கட்டுமானத்திற்கு கைகொடுக்கும் மலை மண் - எம் சாண்ட்


கட்டுமானத்திற்கு கைகொடுக்கும் மலை மண் - எம் சாண்ட்
x
தினத்தந்தி 26 Feb 2022 9:10 PM IST (Updated: 26 Feb 2022 9:10 PM IST)
t-max-icont-min-icon

எம் சாண்ட் என்பது சிமெண்ட் அல்லது கான்கிரீட்டில் கட்டுமான நோக்கங்களுக்காக பாறை அல்லது கிரானைட்களை உடைத்து செயற்கையாக தயாரிக்கப்படும் மணல் ஆகும்.

இயற்கை ஆற்று மணலுடன் ஒப்பிடும்பொழுது எம்சாண்டானது அதன் இயற்பியல் மற்றும் கனிமப் பண்புகளில் வேறுபடுகின்றது..

இன்றைய காலகட்டத்தில், இயற்கை மணலின் ஆதாரங்களான ஆற்று மணல், குழி மணல்,ஓடை மணல் மற்றும் கட்டுமானத்தில் மொத்தமாக பயன்படுத்தப்படும் பிற மணல்கள் கிடைப்பது அரிதாகி வருவதன் காரணமாக எம் சாண்டிற்கு கட்டுமானத்தில் தேவை அதிகமாகி வருகின்றது..உரிய நேரத்தில் கிடைப்பது மற்றும் மாசுபாட்டை குறைப்பதன் காரணமாகவும் இந்த மலை மண்ணானது கட்டுமானத்தில் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகின்றது..இயந்திரங்களின் உதவியுடன் இந்த மண்ணின் துகள் அளவானது சரியான விகிதத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் ஆற்று மணலுக்கு மாற்றாக மலை மண் உள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் கட்டுமான தொழில் காரணமாக, மணலின் தேவை அதிகரித்து வருவதால் ஆற்று மணலின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது எம் சாண்ட் என்று சொல்லலாம்..

பண்புகள்:

* அதிக ஆயுள்: மலை மண்ணில் உள்ள இயற்பியல் மற்றும் இரசாயன பண்புகள் சீரானவையாகவும் எந்த கடுமையான காலநிலைகளையும் தாங்ககூடியவையாகவும் உள்ளன..இது கான்கிரீட்டில் உள்ள குறைபாடுகளான பிரித்தல், எஃகு அரிப்பு,வெற்றிடங்கள், கேபில்லரி(தந்துகி) ,நீர்க்கசிவு ,ஈரப்பதம் உட்செல்லுதல் போன்றவற்றை சமாளிக்கும் திறன் கொண்டது.

* அதிக வலிமை: மலை மண்ணானது மென்மையான மேற்பரப்பு அமைப்பை கொண்டுள்ளது மற்றும் வி எஸ் ஐ வடிவமைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி இந்த மண் வடிவமைக்கப் படுவதால் நீளமான மற்றும் மெல்லிய துகள்கள் இல்லாமல் உற்பத்தி செய்யப்படுகின்றது..இதன் கனசதுர (கியூபிகல்) வடிவ துகள்கள் கான்க்ரீட்டிற்கு அதிக ஆயுள், அதிக வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை வழங்குகின்றன.எம் சாண்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கிரானைட்டிலிருந்து தயாரிக்கப்படுவதால், கான்கிரீட் கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கான சமநிலையான இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளது..

* அதிக வேலைத்திறன்: கான்கிரீட்டின் செயல்திறனில் அளவு, வடிவம், அமைப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன..மணலின் பரப்பளவு அதிகமாக இருப்பதால் , கரடுமுரடான கலவைகளுடன்மணலைப் பிணைக்க சிமெண்ட் மற்றும் தண்ணீருக்கான தேவை அதிகரிக்கிறது.எம் சாண்ட் உற்பத்தியின் இந்த இயற்பியல் பண்புகள் மீதான கட்டுப்பாடு கான்கிரீட்டிற்கு குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படுவதோடு ,அதிக வேலை செய்யக்கூடிய கான்கிரீட்டை வழங்கவும் செய்கிறது.. இதன் கன சதுர வடிவம் மற்றும் சரியான தரமானது சிறந்த வேலைத் திறனை உருவாக்கும் கலவைக்கு நல்ல நெகிழ்வுத் தன்மையை அளிக்கிறது..

* சுற்றுச் சூழலுக்கு ஏற்றது: இந்த மண்ணை கட்டுமானத்தில் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் குறைதல், நீர் பற்றாக்குறை ஏற்படுவது, இயற்கை உயிர்களுக்கு அச்சுறுத்தல் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகள் தவிர்க்கப்படும்..சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டுவதால் பிற மணலுக்கு மாற்றாக மலை மண் சிறந்ததாக உள்ளது..

மலை மணலின் நன்மைகள்:

* இயற்கையான ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது மலை மண் அதிக நுண்ணிய தொகுதிகளைக் கொண்டுள்ளது, இது கான்கிரீட்டுக்கு நல்ல வேலைத் திறனை அளிக்கிறது..

* மலை மண்ணில் வண்டல் மற்றும் களிமண் துகள்கள் இல்லாமல் இருப்பதால் இது சிறந்த சிராய்ப்பு எதிர்ப்பு, அதிக அலகு எடை மற்றும் குறைந்த ஊடுருவல் ஆகியவற்றை கொண்டுள்ளது..

* சுற்றுச்சூழலுக்கு இடையூறு விளைவிக்காதது,ஆற்றுப் படுகைகளில் இருந்து மணல் எடுப்பதை குறைக்கிறது.

* எம் சாண்டின் சரியான தரப்படுத்தல் மற்றும் கன சதுர வடிவம் கான்கிரீட்டிற்கு அதிக வலிமை மற்றும் சிறந்த நீடித்த தன்மையை அளிக்கிறது.

* மணலுக்கு தேவையான தர நிர்ணய மண்டலத்தை உறுதி செய்யக்கூடிய வகையில் எம் சாண்ட் தயாரிக்க நவீன மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


Next Story