வண்ணங்கள் வீட்டை முழுமையாக்குவது


வண்ணங்கள் வீட்டை முழுமையாக்குவது
x

நிறங்கள் பற்றிய ஆராய்ச்சி காலம் காலமாகவே உலகில் நடந்து வருவது தான். கலைஞர்களும் உளவியலாளர்களும் வீட்டை அலங்கரிக்கும் இன்டீரியர் டிசைனர்களும் நிறங்களுக்கு அதிக முக்கியத்துவமும் அதற்கான அர்த்தங்களையும் கூறி வருகின்றனர். அந்த வகையில் நம் வீட்டின் சுவர்களுக்கு நாம் வண்ணங்களை தேர்வு செய்யும் பொழுது சில விஷயங்களை மனதில் கொண்டு தேர்வு செய்வது நல்லது. பொதுவாக வீட்டை கட்டி முடித்து எல்லா வேலைகளும் முடிந்த பின்பே கடைசியாக வீட்டிற்கு வண்ணம் அடிப்போம். அப்பொழுது தான் வீடு முழுமையை அடைகிறது. நம் எண்ணங்களையும் மனதின் அழகையும் வெளிப்படுத்தக் கூடியதாகவே வண்ணங்கள் நம் வீட்டில் அமைவதாக கூறுகின்றனர். சரி, இனி வண்ணங்களும் அவற்றுக்கான குணங்களையும் பற்றி கீழ் வருமாறு பார்ப்போம்.

வெப்பமூட்டும் நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் மஞ்சள் கலந்த பச்சை போன்றவை மிகவும் அழகான, வெப்பத்தை உண்டு செய்ய கூடிய நிறங்களாகும்.

சிவப்பு: சிவப்பு நிறம் மிகவும் ஆடம்பரமான நேர்த்தியான தன்மையை கொடுக்கக்கூடியது. வீட்டின் வரவேற்பறையில் இளம் சிவப்பு நிறம் இருந்தால் அங்கு உள்ளவர்கள் உற்சாகத்தையும் தைரியத்தையும் எல்லோரிடமும் கலகலப்பாக பேசக்கூடிய திறனையும் அனுபவிப்பர். வருபவர்களை ஈர்க்கக்கூடிய ஒரு நிறம் சிவப்பு. ஒருவரின் இதயத்துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் சற்றே கூட்டக் கூடியது சிவப்பு நிறம்.

ஆரஞ்சு நிறம்: ஆரஞ்சு நிறம் சக்தியை குறிக்கக் கூடியது. இந்த நிறம் இருக்கும் அறையில் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அனுபவிக்க முடியும். இதை குழந்தைகளின் அறைகள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் அறைகளில் அடிப்பது நல்லது.

மஞ்சள்: சூரிய ஒளியை பிரதிபலிக்கக் கூடியது மற்றும் சந்தோஷத்தையும் அளிக்கக்கூடிய நிறம் மஞ்சள். ஒருவரை நேர்மறையாக சிந்திக்கவும் மிக மகிழ்ச்சியாக வாய்விட்டு சிரித்து நம்பிக்கையுடன் திகழச் செய்வது மஞ்சள் நிறம். கண்களை உறுத்தாத வெளிர்மஞ்சள் நிறங்கள் இந்த குணங்களை அங்கு வசிப்பவர்களின் மனதில் ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றனர்.

குளிர்ச்சியான நிறங்கள்: இந்த நிறங்கள் வெப்பம் தரும் மேற்கூறிய நிறங்களுக்கு எதிரானவை. பர்புள், நீளம் மற்றும் பச்சை நிறம் இந்த வகையை சார்ந்த நிறங்களாகும். இந்த நிறங்கள் மனதை அமைதி படுத்தவும் ஒரு இடத்தை பெரிதாக காட்டுவதற்கும் உதவுகிறது.

பர்பிள் நிறம்: இந்த நிறம் ஆக்கத் திறனையும் ஒரு விதமான செழிப்பையும் ஆடம்பரத்தையும் காட்டக்கூடிய நிறம். இதில் அடர்த்தியான பர்பிள், அதாவது வயலட் நிறம் செல்வ செழிப்பையும் நேர்த்தியையும் கொடுக்கக் கூடியது. பற்பலில் இளம் நிறங்களான லைலாக் மற்றும் லாவண்டர் போன்றவை மனதை அமைதிப்படுத்தி ஓய்வான லேசாக உணரக்கூடிய தன்மையை வழங்கக்கூடியது. பர்பிள் நிறங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடித்ததாகவும் கணவன் மனைவிக்குள் கவர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கக்கூடிய நிறங்கள். எனவே இந்த நிறத்தை படுக்கையறை சமையலறை பூஜை அறை போன்றவைகளிலும் உபயோகிக்கலாம்.

நீல நிறம்: இது சிவப்பு நிறத்திற்கு நேர் எதிரானது. இந்த நிறம் நம் இதய துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் குறைக்க கூடியது. மனதை அமைதி படுத்த கூடிய மென்மையான ஒரு நிறம் நீலம். இது படுக்கையறை குளியலறை வரவேற்பறை மற்றும் சமையலறையில் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த நீல நிறத்தில் பலவிதமான வகைகள் கிடைக்கும். அவற்றில் மென்மையான வெளிர் நீல நிறத்தை மட்டுமே நாம் தேர்ந்தெடுப்பது நல்லது. நீளத்தில் அடர்த்தியான நிறம் தனிமையையும் சோகத்தையும் உருவாக்கக்கூடியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பச்சை நிறம்: பச்சை நிறம் இயற்கையை குறிக்கக் கூடியது. மனதின் ஓய்வு நிலையையும் மனதிற்கு அமைதியையும் கொடுக்கக் கூடியது. தோழமையை வளர்க்கக் கூடியதும் இந்த நிறமே. பச்சை நிறம், நீளம் மற்றும் மஞ்சள் நிறத்தின் கலவை என்பதால் அந்த இரண்டு நிறங்களின் தன்மையையும் இது கொண்டிருக்கும். வெளிர் பச்சை நிறத்தை வீட்டின் எந்த சுவற்றிற்கு வேண்டுமானாலும் நாம் அடிக்கலாம்.

மிதமான நிறங்கள்: வெள்ளை கருப்பு மற்றும் சாம்பல் நிறங்கள் பொதுவாக எந்த இடத்திற்கும் பொருத்தமாக இருக்கும். வெள்ளையும் கருப்பும் இணைந்தது கிரே அல்லது சாம்பல் நிறம். வெள்ளை நிறம் பெண்மைக்கு உரியதாகவும் அமைதி மற்றும் தூய்மையை குறிக்கக் கூடியதாகவும் உள்ள நிறம். கருப்பு என்பது ஆண்மையை, சக்தியை குறிக்கக் கூடியது. இது இரண்டும் சேர்ந்த சாம்பல் நிறம் என்பது ஒரு சமநிலையை குறிக்கக்கூடியது. வெளிர் சாம்பல் நிறம் மற்றும் அடர்த்தியான சாம்பல் நிறங்களை தேவைக்கேற்ப பெரிய மற்றும் சிறிய சுவர்களுக்கு வண்ணங்களாக உபயோகிக்கலாம்.

மொத்தத்தில் ஏதோ ஒரு பிடித்த நிறத்தை தேர்வு செய்தோம் வீட்டின் சுவர்களுக்கு அடித்தோம் என்று இல்லாமல் அவரவரின் மனநிலையை மனதில் கொண்டு வண்ணங்களை தேர்வு செய்வது நல்லது.


Next Story