இயற்கையான வெளிச்சம் வீடுகளுக்கு அவசியமே


இயற்கையான வெளிச்சம் வீடுகளுக்கு அவசியமே
x
தினத்தந்தி 19 March 2022 1:15 PM GMT (Updated: 19 March 2022 1:15 PM GMT)

இப்பொழுது கட்டப்படும் வீடுகளில் பெரும்பாலும் காற்று வெளிச்சம் போன்றவை போதிய அளவு இல்லாதவாறு இருப்பதைப் பார்க்க முடிகின்றது.. இதற்கு காரணம் இடப்பற்றாக்குறை என்று சொல்லலாம்.. சரி இயற்கையான வெளிச்சம் என்பது ஒரு வீட்டிற்குள் வருவதற்கு என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதோ சில யோசனைகள்.

ஸ்கை லைட்டுகள்

பெரும்பாலான கிராமப்புற வீடுகளில் இன்றளவும் சூரிய வெளிச்சம் வீடுகளுக்குள் வருவதற்காக ஒவ்வொரு அறையிலும் கூரையில் கண்ணாடிகள் பதித்து இருப்பதை பார்க்க முடியும்.. இதன் மூலம் சூரிய வெளிச்சம் தடையில்லாமல் வீட்டிற்குள் நுழைய முடியும்.. இப்பொழுது இதே முறையில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் சூரிய வெளிச்சம் வீட்டிற்குள் வருவதற்காக கூரைகளில் கண்ணாடிகளை தேவையான அளவுகளில் பொருத்தி கட்டுமானம் செய்யப்படுவதை பார்க்க முடிகின்றது.இவ்வாறு பொருத்தப்படும் கண்ணாடிகளை கூரையின் ஜன்னல்கள் என்று அழைக்கிறார்கள்.

ஸ்கை லைட்டுகள் ஜன்னல்களை விட நிலையான ஒளியை வீட்டிற்குள் கொண்டு வருகின்றன, ஏனெனில் ஜன்னல்களை யாராவது கடக்கும் பொழுது அல்லது ஏதாவது ஒரு பொருளை கொண்டு செல்லும் பொழுது ஏற்படும் வெளிச்ச தடை கூட இல்லாதவாறு இவை செயல்படுகின்றன மேகங்களில் இருந்து பிரதிபலிக்கும் சூரிய ஒளியை வீட்டிற்குள் அனுப்பக்கூடிய ஒரு அற்புதமான, பயனுள்ள ஒன்றாக இவை செயல்படுகின்றன.

பிரதிபலிப்பு அம்சங்கள்

வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சர விளக்கின் மீது சூரிய ஒளி பிரதிபலிக்கும் போது, அது அறைக்கு அதிக வெளிச்சத்தை கொடுக்கிறது.. இந்த செயல் நடைபெறுவதற்கு சர விளக்கை இயக்க வேண்டிய அவசியமில்லை. அறையில் சூரியஒளி வெளிப்படக்கூடிய இடங்களில் கண்ணாடிகள்,ஸ்கோன்கள் மற்றும் பளபளப்பான கேபினட்கள் போன்ற பிரதிபலிப்பு அம்சங்கள் என எவற்றை வேண்டுமானாலும் அமைக்கலாம்.

நிலையான கண்ணாடி ஜன்னல்கள்

எல்லா வீடுகளிலும் கண்ணாடிகளாலான ஜன்னல்கள் தானே போடப்படுகின்றது என்று நீங்கள் கேட்கலாம்.. வீடுகளின் சுவற்றில் ஒரு பகுதியில் திறந்து மூடாதவாறு நிலையான ஜன்னல்களை பொருத்துவது மேலை நாடுகளைப் போலவே நம் நாட்டிலும் இப்போது பிரபலமாகி வருகின்றது. வீட்டினுள் வெளிச்சம் வருவதற்கு பயனுள்ள தீர்வாக இது இருக்கும்.

.குறிப்பாக வீட்டின் வெளிப்புற சுவர் பகுதிகளை இதுபோன்ற நிலையான கண்ணாடி தொகுதிகளைக் கொண்டு பொருத்துவதன் மூலம் தேவையான அளவு இயற்கை ஒளி வீட்டிற்குள் வருவதற்கு இது வழிவகை செய்கின்றது.வீட்டிற்குள் நடப்பது வெளியில் தெரியாதவாறும் அதே சமயத்தில் வெளியில் நடப்பதும் வீட்டிற்குள் தெரியாதவாறும் வரும் கண்ணாடிகள் வெளியிலிருந்து வெளிச்சத்தை வீட்டிற்குள் தங்குதடையின்றி அனுப்பும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன...

