2வது ஆஷஸ் டெஸ்ட்; மொயீன் அலி விலகல்...பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து...!
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2வது போட்டி நாளை தொடங்குகிறது.
லண்டன்,
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவற்காக கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே பர்மிங்காமில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது. முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
கடந்த தோல்வியில் இருந்து மீண்டு இங்கிலாந்து இந்த டெஸ்டில் வெற்றி பெற கடுமையாக போராடும். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பேர்ஸ்டோவ், ஜேக் கிராவ்லி, பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ராபின்சன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்டிலும் இங்கிலாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் வேட்கையில் உள்ளது. பேட்டிங்கில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 141 ரன்னும், 2-வது இன்னிங்சில் 65 ரன்னும் குவித்தார்.
இது தவிர ஸ்டீவன் சுமித், டிரெவிஸ் ஹெட், லபுஷேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹாசல்வுட், நாதன் லயன் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக முதல் டெஸ்டில் காயமடைந்த மொயீன் அலிக்கு பதிலாக ஜோஷ் டங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்:-
பென் டக்கட், ஜேக் க்ராவ்லி, ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ஓலி ராபின்சன், ஜோஷ் டங், ஜேம்ஸ் ஆண்டர்சன்