குடியிருப்பு பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் உயரமான கட்டமைப்புகள்


குடியிருப்பு பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் உயரமான கட்டமைப்புகள்
x
தினத்தந்தி 10 April 2021 11:40 AM GMT (Updated: 10 April 2021 11:40 AM GMT)

ரியல் எஸ்டேட் மதிப்பு சந்தை நிலவரம் பல்வேறு காரணங்களால் ஏற்றத்தாழ்வாக இருந்தாலும், நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கான விலை நிலவரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை.

சந்தை நிலவரப்படி நிலம் அல்லது மனை விலை அதிகரிக்கும்போது, குடியிருப்புத் தேவைகளை நிறைவேற்ற உயரமான கட்டிடங்கள்தான் வழி. இதை ‘வெர்ட்டிகல் எக்ஸ்பான்ஷன்’ என்று குறிப்பிடுவார்கள். இனிவரும் காலங்களில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் கிடைமட்ட அளவில் இல்லாமல் கட்டிடங்களின் செங்குத்தான வளர்ச்சியை சார்ந்து இருக்கும் என்பதை உலக நாடுகளில் செயல்படுத்தப்படும் கட்டுமானத்திட்டங்கள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த பல ஐரோப்பிய நாடுகள் அதி உயர கட்டிடங்களை அமைத்து இடப்பற்றாக்குறையை தீர்க்க முயற்சிக்கிறார்கள். பாலைவன நாடுகளான துபாய், கத்தார், தோகா, பக்ரைன் போன்ற வளைகுடா நாடுகளில் குறைந்தபட்சம் 60 மாடிகள் கொண்ட கட்டுமானங்கள்தான் அமைக்கப்படுகின்றன. சீனா, ரஷ்யா சிங்கப்பூர், ஜப்பான் போன்ற போன்ற நாடுகளில் 200, 300 மாடி கட்டிடங்கள்தான் அதிக அளவில் உருவாகி வருகின்றன. ஹாங்காங்கில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேல் உள்ள கட்டுமான திட்டங்கள் என்றால் அவை குறைந்தபட்சம் 65 மாடிகள் கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கும் குறைவான கட்டிடங்கள் அமைக்க அங்கே அனுமதி இல்லை என்று தெரிய வந்துள்ளது.

தமிழக அளவில் சென்னையில்தான் அதி உயர கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் அவை அதிகபட்சமாக 50 மாடி கட்டிடங்களாக அமைக்கப்பட்டன. தற்போது அரசு விதிமுறைகள், விமானத்துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் அனுமதியுடன் வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் கிட்டத்தட்ட 161 மீட்டர் (528 அடி) உயரமும், 45 மாடிகளும் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. உயரமான குடியிருப்பு என்றால் புகை, சுற்றுப்புற மாசு மற்றும் ஈ, கொசு போன்ற பூச்சித் தொல்லைகள் இருக்காது என்பது ”கவனிக்கத்தக்கது.

மத்திய தர மக்களின் வீட்டு பிரச்சினையை அவர்களது வாங்கும் சக்திக்கேற்ப வகையில் சமாளிக்க உயரமான குடியிருப்புகள் தான் தீர்வாக உள்ளது. நகர்ப்புறங்களில் ஒரு சதுர அடிக்கான கட்டுமான செலவு அதிகபட்சமாக ரூ.2500 இருக்கலாம். அதன் அடிப்படையில் சுமார் 750 சதுர அடி பிளாட் கட்டுமான செலவு சுமாராக ரூ.19 லட்சம் ஆகக்கூடும். அத்துடன், மனையின் சந்தை மதிப்பான சுமார் ரூ.37 லட்சத்தை கூட்டினால், ஒரு சதுர அடி விலை கிட்டத்தட்ட ரூ.7,500 என்ற மதிப்பில் இருக்கலாம். உயரமான கட்டிடம் என்றால் நிலத்தின் விலை, குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப பிரித்து கணக்கிடப்படும். அதனால் குடியிருப்பின் விலை குறையலாம். நகரின் மத்திய பகுதியில் பட்ஜெட்டுக்கு ஏற்ப வீடு வேண்டும் என்றால் உயரமான குடியிருப்புகள் தான் சரியான தேர்வு. பெரு நகரங்களின் குடியிருப்பு தேவைகளை பூர்த்தி செய்ய ‘வெர்டிக்கல் எக்ஸ்பான்ஷன்’ என்ற முறைதான் சரியான தீர்வு என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story