வீடு கட்ட மனையடி சாஸ்திரம்


வீடு கட்ட மனையடி சாஸ்திரம்
x

ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் கட்டப்படும் வீடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவுகளோடு இருப்போம். அவ்வாறு கட்டப்படும் வீடு மனையடி சாஸ்திரத்தின்படி அமைக்கப்பட்டால் அது நமக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்றைய காலகட்டத்தில் வீடு விற்பனைக்கான விளம்பரங்களில் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டது என்று வருவதை பார்க்க முடியும்.. சரி மனையடி சாஸ்திரப்படி வீட்டில் எந்தெந்த இடங்களை எப்படி அமைக்கலாம் என்பதைப் பார்ப்போம்.. வீட்டின் சுற்றுச்சுவர் ,மேல் மாடி சுவர், பூஜை அறை, துளசி மாடம், படுக்கை அறை, குளியலறை, போர் அல்லது கிணறு, படிக்கட்டுகள் எப்படி அமைப்பது? இதோ ஒரு பார்வை.

மனையடி சாஸ்திரம் கூறுவது என்ன?

இந்த உலகமானது பஞ்சபூதங்களை வித்தாக கொண்டது. அதில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் என எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது.. ஒருவர் தான் வசிக்கும் வீட்டில் ஆரோக்கியம்., அமைதி, செல்வத்துடன் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ இந்த மனையடி சாஸ்திரத்தின்படி வீட்டை அமைக்கும் பொழுது இவை எல்லாம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது..

* வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு வீடு கட்டும் பொழுது வடக்கு திசையில் தெற்கு திசையை விட அதிக இடம் விட்டு வீடு கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டின் சுற்றுச்சுவர் அல்லது மாடி சுவர்

வீட்டின் சுற்றுசுவர் அல்லது வீட்டில் மாடிச்சுவரானது தென்மேற்கு திசையில் ஒரு அங்குலமாவது உயர்ந்ததாக இருக்க வேண்டும்.. அதைவிட சற்று குறைவாக தென்கிழக்கு சுவர் அதைவிட குறைவாக வடமேற்கு சுவர் அதைவிட குறைவாக வடகிழக்கு சுவர் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..

பூஜை அறை

பூஜை அறையானது வீட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருப்பது சிறப்பு. அதேபோல் சுவாமி படங்களை கிழக்கு திசை நோக்கி பார்க்கும்படி வைக்க வேண்டும். சுவாமி படங்களை வடக்கு திசை நோக்கியும் வைக்கலாம்.இறந்தவர்கள் புகைப்படத்தினை தெற்கு திசை நோக்கி மாட்ட வேண்டும்.மேலும் இந்த திசையில் சேமித்து வைக்கக்கூடிய அறையை அமைக்கலாம்.. இந்தப் பகுதியில் சமையலறை, கழிப்பறை இருப்பது நல்லதல்ல.

துளசி மாடம்

மருத்துவ குணம் நிறைந்த துளசி மாடம் வீட்டில் இருந்தால் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க வல்லது,அதோடு துளசிச்செடி காற்றை தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதை கருத்தில் கொண்டு பழங்காலத்தில் அனைத்து வீடுகளிலும் வீட்டின் முன்புறம் துளசி மாடத்தை வைத்திருந்தனர். துளசி மாடம் வீட்டின் முன் இருப்பது நல்லது அதிலும் குறிப்பாக கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.. அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம் இல்லாத காரணத்தினால் ஆயத்த துளசி மாடங்களை வாங்கி கேட்டின் அருகிலேயே வைத்திருப்பதை பார்க்க முடிகின்றது..

விளக்கேற்றும் திசை

வீட்டில் விளக்கேற்றுவது என்பது வெறும் பூஜைக்காக, வெளிச்சத்திற்காக மட்டும் கிடையாது.. விளக்கு என்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்கி மங்களத்தை கொண்டுவரக் கூடியது.. வீட்டில் விளக்கேற்றும் பொழுது ஒரு விளக்காக ஏற்றாமல் இரண்டு விளக்கு ஏற்றுவது சாலச் சிறந்தது. அதேபோல் வீட்டில் துளசி மாடத்தில் காலையும் மாலையும் விளக்கு ஏற்றுவது வீட்டிற்கு நல்ல பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.விளக்குகளை எப்பொழுதும் கிழக்கு திசை நோக்கி ஏற்றுவது நல்லது.. தெற்கு நோக்கி ஏற்றுதல் கூடாது.

படுக்கை அறை

வீட்டின் முக்கியமான அறைகளில் ஒன்று படுக்கை அறை..ஓய்வு என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் மனநிலைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தூக்கம்., ஓய்வு எடுக்க கூடிய படுக்கையறை வீட்டில் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது..படுக்கை அறையில் வடக்கு திசை நோக்கி பணம் சேமிக்கும் அலமாரி வைக்க வேண்டும்..வீட்டில் இரண்டு படுக்கை அறை அமைக்க விரும்புபவர்கள் இரண்டாவது அறையை வடகிழக்குப் பகுதியில் அமைக்கலாம்.. இளம் தம்பதியினர் தென்மேற்கு பகுதியிலும், வயதானவர்கள் வடகிழக்கு அறையிலும் தங்குவது நல்லது.அதேபோல் நாம் உறங்கும் பொழுது தெற்கிலும், கிழக்கிலும் தலை வைத்து படுப்பது நன்மையைத் தரும். வடக்கில் தலை வைத்து படுப்பது சிறந்ததல்ல என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

குளியலறை

வீட்டின் குளியலறையை தென்மேற்கு திசையில் அமைக்காமல் மற்ற எந்த திசையில் வேண்டுமானாலும் அமைக்கலாம்.

சமையலறை

தென்கிழக்கு பகுதியானது அக்னி மூலை என்று கூறப்படுகிறது.. எனவே வீட்டின் தென் கிழக்குப் பகுதியில் சமையலறையை அமைத்து கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்ல அமைப்பாகும்..அவ்வாறு சமையலறையை அமைக்க இயலாதவர்கள் வடமேற்கு திசையில் அமைக்கலாம்..சமையலறையில் பாத்திரங்களை கழுவும் சின்க் ஆனது தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும் அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம்.. பூஜை அறைக்கு அருகில் சமையலறை இருக்கலாம். ஆனால்., கழிப்பறைக்கு அருகில் பூஜை அறை மற்றும் சமையல் அறை இருப்பது நல்லதல்ல..

குளியலறை

குளியலறையை தென்மேற்கு திசையை தவிர மற்ற திசைகளில் அமைக்கலாம். அதேபோல் கழிவுநீர்த் தொட்டியையும் தென்மேற்கில் அமைக்காமல் மற்ற திசைகளில் அமைக்கலாம்.

படிக்கட்டுகள்

வீட்டில் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும். படிக்கட்டில் ஏறுவது கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி சென்றடைவதாக அல்லது வடக்கில் தொடங்கி தெற்கு நோக்கி ஏறுவதாக இருக்க வேண்டும்.வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டை அமைக்கக்கூடாது.

மரங்கள்

வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் மரங்களை வளர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக தெற்கு பகுதியானது மரங்கள் வளர்க்க உன்னதமானது என்று கூறப்படுகின்றது. அதேபோல் மரக்கிளைகள் வீட்டின் மேல் செல்வது சிறந்ததல்ல என்று கூறப்படுகிறது.

Next Story