இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி


இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி
x
தினத்தந்தி 17 March 2019 10:25 PM GMT (Updated: 17 March 2019 10:25 PM GMT)

இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்த போது, மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்த மின்கோபுரம் திடீரென பழுதானது. மின்விளக்கு அணைந்ததால் வீரர்கள் அனைவரும் வெளியேறினர். நீண்ட நேரம் ஆகியும் பழுதை சரி செய்ய முடியாததால் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. 28 ஓவர்களில் தென்ஆப்பிரிக்காவுக்கு 95 ரன்களே போதுமானதாக இருந்தது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்க்ராம் அரைசதம் (67 ரன்) அடித்து களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி ஒரு தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் டுமினி, இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு இது உள்ளூரில் பங்கேற்ற கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்தது.


Next Story