ஆடி மகிழலாம் பலவிதமான ஊஞ்சல்கள்
இன்றளவும் கிராமப்புற வீடுகளில் ஊஞ்சல்கள் இருப்பதைப் பார்க்க முடியும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவது மிகவும் விருப்பமான செயலாகும்.
இன்றைய காலகட்டத்தில் ஊஞ்சல் போட்டு ஆடுவதற்கு விசாலமான அறைகள் நமது வீடுகளில் இல்லை என்று கவலைப் படத் தேவையில்லை.இப்பொழுது வந்திருக்கும் விதவிதமான ஊஞ்சல்கள் வரவேற்பறையில் மட்டுமல்லாமல் வீட்டின் முற்றம்,வீட்டின் கொல்லைப்புறம், பால்கனி,மொட்டை மாடி, சிட் அவுட்,வீட்டின் மூலை,வீட்டுத்தோட்டம், படுக்கையறை என எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்வது போல் நவீன வடிவங்களில் வந்திருக்கின்றன.
ஹேமாக்
கயிறுகளில் ஊஞ்சல் போல தயாரிக்கப்படும் ஹேமாக் பெரும்பாலும் கடற்கரைகளில் இரண்டு மரங்களுக்கு இடையில் கட்டப்பட்டு அதில் மக்கள் ஓய்வு எடுப்பதை பார்த்திருப்போம்.. அதேபோன்று மிகவும் நிம்மதியாக வீட்டில் ஓய்வு எடுக்கும் விதத்தில் வந்திருக்கும் இவ்வகை நவீன ஹேமாக் பெரிய அறைகளில் நாம் படுத்துக்கொண்டே புத்தகம் வாசிப்பது, டிவி பார்ப்பது இல்லை என்றால் நிம்மதியாக ஓய்வெடுப்பது என அனைத்துக்கும் ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டு வந்திருக்கின்றது.
இவற்றை எதிர்ப்புறம் இருக்கும் இரண்டு ஜன்னல்களுக்கு இடையே கட்டிக்கொள்ளலாம்,இரண்டு தூண்களுக்கு இடையில் அல்லது இதற்கு என தனியாக கொடுக்கப் பட்டிருக்கும் ஸ்டாண்டில் கட்டிக் கொள்ளலாம்.. இவற்றின் தேவை இல்லாத போது அவற்றை மடித்து வைத்துக் கொள்ளலாம்.இவ்வகை ஊஞ்சல்களை வீட்டின் உட்புறம் மட்டுமல்லாது வெளிப்புறத்திலும் பயன்படுத்தலாம்..இவை காட்டன் கயிறுகள் மற்றும் கேன்வாஸ் துணிகளால் செய்யப்படுவதால் மிகவும் எடை குறைவாக இருக்கின்றன.. இதன் காரணமாக இவற்றை வீட்டின் எந்த அறைக்கு வேண்டுமானாலும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
பபிள் ஸ்விங்
இவ்வகை ஊஞ்சல்களை பெரும்பாலான வீடுகளில் இப்பொழுது பார்க்க முடிகின்றது..இவ்வகை ஊஞ்சல்கள் பெரும்பாலும் மூங்கில்,இலகுவான உலோகம் அல்லது பிளாஸ்டிக்கில் வடிவமைக்கப் படுவதால் இவற்றைப் பராமரிப்பது மிகவும் எளிதாக உள்ளது..இவ்வகை ஊஞ்சல்களையும் வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இடத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்..பெரிய பாதி நீர்க்குமிழி போன்று இருக்கும் இவ்வகை ஊஞ்சல்கள் ஸ்டாண்ட்களுடனும் அவை இல்லாமலும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த ஊஞ்சல்களை சர விளக்கு மற்றும் வண்ண குஷன்கள் கொண்டு நம்முடைய கற்பனைக்கு ஏற்றார் போல் அழகுபடுத்திக் கொள்ளலாம்.. பலவித டிசைன்கள் மற்றும் கருப்பு, பழுப்பு,வெளிர் மஞ்சள், பிங்க்,வாடாமல்லி என பல வண்ணங்களில் இவை கிடைக்கின்றன.ஸ்டாண்டுகள் உடன் வரும் இந்த ஊஞ்சலை வீட்டின் மூலையில் கூட அமைக்க முடியும்.. அதேபோல் ஸ்டாண்ட் இல்லாமல் வரும் ஊஞ்சலை வரவேற்பறை, பால்கனி என எங்கு வேண்டுமானாலும் சீலிங்கில் வரும் கொக்கியில் செயின் கொண்டு இணைத்துக் கொள்ளலாம்.
