சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் கட்டுமான பொருட்கள்
சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் கட்டுமான பொருட்களை பற்றி பார்ப்போம்...
மண் கட்டமைப்புகள்( எர்த்தன் ஸ்ட்ரக்ச்சர்ஸ்)
இது களிமண், சேறு, சரளை மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றால் ஆனது. ஆடோப், ரேம்ட்-எர்த் மற்றும் பிற மொத்த கட்டமைப்புகள் இந்தியாவில் கிடைக்கும் பசுமையான பொருள் மற்றும் பாரம்பரிய கான்கிரீட் கட்டுமான பொருட்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக வந்திருக்கின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இவை கட்டிடங்களுக்கு அதிக ஆயுள் காலத்தையும் பாதுகாப்பையும் வழங்குகின்றன. சுவர்கள் மற்றும் தரை அமைப்புகளுக்கு ரேம்ட்-எர்த் பயன்படுத்தப்படுகின்றன.இது குவாரிகளில் இருந்து கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்வதுடன் குறைந்த கார்பனைக் கொண்டுள்ளது.
வைக்கோல் உருண்டை(ஸ்ட்ரா பேல்)
கட்டுமானத்தில் அரிதாக பயன்படுத்தப்பட்டாலும், இந்த வைக்கோல் உருண்டைகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் பேசப்படுகின்றது.விவசாய கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இவை மரக்கட்டைகளுக்கு ஒரு நல்ல மாற்றாக உள்ளது.வைக்கோல் கூரைகளை கொண்டு கட்டப்படும் வீடுகள் சிறந்த பாதுகாப்பு மற்றும் குளுமையை வழங்குகின்றன.தடிமனான சுவர்களின் மேல் வைக்கோல் கூரைகளை அமைக்கும் பொழுது அவை அழகிய தோற்றத்தை தருவதுடன் வீட்டை விசாலமாகவும் காட்டுகின்றன.இன்றளவும் கிராமப்புறங்களில் வைக்கோல் கூரைகள் வேய்ந்த வீடுகளை பார்க்க முடியும்.
மூங்கில்(பேம்பூ)
உயர் கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பல்துறை பொருள் என்று மூங்கிலை சொல்லலாம்.இது இலகுவான எடை, நெகிழும் தன்மை மற்றும் இரும்பை விட மலிவாக இருப்பதால் கூரைகள், தரை அமைப்புகள், சுவர்கள், பகிர்வுகள் மற்றும் ஒரு கட்டிடத்தின் பீம்கள் போன்ற கட்டமைப்பு கூறுகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது.இந்தியா முழுவதும் மூங்கில்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.கட்டிடங்களில் இவற்றை பொருத்துவது எளிது.
இயற்கை இழைகள் மற்றும் செல்லுலோஸ் காப்பு (நேச்சுரல் ஃபைபர்ஸ் அண்ட் செல்லுலோஸ் இன்சுலேஷன்)
ஒரு கட்டிடம் ஆற்றலை இழக்காமல் இருப்பதற்கு பெரும் துணை புரிபவை இன்சுலேஷன் என்று சொல்லலாம்.மறுசுழற்சி செய்யப்பட்ட இயற்கை இழைகளிலிருந்து இவ்வகை இன்சுலேஷன் தயாரிக்கப்படுகின்றது. சில இடங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய இவ்வகை பொருளானது புதுப்பிக்கத்தக்க வளங்களை கொண்டுள்ளது. இதேபோல, செல்லுலோஸ் என்பது மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொதுவான காப்பு பொருளாகும்.ஒப்பீட்டளவில் கண்ணாடி இழைகளை விட மலிவானது என்று இவற்றைச் சொல்லலாம். எனவே அதிக அளவில் இவை கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
என்ஜினீயர்டு உட்
மரக் கழிவுகள் மற்றும் சிறிய மரங்களை பயன்படுத்தி வலிமையான கட்டமைப்பை உருவாக்க இவ்வகை எஞ்சினியர் உட்டானது பயன் படுத்தப்படுகின்றது.ஒரு கட்டமைப்பிற்கு குறைந்த மரத்தைப் பயன்படுத்த இது உதவுகின்றது.வீட்டின் அழகியலை மேலும் மேம்படுத்துவதற்கு இவ்வகை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஸ்லேட் மற்றும் ஸ்டோன்
கல் கட்டுமானம் என்பது ஒரு சிறந்த பசுமையான தேர்வு என்று சொல்லலாம். இவற்றின் தன்மையைப் பொறுத்து அதன் விலையானது மாறுபடுகின்றது இவற்றைப் பயன்படுத்தி கட்டப்படும் வீடுகள் அதிக ஆயுள் கொண்டவையாக இருப்பதோடு இந்தக் கட்டமைப்புகள் பல தசாப்தங்கள் நீடித்து உழைப்பவையாக இருக்கும்.கூரை அமைப்புகளுக்கு ஸ்லேட்டானது நவீன தோற்றத்தைத் தருவதற்காக நகர்ப்புறங்களில் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடியும்.கருப்பு, சாம்பல், பச்சை மற்றும் பல வண்ணங்களில் இவ்வகை ஸ்லேட்டுகள் கிடைக்கின்றன.
Related Tags :
Next Story