4-வது டி20 போட்டி; வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி..!
இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
டிரினிடாட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நடைபெற்ற முதல் 3 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் 2 வெற்றிகளும், இங்கிலாந்து ஒரு வெற்றியும் பெற்றிருந்தன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லர் 29 பந்துகளில் 55 ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸ் தம்முடைய பங்கிற்கு வெறும் 9 பந்துகளில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். வெளுத்து வாங்கிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சால்ட் 57 பந்துகளில் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்தது. இறுதி கட்டத்தில் அதிரடியில் கலக்கிய லியாம் லிவிங்ஸ்டன் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 54 ரன்கள் அடித்து இறுதி வரை களத்தில் இருந்தார்.
அதை தொடர்ந்து 268 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவேளைகளில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. வெறும் 15.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 192 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 51 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளின் முடிவில் டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.