20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்காளதேசம்


20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்காளதேசம்
x

அரைசதம் அடித்த வங்காளதேச வீரர் நஜ்முல் ஹூசைன்.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வங்காளதேச அணி வரலாறு படைத்தது.

சட்டோகிராம்,

வங்காளதேசம்- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட்டும் (38 ரன்), கேப்டன் ஜோஸ் பட்லரும் (67 ரன், 42 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) வலுவான தொடக்கம் தந்தனர்.

ஆனால் பின்னால் வந்த வீரர்கள் இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. டேவிட் மலான் (4 ரன்), சாம் கர்ரன் (6 ரன்) ஏமாற்றம் அளித்தனர். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 156 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. வங்காளதேசம் தரப்பில் ஹசன் மக்முத் 2 விக்கெட்டும், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷகிப் அல்-ஹசன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய வங்காளதேச அணி தொடக்கம் முதலே அதிரடியில் ஈடுபட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோனி தலுக்தர் 21 ரன்னிலும், லிட்டான் தாஸ் 12 ரன்னிலும், தவ்கித் ஹிரிடாய் 24 ரன்னிலும் வெளியேறினர். 3-வது வரிசையில் களம் புகுந்த நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 30 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 51 ரன் விளாசி உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தியதுடன் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்.

அதன் பிறகு கேப்டன் ஷகிப் அல்-ஹசன் இலக்கை எட்ட வைத்தார். அந்த அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் உலக சாம்பியன் இங்கிலாந்தை வங்காளதேச அணி முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. ஷகிப் அல்-ஹசன் 34 ரன்களுடனும், அபிப் ஹூசைன் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வங்காளதேச வீரர் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி மிர்புரில் நாளை மறுநாள் நடக்கிறது.


Next Story