2024 டி20 உலகக்கோப்பை; இந்த அணி தான் கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளது - கவுதம் கம்பீர் கருத்து


2024 டி20 உலகக்கோப்பை; இந்த அணி தான் கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளது - கவுதம் கம்பீர் கருத்து
x

Image courtesy: PTI

2024 டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.

மும்பை,

2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் குறித்த தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டடது. அதன்படி தொடரில் கலந்து கொள்ள இருக்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நமீபியா அணிகளும், குரூப் சி-யில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா,பாப்புவா நியூ கினியா அணிகளும், குரூப் டி-யில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த அட்டவணையில் தென் ஆப்பிரிக்காவுக்கு மிகவும் கடினமான குரூப் கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் கம்பீர் இம்முறை நெதர்லாந்தை அந்த அணி வீழ்த்தும் என நம்புவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பார்ப்பதற்கு இது கடினமாக தெரிகிறது. ஆனால் தென் ஆப்பிரிக்கா இம்முறை ஆபத்திலிருந்து தப்பலாம். அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் நீங்கள் சூப்பர் 8 சுற்றில் நல்ல அணிகளை பார்க்க விரும்புவீர்கள். மேலும் சவால் இருக்கும் இடத்திலேயே போட்டியிட விரும்புவீர்கள்.

இருப்பினும் இந்த குரூப் தென் ஆபிரிக்காவுக்கு எளிதாக இருக்கப்போவதில்லை. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே கம்பேக் கொடுப்பதற்கு குறைவான வாய்ப்புகளே இருக்கும். அங்கே யாராவது லேசான அழுத்தத்தை கொடுத்தாலும் உங்களால் கம்பேக் கொடுப்பது கடினமாகி விடும். இருப்பினும் இம்முறை தென் ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடி சூப்பர் 8 சுற்றுக்கு வரும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story