பந்தை சேதப்படுத்திய சர்ச்சை: ஆஸ்திரேலிய கேப்டன் பதவி ராஜினாமா


பந்தை சேதப்படுத்திய சர்ச்சை: ஆஸ்திரேலிய கேப்டன் பதவி ராஜினாமா
x
தினத்தந்தி 25 March 2018 11:30 PM GMT (Updated: 25 March 2018 8:08 PM GMT)

ஆஸ்திரேலிய கேப்டன் பதவியை ஸ்டீவன் சுமித் ராஜினாமா செய்தார்.

கேப்டவுன்,

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து ஆஸ்திரேலிய கேப்டன் பதவியை ஸ்டீவன் சுமித் ராஜினாமா செய்தார். அவருக்கு ஒரு டெஸ்டில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்து இருக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்க பயணம் தொடங்கியதில் இருந்தே பலவிதமான சர்ச்சைகள் பூதாகரமாக வெடித்துக் கொண்டே இருக்கின்றன. தன் மனைவியை திட்டியதாக குயின்டான் டி காக்கை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடிப்பது போல் பாய்ந்தது, ஸ்டீவன் சுமித்தை இடித்ததால் 2 டெஸ்டில் தடை பெற்ற தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா பிறகு அப்பீல் செய்து தப்பித்தது, மைதானத்தில் ரசிகருடன் வார்னர் மல்லுகட்டி நின்றது என்று சலசலப்புகளுக்கு பஞ்சமே கிடையாது. இதனாலேயே இந்த தொடர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இருக்கிறது.

சர்ச்சைகளின் உச்சக்கட்டமாக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டின் 3-வது நாளான நேற்று முன்தினம் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் சிக்கினார். சொரசொரப்பான காகிதம் போன்ற மஞ்சள் நிற பொருளை தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பான்கிராப்ட் அதன் மீது பந்தை ரகசியமாக தேய்த்து அதன் தன்மையை மாற்றி இருக்கிறார். அந்த மஞ்சள் நிற பொருளை தனது உள்ளாடைக்குள் போட்ட போது அது வீடியோவில் பதிவானது. சிறிது நேரத்திலேயே அந்த புகைப்படம் சமூக வலைதளத்திலும் பரவியது. பந்தை சேதப்படுத்தி பித்தலாட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பின. இதையடுத்து இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது.

பான்கிராப்ட் மூலம் பந்தை சேதப்படுத்தி கூட்டுச்சதியில் ஈடுபட்டதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். ஸ்டீவன் சுமித் நிருபர்களிடம் கூறுகையில், ‘உணவு இடைவேளையின் போது இதற்கான திட்டத்தை வகுத்தோம். கேப்டன் என்ற முறையில் இதற்கு நானே பொறுப்பு. இது பற்றி அணியில் விளையாடும் முன்னணி வீரர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களின் பெயரை வெளியிட விரும்பவில்லை. எப்படி என்றாலும் பான்கிராப்டின் செயல் வருந்தத்தக்கது. ஆனால் பயிற்சியாளர் குழுவுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது.

இந்த டெஸ்ட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த தொடர் முழுவதும் பந்து நன்கு ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆனது. ஆனால் இந்த போட்டியில் நாங்கள் பயன்படுத்திய பந்து அது மாதிரி ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகவில்லை. அதனால் இந்த மோசமான தந்திரத்தை கையாண்டு விட்டோம். அதே சமயம் இந்த பொருளை வைத்து தேய்த்ததால் பந்தின் தன்மை மாறவில்லை. எனது கேப்டன்ஷிப்பில் முதல்முறையாக இத்தகைய சம்பவம் அரங்கேறி விட்டது. இனி இது போன்று நிச்சயம் நடக்காது என்று உறுதி அளிக்கிறேன்’ என்றார்.

வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தியதை ஸ்டீவன் சுமித் ஒப்புக் கொண்ட பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்த நாட்டு ஊடகங்கள் போர்க்கொடி தூக்கின. அணியின் கவுரவத்தை ஸ்டீவன் சுமித் உள்ளிட்டோர் சீர்குலைத்து விட்டதாக சாடின.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லும் கொதித்து போனார். அவர் கூறுகையில், ‘இன்று காலை (நேற்று) விழித்ததும் தென்ஆப்பிரிக்காவில் வந்த தகவல்கள் எனக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளித்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த மாதிரி ஒரு ஏமாற்று வித்தையில் ஈடுபட்டது என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விஷயமாகவே தோன்றுகிறது’ என்று கூறினார். அதன் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பேசி தனது அதிருப்தியை கொட்டித்தீர்த்த அவர் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தும்படியும், உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவன் சுமித்தை நீக்கும்படி உத்தரவிட்டார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லாண்ட் கூறுகையில், ‘இந்த மாதிரியான செயல்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெருமைக்குரியது அல்ல. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இது ஒரு மோசமான நாள். நாங்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நடந்தது என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்வதற்காக கிரிக்கெட் வாரியத்தின் ஒரு குழுவை தென்ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி உள்ளோம். அவர்கள் இது பற்றி முழுமையாக விசாரிப்பார்கள்’ என்றார்.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின்படி, பந்தை சேதப்படுத்திய சர்ச்சை எதிரொலியாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது பொறுப்புகளை உடனடியாக ராஜினாமா செய்தனர். இதையடுத்து கேப்டவுன் டெஸ்டில் எஞ்சிய நாட்கள் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் பொறுப்பு கேப்டனாக தொடருவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இதற்கிடையே பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் விசாரணை மேற்கொண்டார். இதன் முடிவில் தவறை ஒப்புக் கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் என்ற முறையில் ஸ்டீவன் சுமித்துக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமும், ஒரு டெஸ்டில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 28 வயதான சுமித் விளையாட முடியாது. பான்கிராப்ட்டுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது.

சுமித், வார்னருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுமா?

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மீதான பந்தை சேதப்படுத்திய பிரச்சினை குறித்து விசாரிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறைகள் குழு தலைவர் இயான் ராய், அணியின் செயல்திறன் மேலாளர் ஹோவர்ட் ஆகியோர் தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தால் உலக கிரிக்கெட் அரங்கில் கோலோச்சி வரும் ஆஸ்திரேலிய அணியின் புகழுக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. எனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஸ்டீவன் சுமித்துக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த டேவிட் வார்னருக்கும் ஆயுட்கால தடை வரை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் அணியில் நீடிப்பாரா சுமித்?

உலகின் ‘நம்பர் ஒன்’ டெஸ்ட் வீரரான ஸ்டீவன் சுமித், ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படுகிறார். அவரது கேப்டன்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணி 34 டெஸ்டுகளில் விளையாடி 18-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 6-ல் டிராவும் கண்டுள்ளது. 51 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள சுமித் 25 ஆட்டங்களில் வெற்றியை தேடித்தந்திருக்கிறார்.

தற்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஆஸ்திரேலிய கேப்டன் பதவியை பறிகொடுத்துள்ள ஸ்டீவன் சுமித், விரைவில் தொடங்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். இதனால் ராஜஸ்தான் அணியில் அவர் நீடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைப்படி செயல்படுவோம் என்று ராஜஸ்தான் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போல் பந்தை சேதப்படுத்தியதில் டேவிட் வார்னரும் உடந்தை என்று கூறப்படுவதால் அவர் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நேற்றிரவு கூறுகையில், ‘ஐ.பி.எல். தொடரில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் நீடிப்பார்களா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஓரிரு நாட்களில் முடிவு எடுப்போம்’ என்றார்.

Next Story