுவதுபோல், ஆயுர்வேத மருந்துகள் கலந்த செங்கல்கள் மூலம் வீடுகட்டியும் ஆரோக்கியத்தை பேணலாம் என்பதை கண்டறிந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். திருவனந்தபுரம் பாலராமபுரத்தில் கைத்தறி நெசவாளர்கள் முன்னேற்ற சங்கம் அமைந்துள்ளது. ஆயுர்வேத மருத்துவ பொருட்களால் உடை தயாரித்த அவர்கள் ஆயுர்வேத செங்கலை வடிவமைத்துள்ளனர். மா, பலாமரவேர், தோல், இலை, இயற்கை வாசனை திரவியங்கள், தொட்டால்வாடி, ஆடாதோடை, கற்றாழை, ரத்த சந்தனம், அருகம்புல் போன்றவைகளை அரைத்து மண்ணுடன் கலந்து செங்கல் தயாரித்துள்ளனர். செங்கற்களுக்கு இடையில் பூசும் சாந்துக்கும் ஆயுர்வேத பொருட்களையே பயன்படுத்துவார்கள். ஆயுர்வேத டைல்ஸ் மற்றும் மேல் கூரை ஓடுகளையும் தயார் செய்கின்றனர். இவைகளை பயன்படுத்தி ஆரோக்கிய வீடுகள் தயாராகின்றன.

உணவில் இயற்கையை நோக்கித் திரும்பி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மக்கள், இப்போது வீடுகளையும் ஆரோக்கியமாக வடிவமைக்க முன்வந்திருக்கிறார்கள்.

Next Story