செயற்கை நுண்ணறிவு செயல்திறம் கொண்ட ‘லிப்டுகள்’


செயற்கை நுண்ணறிவு செயல்திறம் கொண்ட ‘லிப்டுகள்’
x
தினத்தந்தி 6 March 2021 11:56 AM IST (Updated: 6 March 2021 11:56 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமானத்துறையில் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் நன்மை, தீமை ஆகிய இரண்டு விளைவுகளையும் தமக்குள் கொண்டதாகவே இருந்து வருகிறது.

கட்டுமானத்துறையில் அறிமுகமாகும் புதிய கண்டுபிடிப்புகளில் கூடுதல் நன்மைகளும், குறைந்தபட்ச பாதிப்புகளும் கொண்டதாக இருப்பவை உலக அளவில் பிரபலமாகி வருகின்றன. அவற்றில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் என்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், ஆற்று மணலுக்கு மாற்று, செங்கலுக்கு மாற்று, கான்கிரீட்டுக்கு மாற்று என்று அடிப்படையான விஷயங்களில் அதிநவீன மாற்றங்களும் நடைமுறைக்கு வந்துள்ளன.

இன்றைய காலகட்டத்தில் கட்டமைப்புகளில் பொருத்தப்படும் ஒவ்வொரு உபகரணமும் அதிக துல்லியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டதாக இருக்க வேண்டும். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட உபகரணங்களால் பல நன்மைகள் இருக்கின்றன. மனித தவறுகளால் உருவாகும் பல சிக்கல்களை எளிதாக தவிர்த்து விடும்படி அதன் செயல்திட்டம் வரையறை செய்யப்பட்டுள்ளதாக அப்படிப்பட்ட உபகரணங்களின் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட வகையிலான தயாரிப்புகளில் குறிப்பிடத்தக்கவை, குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் லிப்டு மற்றும் எஸ்கலேட்டர் ஆகியவை. அவற்றின் இயக்கம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஐ.ஓ.டி (IOT) ஆகிய கணினி மயமாக்கப்பட்ட செயல்திட்டம் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. சர்வதேச சந்தையில் மற்றும் இந்திய சந்தைகளில் அவ்வகை தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பொதுவான மனித தவறுகள், இயந்திரங்களில் ஏற்படக்கூடிய பிழைகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் ஆகியவற்றை தவிர்க்க தவிர்க்க செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐ.ஓ.டி ஆகிய நவீன தொழில்நுட்பங்கள் மிகவும் அவசியமானது. மனிதர் முகங்களை நினைவில் கொள்வது, பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்களை கண்காணிப்பது, லிப்டில் ஏறியவர்கள் மாறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்புவது, குழந்தைகள் லிப்டுக்குள் தெரியாமல் நுழைவதை கண்காணிப்பது போன்ற பல விஷயங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படும்.

குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தினமும் தரைத்தளத்திலிருந்து 8-வது தளம் செல்கிறார் என்றால் செயற்கை நுண்ணறிவு அவரை அடையாளம் கண்டு கொள்ளும், அதனால் லிப்ட் பட்டன்களை அவர் அழுத்தும் முன்பே லிப்ட் தாமாக இயங்கி 8-வது தளத்திற்கு சென்று விடும். மேலும், மனிதர்களின் பயன்பாடுகள், கைரேகைகள், முகங்கள், வருகைகள் ஆகியவை டிஜிட்டல் பதிவுகளாக கிளவுடு சர்வரில் சேமிப்பாக வைக்கப்படும். அதில் லிப்டை பயன்படுத்தும் அனைவரது அடையாளங்களும் சேமிப்பாக இருப்பதால் வேண்டும்போது அவற்றை தரவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளலாம். 12 தளங்களுக்கும் மேலாக உள்ள குடியிருப்புகள் மற்றும் அதி உயர கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு புரோகிராமிங் சிஸ்டம் பொருத்தமானதாக இருக்கும் என்று அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்திய சந்தையில் கூடிய விரைவில் இந்த வகை லிப்டுகள் அறிமுகம் ஆகக்கூடும்.

Next Story