சுற்றுச் சூழலுடன் இயைந்த மண் பை வீடுகள்


சுற்றுச் சூழலுடன் இயைந்த மண் பை வீடுகள்
x
தினத்தந்தி 19 March 2022 12:58 PM GMT (Updated: 19 March 2022 12:58 PM GMT)

மண் வீடுகள் சரி அது என்ன மண் பைபை வீடுகள் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? ஆமாம், மண்ணை பைகளில் நிரப்பி அவற்றை சுவர்களாக வைத்து கட்டப்படும் வீடுகள் மண் பை வீடுகள் என்று அழைக்கப் படுகின்றன..

இதுபோன்ற வீடுகளை பண்ணை வீடுகளாக இப்பொழுது பெருமளவில் பார்க்க முடிகின்றது.. இவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருள்களைக் கொண்டு கட்டப்படுவதால் இதுபோன்ற வீடுகள் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது..இந்தியாவில் குறிப்பாக கிராமப்புறங்களில் இது போன்ற மண் பை வீடுகளை அதிக அளவில் பார்க்க முடியும்.குறைந்தபட்சம் ஒன்றரை மாதங்களுக்கு உள்ளாகவே இவ்வகை வீட்டினை கட்டி முடித்து விட முடியும் என்பது கூடுதல் சிறப்பான செய்தியாகும்.

* இயற்கையாக கிடைக்கும் களிமண்ணை சலித்து அத்துடன் சுண்ணாம்பு மற்றும் கலவைக்கு உபயோகப்படுத்தப்படும் ஒருவிதமான திரவம் ஆகிய மூன்றையும் கலந்து அவற்றை சாக்குப் பைகளில் நிரப்புகிறார்கள்.சுண்ணாம்பு, கற்றாழை மற்றும் சப்பாத்திக்கள்ளி போன்ற மூன்றையும் கலந்து நொதிக்க வைத்து வடிகட்டி அவற்றை அடுப்பில் வைத்து காய்ச்சி தயாரிக்கப்படும் திரவத்தையே கலவையை கலப்பதற்காக உபயோகப்படுத்துகிறார்கள். இந்தத் திரவமானது கலவைக்கு அதிக உறுதித்தன்மையை தருகின்றது. அதேபோல் சுண்ணாம்பு உறுதித் தன்மையுடன் வெப்பத்தை குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றது..

* அந்தச் சாக்குப்பையானது வடிவம் மாறாமல் இருப்பதற்காக மண்ணை நிரப்பிய பிறகு சாக்குப்பை மற்றும் மண்ணிற்கு இடையில் சிறிய மூங்கில் குச்சிகளை செருகி வைக்கிறார்கள்.

* பின்னர் இந்த சாக்குப் பையில் கலக்கப்பட்ட மண்ணானது முழுவதும் நிரப்பப்பட்டு பின்பு இறுக்கமாக பையின் வாயானது தைக்கப்படுகின்றது..

* இப்பொழுது மண் நிரப்பப்பட்ட பைகளை திமுசு கட்டை கொண்டு அனைத்து பக்கங்களிலும் இடித்து அதற்கு சமமான வடிவத்தை தருகிறார்கள்.

* அஸ்தி வாரத்திற்கு ஒரு அடி ஆழக் குழிகள் தோண்டப் படுகின்றன.மறுபடியும் மண், சுண்ணாம்பு மற்றும் கலவையில் கலப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் திரவம் ஆகிய மூன்றையும் கலந்து கலவையானது தயாரிக்கப்படுகின்றது..அஸ்திவார குழியில் கருங்கற்களை நிரப்பி அவற்றின்மேல் தயாரிக்கப்பட்ட கலவையை கொட்டுகிறார்கள்.. இதன் மேல் திமுசைக் கொண்டு தட்டி மட்ட படுத்துகிறார்கள்..அதன் பின்னர் கட்டுமானம் செய்பவர் இந்த கலவையானது எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்கின்றதா என்பதை சரிபார்த்த பின்னர் மண் மூட்டைகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் அடுக்குகிறார்கள்.

