வீட்டின் அளவை அதிகரிக்க உதவும் பால்கனிகள்


வீட்டின் அளவை அதிகரிக்க உதவும் பால்கனிகள்
x

நீங்கள் ஒரு சிறிய அடுக்கக குடியிருப்பில் வசிப்போர் எனும் பட்சத்தில் வீட்டின் அளவை அதாவது வரவேற்பறை படுக்கையறை சமையலறை போன்றவற்றின் அளவை கூட்ட அங்கு இருக்கும் பால்கனிகளை வீட்டோடு இணைப்பதின் மூலம் பெரிதுபடுத்திக் கொள்ள முடியும். வீட்டை பெரிதுபடுத்தி கட்ட வசதி இல்லாத போதும், அனுமதி கிடைக்காது எனும் பட்சத்திலும் பால்கனிகளை வீட்டின் அறைகளோடு சேர்த்து வீட்டின் அறையின் அளவை பெரிதுபடுத்திக் கொள்ளலாம். அதற்கான குறிப்புகளை கீழ் வருமாறு இக்கட்டுரையில் பார்ப்போம்.

பால்கனிகளின் வெளிப்புற சுவர்களில் பிவிசி பிளைன்ட் அல்லது மரத்தினால் ஆன ஸ்கிரீன், வென்ஷன் பிளைன்ட்ஸ், பிளாஸ்டிக் ஷீட் மற்றும் வெட்டிவேர் மூங்கில் தட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தி பால்கனியின் வெளிப்புற சுவரை மூடி அறையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள முடியும். மரம் பிளாஸ்டிக் போன்றவற்றினால் செய்யப்படும் தடுப்புகள் கடினமானதாகவும் உறுதியானதாகவும் இருப்பதால் சுவரைப் போலவே நிரந்தரமான தடுப்பிற்கு இவற்றை உபயோகிக்கலாம். ஆனால் தற்காலிக தடுப்பாக வைத்துக்கொள்ளும் பட்சத்தில் கைகளினால் பின்னப்பட்ட மூங்கில் ஜூட் வெட்டிவேர் போன்றவற்றின் தட்டிகளை பயன்படுத்தலாம். வரவேற்பறையில் இவ்வாறு தடுக்கப்பட்ட இடங்களில் ஊஞ்சல் போடலாம், சுவற்றிலிருந்து தொங்கும் ஜுலாக்களை பயன்படுத்தலாம், சிறு தொட்டிகளில் செடிகள் வைத்து அலங்கரிக்கலாம் மற்றும் சாப்பாட்டு மேஜையை கூட இந்த இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

படுக்கை அறையில் இந்த இடத்தை ஒரு சிறிய படிக்கும் டேபிள் சேர் போன்றவற்றை போட்டுக் கொள்ளவும், இரண்டு பேர் அமர்ந்து பேசக்கூடியவாறு அலங்கரிக்கவும், குழந்தைகள் இருப்பின் அவர்களுடைய படிக்கும் இடமாக அதை மாற்றி உபயோகிக்கவும் செய்யலாம். இதே சமையலறையுடன் இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் வாஷிங் மெஷின் வைப்பதற்கும், கிரைண்டர் வைத்துக் கொள்வதற்கும், வீட்டிற்கு எப்போதாவது மட்டும் தேவைப்படும் பொருட்களை சேமித்து வைக்கவும் பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக், மரம் மற்றும் தட்டிகள் உபயோகப்படுத்துவது போலவே நிரந்தர தடுப்பாக இரும்பு கிரில்களையும் பயன்படுத்தலாம். பால்கனி கைப்பிடி சுவர் இருந்தாலும் அல்லது பாதி உயரத்திற்கு கிரில் இருந்தாலும் அவற்றை முழுமையாக துளைகள் அதிகம் இல்லாத கிரில் கொண்டு மூடி அதே போல் மேற்கூறையிலும் இரும்பு கிரில் கொண்டு மூடி விடலாம். சிலர் இந்த கிரில்களின் உட்பக்கத்தில் மரம் பிவிசி மற்றும் தட்டிகளை கொண்டு மூடி விடுவர். இது மனிதர் யாரும் பால்கனி மூலமாக வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும் பாதுகாப்பாக அமைகிறது.

மோட்டரைஸ்ட் பிளைன்ட்ஸ்: பொதுவாக பிளாஸ்டிக் மரம் மற்றும் வேர்களினால் ஆன தட்டிகள் காற்றில் அசையவும் மழை கொசு போன்றவற்றை வீட்டில் அனுமதிக்கவும் கூடும். ஆனால் மோட்டரைஸ்டு பிளைன்ஸ் என்பது ஒரு வெளிப்புற சட்டத்தில் பதியப்பட்டு இருப்பதால் இது வீட்டினுள் மழை, வெயில், காற்று மற்றும் கொசு போன்றவற்றை அனுமதிப்பதில்லை. இந்தப் பகுதிகளில் ஏசி போட்டுக் கொள்ளவும் முடியும். இந்த மாதிரியான ப்ளைண்டுகள் ஸ்டீல் அலுமினியம் பிவிசி மெஷ் போன்றவற்றினால் செய்யப்பட்டதாக இருக்கும். இந்த பிளைண்டுகள் ஒரு பட்டனை தட்டியவுடன் மூடிக்கொள்ளவும் திறந்து கொள்ளவும் கூடிய வசதிகளில் மோட்டார் பொருத்தப்பட்டு வருகிறது. இது வெளிப்புற இடத்தை முழுமையாக வீட்டின் உட்புறமாக மாற்றி விடுகிறது.

இம்மாதிரி பால்கனியை வீட்டின் அறைகளோடு இணைக்கும் பொழுது அறையின் அதே தரையை பால்கனியிலும் தொடர்ந்து இருக்குமாறு அமைத்தால் அறையின் தோற்றம் பெரிதாகவும் தெரியும். அதேபோல் அறையின் பர்னிச்சர்களையும் பால்கனியோடு இணைத்தது போலவே அமைக்க வேண்டும். அப்பொழுது பால்கனியுடன் சேர்ந்து வரவேற்பறை மிகப் பெரியதான அறையாக காட்சியளிக்கும்.


Next Story