ஸ்லைடிங் கதவுகள்:

ஒரு அறையின் நான்கு சுவர்களில் ஒரு சுவருக்கு பதிலாக கண்ணாடியாலான ஸ்லைடிங் கதவுகளைப் பொருத்துவது தென் இந்தியாவைத் தவிர மற்ற மாநிலங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. இப்பொழுது தென்னிந்தியாவிலும் இதுபோன்ற ஸ்லைடிங் கதவுகளை வீடுகளில் பொருத்திக் கொள்வதற்கு மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த கதவுகள் சூரிய ஒளியை தங்கு தடையில்லாமல் வீட்டிற்குள் அனுப்புகின்றன..இந்த ஸ்லைடிங் கதவுகளுக்கு திரைச்சீலைகளை போடுவதன் மூலம் வெளிச்சம் வீட்டிற்குள் தேவைப்படாத நேரங்களில் தவிர்க்க முடியும்.

கண்ணாடி அல்லது பிரதிபலிப்பு டைல்கள்

சமையலறை மற்றும் குளியலறை சுவர்களுக்கு கண்ணாடி போன்று பிரதிபலிக்கக்கூடிய டைல்களை ஒட்டும் பொழுது அவை அறைக்குள் இருக்கும் வெளிச்சத்தை அதிகப்படுத்துகின்றன.குளியலறைகளில் தடுப்புக்காக வைக்கப்படும் பிரிவுகள் கண்ணாடிகளால் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.. தடுப்புகள் நிறுவப்பட்ட பிறகு குளியலறையின் வெளிச்சமானது சிறிதளவும் குறையாமல் இருப்பதற்கு இவ்வகை கண்ணாடித் தடுப்புகள் உதவுகின்றன.

சமையலறை மற்றும் டைனிங் அறைக்கு நடுவில் இதுபோன்ற கண்ணாடியால் செய்யப்பட்ட தடுப்புகள் நிறுவுவதைப் பார்க்க முடியும்.. அதேபோல் சுவர்களுக்கு ஒட்டப்படும் டைல்கள் மென்மையான வண்ணங்களில் இருந்தால் அவையும் அறைக்குள் இருக்கும் வெளிச்சத்தை அதிகப் படுத்திக் காட்டுவதற்கு ஒரு காரணியாக அமைகின்றன..மெட்டாலிக் பேக்ஸ்பிளாஷ் டைல்கள் அதிக அளவு பிரதிபலிப்பு தன்மை கொண்டதாக இருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி அதிகப்படியான ஒளியை வீட்டிற்குள் அனுமதிக்க முடியும்.

இலகுவான, பிரகாசமான வண்ணப்பூச்சுகள்

சுவர்கள் மற்றும் சீலிங்கிற்கு வெள்ளை அல்லது மென்மையான வண்ணங்களைப் பூசும் பொழுது அவை வீட்டிற்கு அதிக ஒளியைச் சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.வீட்டிற்கு நூறு சதவிகித வெளிச்சம் வேண்டுபவர்கள் கட்டாயம் வெள்ளைநிற வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து பூசலாம்.. வெள்ளை நிறம் விரைவில் அழுக்காகி விடும் என்று நினைப்பவர்கள் வேறு சில மென்மையான வண்ணங்களைப் பூசுவதன் மூலம் வீட்டிற்குள் வெளிச்சத்தை அதிகப்படுத்த முடியும்.வீட்டின் வெளிப்புறம் வெள்ளை மற்றும் மென்மையான வண்ணங்களைப் பூசுவதன் மூலமும் வெளிச்சமானது வீட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றது..

மேலே கூறியவை மட்டுமல்லாமல் வீட்டிற்கு வைக்கப்படும் ஜன்னல்களின் அளவை பெரியதாக வைக்கும்பொழுது அதன் வாயிலாகவும் இயற்கையான வெளிச்சமானது வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது.இயற்கையாக கிடைக்கும் ஒளியானது செயற்கை ஒளியைவிடச் சிறந்தது என்பதை அனைவரும் அறிவோம்.இயற்கையான வெளிச்சமும் காற்றும் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் இயற்கையான வெளிச்சமும், காற்றும் அவசியமே.

Next Story