போர்வெல் மோட்டார் பொருத்துவதில் நிபுணர் ஆலோசனை அவசியம்


போர்வெல் மோட்டார் பொருத்துவதில் நிபுணர் ஆலோசனை அவசியம்
x
தினத்தந்தி 9 July 2021 8:12 PM GMT (Updated: 9 July 2021 8:12 PM GMT)

வீடு கட்டுவதற்கு முன்னர், தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்படுகிறது.

பல இடங்களில் சுமார் 750 அடிகளுக்கும் மேலான ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டியதாக இருக்கிறது. போர்வெல் அமைந்துள்ள பகுதியின் பாறையை பொறுத்து சோடியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள் நீரில் கலந்திருக்கின்றன. அவற்றின் அளவு 300 முதல் 600 பி.பி.எம் (Parts Per Million) என்பதற்கும் அதிகமாக இருந்தால் தக்க முறையில் சுத்திகரிப்பு செய்தே கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

சென்னையை பொறுத்தவரை பல இடங்கள் ஏரி, குளங்களாக இருந்த பகுதிகள் என்பதால் பெரும்பாலும் 200 அடிகளுக்குள் நிலத்தடி நீர் கிடைத்து விடுகிறது. சுற்றுப்புற பகுதிகளில் பாறை அமைப்புக்கு ஏற்ப சற்று ஆழமாகவும் போர்வெல் அமைக்க வேண்டி இருக்கலாம். தனி வீடுகளுக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் அளவான 2 ஆயிரம் லிட்டர் முதல் 5 ஆயிரம் லிட்டர் தண்ணீரை போர்வெல் மூலம் எடுக்க ஒரு முனை மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் போதுமானது.

போர்வெல் மோட்டார்கள் ஜெட் பம்புகள், கம்ப்ரசர்கள் மற்றும் நீர் மூழ்கி மோட்டார்கள் ஆகிய மூன்று விதங்களில் கிடைக்கின்றன.

ஜெட் பம்புகள் என்பது உயர் அழுத்தத்தில் செலுத்தப்படும் நீரானது ஒரு ஜெட் வழியே வெளியேறும் போது உருவாகும் அழுத்த வேறுபாடு தண்ணீரை மேல்நோக்கி தள்ளி, நீரை வெளியேற்றுவதாகும். இந்த முறையில் மின் சிக்கனம் சாத்தியமில்லை என்பதுடன். அதிகபட்சம் 200 அடி ஆழம் வரை மட்டுமே சிறப்பாக செயல்படும். மேலும், அடிக்கடி பராமரிப்பு செய்ய வேண்டியதாக இருக்கும். இன்றும் கூட 100 அடிக்கும் குறைவான ஆழம் கொண்ட போர்வெல்களில் இவை இயங்கி வருகின்றன.

கம்ப்ரசர் பம்புகள் என்பவை அழுத்தப்பட்ட காற்று ஆழத்தில் உள்ள புட்வால்விற்கு சென்று வெளியேறும்போது நீர்க் குமிழிகளை உருவாக்குகின்றன. அதனால் நீரின் அடர்த்தி குறைந்து மேல்நோக்கி உயர் அழுத்தத்தில் வெளியேறும். இந்த முறையில் கிட்டத்தட்ட 300 அடிவரை 2 குதிரைத்திறன் மோட்டார் மூலம் கொண்டு தேவையான நீரை இறைக்கலாம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். கம்ப்ரசரில் உள்ள பிஸ்டன் தேய்மானம் அடையும் நிலையில், ஆயில் ரிங் பழுதாகி குடிக்கும் தண்ணீரில் ஆயில் கலந்து விடக்கூடும் என்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு அவசியம்.

நீர்மூழ்கி போர்வெல் பம்புகள் (Submersible Pumps) குறைந்த மின்சார செலவில் நீரை அதிகமாக இறைக்கின்றன. இவை, இரைச்சல் இல்லாமல் கிட்டத்தட்ட ஆயிரம் அடிக்கும் கீழிருந்து நீரை மேல்நோக்கி எடுத்து வருகின்றன. சரியான ஆழத்தில் செயல்படக்கூடிய நீர் மூழ்கி போர்வெல் மோட்டாரை தேர்வு செய்வதுடன், தகுந்த கிரேடு கொண்ட யு.பி.வி.சி குழாய்களை கச்சிதமாகவும், காற்று வால்வு மற்றும் என்.ஆர்.வி (Non Return Valve) என்ற ஒரு வழி வால்வு ஆகியவற்றையும் சரியாக பொருத்த வேண்டும். அப்போதுதான் இயங்கிய மோட்டார் நிற்கும்போது தண்ணீர், திரும்பி வந்து மோட்டார் பம்பை ரிவர்ஸ் சைடு சுழலச்செய்வதால், திரஸ்ட் பேரிங் (Thrust Bearing) பழுதாவது தவிர்க்கப்படும்.

நிபுணர் ஆலோசனை பெற்று, சரியான மோட்டாரை தேவையான ஆழத்தில் பொருத்தி நீரை எடுப்பதால் கால விரயம் மற்றும் மின் பயன்பாடு ஆகியவற்றில் சிக்கனம் ஏற்படும். வீடுகளுக்கான போர்வெல் மோட்டார்கள் ஒவ்வொரு குதிரைத் திறனிலும் ஏராளமான மாடல்கள் உள்ளதால் தகுந்த ஆலோ சனை பெற்று அமைப்பது தான் நல்லது.

Next Story