உபயோகிப்பாளருக்கு பல வண்ண ஒயர்கள் காட்டும் எச்சரிக்கை


உபயோகிப்பாளருக்கு பல வண்ண ஒயர்கள் காட்டும் எச்சரிக்கை
x

கட்டிடங்களில் சப்ளை ஆகக்கூடிய மின்சாரத்தின் அளவை பொறுத்து, குறிப்பிட்ட மின்சாதனம் ஏற்கக்கூடிய அதிகபட்ச மின் அழுத்தத்தை கணக்கிட்டு அதற்கேற்ப மின்சார ஒயர்கள் வாங்கப்படவேண்டும். மேலும், ஒயரிங் பணிகளை செய்யும்போது எந்த இடங்களில், எவ்வகை வண்ண ஒயர்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று மின் பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மெயின் எனப்படும் பிரதான சுவிட்ச் பகுதியில் இருந்து, வீட்டின் அனைத்து அறைகளுக்கும் மூன்று விதமான ஒயர்கள் எடுத்துச்செல்லப்படும். அவற்றில் ஒரு ஒயர் லைன் என்றும், மற்றொரு ஒயர் நியூட்ரல் என்றும் மூன்றாவது ஒயர் எர்த் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வீடுகளின் ஒயரிங் அமைப்பில் ஏற்படும் கவனக்குறைவுகள், திறமை குறைவான பணியாளர்கள், தரம் இல்லாத பொருட்கள் ஆகியவற்றின் காரணமாக கட்டிடங்களில் மின்கசிவு மற்றும் மின் தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. அதனால், அனைவருமே வீடுகளில் செய்யப்படும் மின்சார ஒயரிங் பணிகள் பற்றிய அடிப்படை விபரங்களை தெரிந்து கொள்வது பாதுகாப்பானது.

நகர்ப்புறங்களில் அவ்வப்போது மின்னழுத்த தாழ்வு உண்டாவதன் காரணமாக மின் சாதனங்கள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, ஒயரிங் அமைப்புகளில் அனுபவமிக்க எலக்ட்ரீஷியன்கள் லைன் ஒயர்களை கறுப்பு நிறத்திலும், நியூட்ரல் ஒயர்களை சிவப்பு நிறத்திலும், எர்த்திங் ஒயர்களை பச்சை நிறத்திலும் அமைப்பது முறை. மின்சார ஒயர்கள் தயாரிப்பில் பல நிறுவனங்கள் உள்ள நிலையில், சந்தையில் வெவ்வேறு வண்ண ஒயர்கள் கிடைக்கின்றன. ஒயரிங் பணிகளை மேற்கண்ட பல்வேறு வண்ண ஒயர்களை பயன்படுத்தி செய்திருக்கும் பட்சத்தில், ஏதாவது பழுது ஏற்படும் சமயங்களில் முதலில் எந்த ஒயரை துண்டிப்பது என்பதில் குழப்பம் ஏற்படலாம் என்பதை எலக்ட்ரீஷியன்கள் குறிப்பிடுகிறார்கள்.

எந்த பகுதிக்கு எவ்வளவு திறன் கொண்ட ஒயர் இருக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்திக்கொண்டு அதற்கான பொருட்களை வாங்க வேண்டும் தரம் குறைந்த பொருட்களை வாங்கினால், ஒயரின் மேல்புற உறை விரைவில் பாதிப்படையும். அதனால், ஒயரின் மேல் அச்சிடப்பட்டுள்ள மேல்உறை குறித்த தரக்கட்டுப்பாட்டு விபரங்களை கவனிக்க வேண்டும்.

வழக்கமாக, மின் பணியாளர்கள் டெஸ்டர் கொண்டு ஆராய்ந்து, ஒயர்களின் வேறுபாட்டை அறிந்துகொள்ள வேண்டியதாக இருக்கும். அவசர காலங்களில் வீட்டில் உள்ளவர்களும் அவற்றை அறிந்து கொள்ளும் வகையில், வண்ணங்களை சரியாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்து கொள்வது நல்லது.

ஒருவேளை ஒயரிங் இணைப்புகளில் பிரச்னை ஏற்படும் சமயங்களில் அதை சோதிக்க ஒயர்களுக்குள் இருந்து வெளிப்படும் செப்பு கம்பியை எக்காரணம் கொண்டும் தொட்டுவிடுவது கூடாது. குறிப்பாக, மின்சார ஒயரின் மேல் பகுதி சேதமடைந்து இருக்கும் பட்சத்தில் அருகில் செல்வதைக்கூட தவிர்ப்பது முக்கியம். உடனடியாக, எலக்ட்ரீஷியன்களை அழைத்து சிக்கலை சரி செய்வதுதான் பாதுகாப்பானது.


Next Story