பெருகிவரும் சொத்து மேலாண்மை சேவைகள்


பெருகிவரும் சொத்து மேலாண்மை சேவைகள்
x
தினத்தந்தி 26 March 2022 10:18 PM IST (Updated: 26 March 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

வீட்டை வாடகைக்கு விடுவது என்பது இன்றைய காலகட்டத்தில் அவ்வளவு எளிதான காரியமல்ல.

அதுவும், வீட்டின் உரிமையாளர் வேறு ஊரிலோ, வேறு மாநிலத்திலோ அல்லது அயல் நாட்டில் இருந்தாலோ வீட்டை வாடகைக்கு விடுவது என்பது சற்று சிரமமான காரியம் தான்.அதேபோல், வீட்டில் குடியிருக்கும் நபர் வீட்டை காலி செய்யாமல் பிரச்சனைகளை கொடுத்தால் அதுபோன்ற தலைவலி வீட்டு உரிமையாளர்களுக்கு வேறொன்றும் இல்லை என்று சொல்லலாம். அதிலும், வீட்டில் ஏற்படும் விரிசல்களை சரி செய்வது, பெயிண்ட் அடிப்பது, மற்றும் பழுதுபார்க்கும் வேலைகள் என்று வந்துவிட்டால் வீட்டு உரிமையாளர்களின் பாடு திண்டாட்டம் தான்.. அவர்கள் இருப்பது ஒரு இடத்தில் சொந்த வீடு அமைந்திருப்பது மற்றொரு இடத்தில்.. இது போன்ற சந்தர்ப்பங்களில் வீட்டு உரிமையாளர்களுக்கு நிம்மதி பெருமூச்சை தருவதற்காக வந்திருக்கும் சேவைகள் என்று சொத்து மேலாண்மை சேவைகளைச் சொல்லலாம்..அயல்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் இது போன்ற சேவைகள் இப்பொழுது இந்தியாவிலும் பிரபலமாகி வருகின்றன.

சொத்து மேலாண்மை சேவைகள் என்றால் என்ன?

அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், வில்லா வீடுகள்,பங்களாக்கள், வணிக மையங்கள், கடைகள் உள்ளிட்ட குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை சொத்துக்களை கண்காணித்து அவற்றிற்கு உரிய மேற்பார்வை மற்றும் சேவைகளைச் செய்வது சொத்து மேலாண்மை சேவைகள் ஆகும்.. இது பொதுவாக மற்றொரு தரப்பினர் அல்லது நிறுவனத்திற்கு சொந்தமான சொத்தை நிர்வகிப்பதை உள்ளடக்கியது....

சொத்து மேலாளர்கள் சொத்து மேலாண்மை சேவைகளுக்கு எவ்வளவு கட்டணத்தை வசூலிக்கிறார்கள்?

இது பொதுவாக மாத வாடகை மதிப்பில் ஐந்து முதல் இருபது சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது..நம் நாட்டில் குடியிருப்பு வாடகை குறைவாக இருப்பதால், சேவைகள் மிகவும் நியாயமான விலையில் இருக்கின்றன..

பழுது பார்ப்பதற்கான பணத்தை செலுத்துபவர்கள் யார்?

வீட்டையோ அல்லது கடையையோ சொத்து மேலாளர்களின் மேற்பார்வையில் விட்டபிறகு வீட்டிற்குள் ஏற்படும் பழுதுபார்க்கும் வேலைகளுக்கு வீட்டின் உரிமையாளர்தான் பணத்தைச் செலுத்த வேண்டியதிருக்கும்..ஆனால், பழுது பார்ப்பதற்கான பொருட்களின் விலை மற்றும் வேலையாட்களுக்கு கூலி போன்றவற்றை சொத்து மேலாளர் வீட்டின் உரிமையாளருக்கு முன்னதாகவே தெரிவித்து விடுவார்.. அதற்கு வீட்டு உரிமையாளர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த செலவுகளை செய்துவிட்டோ அல்லது முன்கூட்டியோ பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த வேலைகளை செய்து முடிப்பது சொத்து மேலாளரின் பொறுப்பாகும்.இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். பெரும்பாலும் நில உரிமையாளர் சொத்து மேலாளருக்கு “ எஸ்கிரோ” நிதி அளிப்பது போன்றே ஒப்பந்தம் செய்யப்படுகின்றது.

