எனக்கு நம்ப முடியாத ஆதரவை கொடுத்தது அவர்கள் 2 பேர்தான் - ஷிவம் துபே


எனக்கு நம்ப முடியாத ஆதரவை கொடுத்தது அவர்கள் 2 பேர்தான் - ஷிவம் துபே
x

டி20 உலகக்கோப்பை பயணம் தமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளதாக ஷிவம் துபே கூறியுள்ளார்.

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது. அந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

மேலும் இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் அனைவருமே வெற்றியில் முக்கிய பங்காற்றினர். அந்த வரிசையில் ஷிவம் துபே ஆரம்பக்கட்ட போட்டிகளில் தடுமாற்றமாக செயல்பட்டார்.

ஆனால் முக்கியமான இறுதிப்போட்டியில் முக்கிய நேரத்தில் களமிறங்கிய அவர் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 27 (16) ரன்களை 168.75 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்து வெற்றியில் தன்னுடைய பங்கை ஆற்றினார்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை பயணம் தமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளதாக ஷிவம் துபே கூறியுள்ளார். அதே சமயம் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கொடுத்த அதிகப்படியான ஆதரவாலேயே தம்மால் பைனலில் அசத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"உலகக் கோப்பை பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. இறுதிப்போட்டி மிகவும் முக்கிய தருணமாக அமைந்தது. அன்றைய நாளில் நானும் அணியுடன் சேர்ந்து வெற்றியில் பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன். உலகக்கோப்பையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு பாடமாகும். பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உத்வேகப்படுத்தியது. அது எனது மன வலிமை மற்றும் விடாமுயற்சியின் சோதனை.

எனக்கு அசைக்க முடியாத நம்ப முடியாத ஆதரவை கொடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நேர்மறையாக இருந்து கடினமாக உழைக்க ஊக்குவித்தனர். எனது திறமை மீது நம்பிக்கை வைத்த அவர்களின் வழிகாட்டுதல் என்னை நம்புவதற்கு உதவியது. இந்த அனுபவம் வருங்காலத்தில் அணியின் வெற்றிக்காக என்னை இன்னும் வலுவாக மேம்படுத்த உதவும் என்று நம்புகிறேன்" என கூறினார்.

1 More update

Next Story