* அஸ்தி வாரத்திற்கு பயன்படுத்தப்படும் மண் மூட்டைகளுக்கு பெரும்பாலும் பிளாஸ்டிக் சாக்குப்பைகளை உபயோகப்படுத்துகிறார்கள்..பெரும் மழை மற்றும் வெள்ளம் போன்றவற்றிலிருந்து அஸ்திவாரத்தை பாதுகாப்பதற்காகவே இதுபோன்ற பிளாஸ்டிக் சாக்குப் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

* கிடைமட்ட வாக்கில் வைக்கப் படும் ஒவ்வொரு மூட்டைக்கும் இடையில் கலவையானது நிரப்பப்படுகிறது..ஒரு வரிசையில் மூட்டைகள் அடுக்கப்பட்டு அதனை திமுசு கொண்டு மட்ட படுத்துகிறார்கள்.

* குறிப்பிட்ட இடைவெளியில் இந்த மண் மூட்டைகளின் நடுவில் செங்குத்தாக மூங்கில் குச்சிகள் நடப்பட்டு அதில் முள்வேலி கம்பிகளை கட்டுகிறார்கள்.. கிடைமட்டமாக அடுக்கப்படும் மூட்டைகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்காக மூங்கில் குச்சிகள்செருகப் படுகின்றன. இதனால் மண் மூட்டைகள் சரிந்து விழுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகின்றது..

* கட்டப்பட்ட கம்பி வேலிகளின் மேல் கலவையானது இடப்பட்டு அதன்மேல் மறுபடியும் மண் மூட்டைகளானது அடுக்க படுகின்றது.இவ்வாறு ஒன்றன் மேல் ஒன்றாக மூட்டைகள் அடுக்கப்பட்டு சுவரானது உயர்த்தப்படுகிறது.

* இந்த மண் மூட்டைகளை மேலும் பலப்படுத்துவதற்கு அவற்றின்மேல் கலவைக்கு உபயோகப்படுத்தப்படும் திரவமானது தெளிக்கப் படுகின்றது.

* சாதாரணமாக கட்டப்படும் வீடுகளை போலவே இது போன்ற மண்பை வீடுகளிலும் கதவு ஜன்னல்கள் வைக்கப்படுகின்றன. கதவு மற்றும் ஜன்னல்களை பூச்சிகள் மற்றும் கரையான்கள் அரிக்காமல் இருப்பதற்காக முந்திரி ஓட்டில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயானது அவற்றின்மேல் பூசப்படுகின்றது...

* மூங்கில்களை இணைத்து மீட்டெடுக்கப்பட்ட மர லிண்டல்கள் அமைக்கப்படுகின்றன.இந்த மூங்கில்களின் மீதும் முந்திரி ஓட்டில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயானது தடவப்படுகிறது.

* பனை மரங்களை அறுத்து இந்த வீட்டிற்கு தூண்களாக நடுகிறார்கள்.. வீட்டின் கூரைக்கு மூங்கில்களும் காய்ந்த தென்னை ஓலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

* சாதாரண வீடுகளை போலவே இந்த வீடுகளுக்கும் மின்சார இணைப்பை கொடுத்து லைட், மின்விசிறி என அனைத்தையும் இயங்க வைக்க முடியும்..

* சுவற்றின் பூச்சு வேலைக்கு நன்கு சலித்த மண்ணுடன், அரைத்த கலவை திரவத்தை கலந்து நன்கு ஊறவைத்து பின்பு பயன்படுத்துகிறார்கள்.

* இவ்வாறு கட்டப்படும் வீடுகள் கான்கிரீட் வீடுகள் உடன் சவால் விடும் அளவுக்கு பலமும், உறுதித்தன்மையும்,நீண்ட ஆயுளும் உள்ளவையாக இருக்கின்றன..

* வீட்டில் களிமண் டைல்களை பதிப்பதற்கு முன் தரையில் துளைகள் இட்டு கரையான் அரிக்காமல் இருப்பதற்காக திரவத்தை ஊற்றி அத்துடன் சுண்ணாம்பையும் போட்டு அந்தத் துளைகளை மூடுகிறார்கள்.. அதன் பின்னர் செங்கல்லை அடுக்கி அதன்மேல் கலவையை இட்டு அதற்குமேல் களிமண் டைல்களை பதிக்கிறார்கள்.

* மூங்கிலில் பரண்கள் அமைத்து அதில் படுக்கை அறை இருப்பது போல் அமைப்பது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றது..

* இதுபோன்ற வீடுகள் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் வாழ்வதற்கும் ஏற்றவையாக இருப்பதுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கின்றன.. பண்ணை வீடுகளை இயற்கையாக அமைக்க விரும்புபவர்கள் இதுபோன்ற வீடுகளை கட்டலாம்..

Next Story