சொத்து மேலாண்மை சேவைகளில் என்னென்ன அடங்கும்?

* வாடகை மற்றும் குத்தகைதாரர் மேலாண்மை.

* புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு.

* வாடகைதாரர் பிரச்சனைகளை கையாளுவது..

* சொத்து விற்பது மற்றும் வாங்குவது. * கணக்குகள்,பதிவுகள் மற்றும் நிதி கையாள்வது. * சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம்.

* சட்ட மற்றும் காப்பீட்டு ஆலோசனை.

சொத்து மேலாண்மை ஏன் தேவைப்படுகிறது?

சொத்து மேலாளர் அல்லது நிறுவனம், வாடகைக்கு வருபவர்கள் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து அது சரியானதா என்பதை பரிசீலித்து, சொத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதை உறுதி செய்வார்கள். மேலும் பராமரிப்பு என்பது உரிமையாளர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை சரியாகவும்,எந்தவித குறைபாடும் இல்லாதவாறும் செய்து கொடுப்பதை சொத்து மேலாண்மை நிறுவனங்கள் அருமையாக செய்கின்றன.. பணம் கொடுக்க தயாராக இருக்கின்றோம் வேலை உருப்படியாக முடிந்தால் சரி என்று சொல்பவர்களுக்கும், எனக்கு பிரச்சனை இல்லாமல் என்னுடைய வீட்டு வேலைகள் நல்லபடியாக நடந்து முடிந்தால் சரி என்று சொல்பவர்களுக்கும் இது போன்ற சேவைகள் மிகச் சரியான தேர்வாக இருக்கும்.

ஒரு நல்ல சொத்து மேலாளர், சரியான குத்தகைதாரர்களைக் கண்டுபிடித்து தருவதுடன், உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர்கள் இடையே நல்ல உறவை ஏற்படுத்தி, அனைத்து அம்சங்களையும் நிர்வகிப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு உங்கள் பணத்தை சேமித்து தருகிறார்.. வாடகையை உரிய நேரத்தில் சேகரிப்பது, வழக்கமான மற்றும் அவசரகால பழுதுபார்ப்புகளை கவனித்துக்கொள்வது, எந்தவிதமான மோதல் சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றைக் கையாள்வது என அனைத்தையும் சொத்து மேலாளர் திறம்படச் செய்கிறார்…

உங்கள் வீட்டில் கசிவு ,தவறான வயரிங், விரிசல்கள்,தண்ணீர் மற்றும் போர் பைப்புகளில் ஏற்படும் பிரச்சனை, வீட்டு உரிமையாளர்களின் உடமைகள் உடைந்து போவதன் காரணமாக மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மாற்றுவது என அனைத்தையும் சொத்து மேலாளரானவர் சம்பந்தப்பட்ட நபர்களைப் பணியமர்த்தி திறம்பட செய்து தருகிறார்.

முழு சேவை மேலாண்மை என்பது என்ன?

ஒவ்வொரு சொத்து மேலாண்மை நிறுவனங்களும் முழு சேவைக்கு வெவ்வேறு வரையறைகளைக் கொண்டிருந்தாலும், நில உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் இடையிலான அனைத்து சேவைகளையும் ஒரு நில உரிமையாளர் எப்படிச் செய்வாரோ அதைப்போல பொறுப்புடன் செய்வதும், கையாள்வதும் என்பதே முழு சேவை மேலாண்மை என்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள வரையறை ஆகும்..

சொத்து உரிமையாளருக்கு சொத்து மேலாளர்கள் செய்ய வேண்டிய முதல் பொறுப்பு என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் வாடகை வசூலித்து அதை சொத்து உரிமையாளருக்கு சரியாக அனுப்பி வைப்பது..வாடகை வசூலிப்பது தவிர ,எவ்வளவு வாடகையை உங்களது வீட்டிற்கு நிர்ணயிக்கலாம் என்பதிலும் சொத்து மேலாளர் வீட்டு உரிமையாளருக்கு உதவி செய்கிறார்.நில உரிமையாளர்கள் தங்கள் குத்தகைதாரர் களிடமிருந்து பெறும் வாடகை வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்..இதுபோன்ற உங்கள் முதலீட்டு வரிகளை தாக்கல் செய்வதிலும் சொத்து மேலாளர் உங்களுக்கு உதவ முடியும்.

Next Story