சிக்கன கட்டுமான பணிகளுக்கேற்ற ‘இன்டர்லாக் பிளாக்’


சிக்கன கட்டுமான பணிகளுக்கேற்ற ‘இன்டர்லாக் பிளாக்’
x
தினத்தந்தி 16 April 2021 5:21 PM GMT (Updated: 16 April 2021 5:21 PM GMT)

சொந்த வீடு கட்டுபவர்கள் கட்டுமானப் பணிகளை சிக்கனமான பட்ஜெட்டுக்குள் முடித்து விடவே விரும்புகிறார்கள்.

தற்போதைய கட்டுமான பொறியியல் துறையில் அறிமுகமாகியுள்ள பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் வழக்கத்தை விட குறைவான பட்ஜெட் மற்றும் கால அளவுக்குள் கட்டிடங்களை அமைப்பதை சாத்தியமாக்கியுள்ளன. ‘மிவன் டெக்னாலஜி’, சுவர்கள் மற்றும் தளம் கட்டுமானத்தை எளிதாக அமைக்க உதவும் ‘ரெடிமேடு’ தயாரிப்புகள், ரெடிமேடு ஸ்லாப்’ மற்றும் ‘தெர்மாகோல்’ முறையில் சுவரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுமான தொழில்நுட்பங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன.

மேற்குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களுக்கே பொருத்தமாக இருக்கும் என்பதுடன், 3 அல்லது 4 பேர் கொண்ட குடும்பத்தின் இரண்டு படுக்கையறை வீட்டுக்கு அவற்றை பயன்படுத்துவது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது. அதாவது, அனுபவம் பெற்ற பணியாளர்கள், கட்டிட உதிரி பாக தயாரிப்பாளர்கள் கிடைப்பது, அவற்றை பணியிடத்துக்கு கச்சிதமாக போக்குவரத்து மூலமாக கொண்டு சேர்க்க வேண்டிய முறைகள் உள்ளிட்ட பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகலில் உள்ள கட்டுனர்கள் மற்றும் பொறியாளர்கள் கட்டுமான பணிகளில் சில பிரத்யேகமான வழிமுறைகளை பயன்படுத்தி, வழக்கமான பட்ஜெட்டிலிருந்து குறிப்பிட்ட சதவிகிதம் செலவு குறைவான கட்டுமான பணிகளை செய்து தருவதாக தெரிய வந்துள்ளது. அதாவது, சுவர்களின் மேற்புறத்தில் சிமெண்டு கலவையிலான மேற்பூச்சு, பட்டி பார்ப்பது போன்ற பணிகளை தவிர்க்கும் வகையில் பிரத்யேக முறையில் தயாரிக்கப்பட்ட ‘இன்டர்லாக் பிளாக்’ மூலம் பணிகள் செய்யப்படுகின்றன. அவற்றின் மீது ‘மார்பிள்’, ‘கிரானைட்’ போன்ற ‘வால் டைல்ஸ்’ வகைகள் 
ஒட்டவேண்டிய அவசியமில்லை.

சுவர்களுக்கு ‘பிளாஸ்டரிங்’ என்ற சிமெண்டு மேற்பூச்சு செய்யாமல் விடுவது பழங்கால முறையாக இருந்து வந்தது. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ‘பிளாஸ்டரிங்’ பணிகள் செய்யப்படாத வீடுகளை யாரும் விரும்புவதில்லை. ஆனால், ‘இன்டர்லாக் பிளாக்’ மூலம் கட்டுமான பணிகள் செய்யப்படும்போது, சிமெண்டு, மணல் கலவை கொண்ட மேற்பூச்சு தேவைப்படுவதில்லை. அதனால், சிமெண்டு, மணல், தண்ணீர் ஆகியவற்றின் பயன்பாடு பெருமளவு தவிர்க்கப்படுகிறது.

மேலும், சுவர் கட்டுமான பணிகள் மற்றும் ‘பிளாஸ்டரிங்’ ஆகியவற்றுக்கான செலவுகள் குறைவதுடன், பட்டி பார்க்கும் பணிகளும் இல்லை. இவ்வகை சுவர்களுக்கு விரும்பிய வண்ணங்களில் ‘பெயிண்டிங்’ செய்து கொள்ளலாம். இந்த ‘இன்டர்லாக்’ செங்கலில் செம்மண் 80 சதவிகிதம், சுண்ணாம்பு 15 சதவிகிதம், குவாரி டஸ்ட் 5 சதவிகிதம் என்ற அளவில் கலக்கப்பட்டு, மூன்று வித அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. தக்க அழுத்தம் கொடுத்து, இயந்திரம் மூலம் தயார் செய்யப்படுகின்றன. அவை செங்கலை விட பல மடங்கு உறுதியாக இருப்பதுடன், கட்டுமான பணிகளையும் எளிதாக செய்ய 
ஏற்றவை. சுண்ணாம்பு கலந்திருப்பதால், வெளிப்புற வெப்பத்தை விட அறைகளின் உட்புற வெப்ப நிலையை கிட்டத்தட்ட 5 டிகிரி குறைவாக உணரப்படும். அதனால், வீடுகளுக்குள் குளிர்ச்சி நிலவும் என்று அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘இன்டர்லாக் பிளாக்’ முறையில் வீடுகளுக்கான சுவர்கள் கட்டமைப்பு தவிர, மற்ற அனைத்து பணிகளுக்கும் வழக்கமான மூலப்பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட மாற்று கட்டுமான யுக்திகள் மக்கள் மத்தியில் மெதுவாகவே பரவி வருகின்றன. கட்டுமான தொழில் நுட்ப வல்லுனர்கள் இது போன்ற மாற்று முறைகள் மற்றும் அவற்றின் தொழில் நுட்ப தகவல்களை பொது மக்களிடம் தெரிவித்தால் சிக்கனமான கட்டுமான முறைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

Next Story