சஸ்பெண்டட் சோஃபா கம் பெட்
நம்முடைய வரவேற்பறையில் சோஃபா கம் பெட்டுடன் ஒரு ஊஞ்சல் இருப்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.. ஆம், இந்த ஊஞ்சலில் சோஃபாவில் அமர்வது போல் அமர்ந்து கொள்ளலாம், படுத்து இளைப்பாறலாம் அதேநேரம் ஊஞ்சலில் சந்தோஷமாக ஆடலாம்.. இவ்வகை ஊஞ்சல்களில் குஷன்கள் மற்றும் தலையணைகளை மிகவும் ஸ்டைலாக அமைத்து வரவேற்பறையை கவர்ச்சிகரமாக மாற்றலாம்..இவை உறுதியான மரம் அல்லது இரும்பில் செய்யப்பட்டு வருகின்றன.இந்த ஊஞ்சல்கள் சீலிங்கில் பொருத்தப்பட்டிருக்கும் கொக்கிகளில் இரும்பு செயின்கள் கொண்டு இணைக்கப்படுகிறது..கொக்கிகளையும், ஊஞ்சலையும் இணைக்கும் செயின்களில் பலவிதமான டிசைன்கள் வருவது பார்வைக்கு அனைவரையும் கவர்ந்திழுக்கும் விதமாக உள்ளது..இவ்வகை ஊஞ்சல் வீட்டின் உட்புறத்தில் போடுவதற்கு ஏற்ற ஒன்றாக இருக்கின்றது..இவை மரம் அல்லது இரும்பினால் செய்யப்படுவதால் அதிக எடையுள்ள நபர்களை தாங்கும் விதமாக வடிவமைக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் விக்கர் ஸ்விங்
மெல்லிய பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்டு பின்னி தயாரிக்கப்படும் இவ்வகை ஊஞ்சல்கள் பல்வேறு வகையான பருவ நிலைகளை தாங்கக் கூடியவையாக இருப்பதால் வீட்டின் வெளிப்புறம் அமைக்க ஏற்றவையாக உள்ளன..வீட்டின் வெளிப்புறம் பால்கனி அல்லது புல்வெளி அமைக்கப்பட்டிருந்தால் அந்த இடத்திற்கு பொருத்தமான ஒன்றாக இவை இருக்கும். இவை பெரும்பாலும் கிரே, கருப்பு மற்றும் பழுப்பு போன்ற அடர்த்தியான நிறங்களில் வருவதால் அவ்வளவு எளிதில் அழுக்காவதில்லை..இவற்றை சுத்தம்செய்து பராமரிப்பதும் எளிது.
ஹோம் மேட் ஸ்விங்
கார்களின் டயர்களை பிளாஸ்டிக் அல்லது சணல் கயிறுகளால் இணைத்து வண்ணம் தீட்டி மிகவும் ஸ்டைலான ஒரு தோற்றத்தை தரும் ஊஞ்சலாக நம் வீட்டிலேயே நம்முடைய முயற்சியால் தயாரிக்கப்படும் இந்த ஊஞ்சல்கள் கட்டாயம் மிகவும் சிறப்பானவைதான். இதுபோன்ற ஊஞ்சல் களை சிறிய இடங்களில்கூட தொங்க விட முடியும்.. ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அமர்ந்து ஆடக்கூடிய இவ்வகை ஊஞ்சல்கள் இப்பொழுது மக்களிடையே பிரபலமாகி வருகின்றது.. இவற்றை வீட்டின் உட்புறம் மட்டுமல்லாது வெளிப்புறத்தில் மரங்களில் கட்டியும் தொங்கவிடலாம்.
நிழற் குடையுடன் வரும் ஊஞ்சல்கள்
ஊஞ்சலை மொட்டைமாடி அல்லது புல்வெளியில் அமைத்து மிகவும் அமைதியாக ஆடி மகிழ விரும்புபவர்களுக்கு என்றே வடிவமைக்கப்பட்டு வந்திருக்கும் இவ்வகை ஊஞ்சல்களில் நிழல் தருவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குடைகள் பல்வேறு டிசைன்கள் மற்றும் பொருட்களில் தயாரிக்கப்படுகின்றன.. இந்த குடைகள் வெயில் மட்டுமல்லாது மழையும் தாங்கும் விதமாக பாலிகார்பனேட்டட் மற்றும் ஃபைபர் கிளாஸ் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவை மட்டுமல்லாது முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் தயாரிக்கப்படும் ஊஞ்சல்களும், ட்ரான்ஸ்பரண்ட் அக்ரலிக் ஊஞ்சல்களும் வீட்டின் உட்புறம் அமைப்பதற்கு ஏற்ற நவீன ஊஞ்சல்களாக உள்ளன.
Related Tags :
Next Story