6-வது உலகக் கோப்பை கிரிக்கெட்: கலவரத்தில் முடிந்த அரைஇறுதி - விசுவரூபம் எடுத்த இலங்கை


6-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்தின.

6-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்தின. 1996-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி முதல் மார்ச் 17-ந்தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் முந்தைய உலகக் கோப்பையில் ஆடிய 9 அணிகளுடன் ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, நெதர்லாந்து ஆகிய அணிகள் புதிய வரவாக கால்பதித்தன. உலகக்கோப்பையில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும்.

இதில் இந்தியாவுக்கு 17 ஆட்டங்களும், பாகிஸ்தானுக்கு 16 ஆட்டங்களும், இலங்கைக்கு 4 ஆட்டங்களும் ஒதுக்கப்பட்டன. இந்திய மண்ணில் 17 ஆட்டங்களும் 17 இடங்களில் நடத்தப்பட்டது ஆச்சரியமான உண்மையாகும்.

பங்கேற்ற 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. 'ஏ' பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, கென்யா, 'பி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதிபெறும்.

எதிர்பார்த்தது போலவே சிறிய அணிகளான அமீரகம், நெதர்லாந்து, கென்யா, ஜிம்பாப்வே வெளியேற்றப்பட்டு பிரதான 8 அணிகளும் கால்இறுதியை எட்டின. கென்யா லீக் சுற்றை தாண்டாவிட்டாலும் வெஸ்ட் இண்டீசை 93 ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றது கவனத்தை ஈர்த்தது.

முகமது அசாருதீன் தலைமையில் களம் இறங்கிய இந்தியா லீக்கில் இலங்கை, ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. வெஸ்ட் இண்டீஸ், கென்யா, ஜிம்பாப்வே அணிகளை தோற்கடித்து கால்இறுதியை எட்டியது. பெங்களூருவில் நடந்த கால்இறுதியில் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை விரட்டியடித்தது. நவ்ஜோத் சித்து (93 ரன்), அஜய் ஜடேஜாவின் (45 ரன், 25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடியால் இந்தியா 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் சேர்க்க, அந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 248 ரன்களில் அடங்கியது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த போது ரசிகர்களால் கலவரம் மூண்டதால் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா- இலங்கை இடையிலான பரபரப்பான அரைஇறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது. ஏறக்குறைய 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருந்தனர். இதில் முதலில் பேட் செய்த இலங்கை 8 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. அடுத்து 252 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் (65 ரன்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. 34.1 ஓவர்களில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 120 ரன்களுடன் தோல்வியின் பிடியில் சிக்கி தவித்த போது, ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் பாட்டில், பழங்களை மைதானத்திற்குள் தூக்கி வீசினர். கேலரியின் ஒரு பகுதியில் பேப்பர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினர். ரசிகர்களை அமைதிப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இலங்கை வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்தியா பரிதாபமாக வெளியேறியது.

அர்ஜூனா ரணதுங்கா தலைமையில் அடியெடுத்து வைத்த இலங்கை அணி விசுவரூப எழுச்சி பெற்றது. முதல் 15 ஓவருக்குள் 2 பீல்டர் மட்டுமே குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே நிற்கும் பீல்டிங் கட்டுப்பாட்டை கனகச்சிதமாக பயன்படுத்தி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சனத் ஜெயசூர்யாவும், கலுவிதரனாவும் ரன் மழை பொழிந்தனர். அவர்களின் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள், இந்தியாவுக்கு எதிராக 117 ரன்களும், கென்யாவுக்கு எதிராக 123 ரன்களும், கால்இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 121 ரன்களும் முதல் 15 ஓவர்களில் திரட்டி வியக்க வைத்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இலங்கைக்கு செல்ல மறுத்ததால் அவ்விரு ஆட்டங்களிலும் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கால்இறுதியில் இங்கிலாந்தையும், அரைஇறுதியில் இந்தியாவையும் தோற்கடித்து முதல்முறையாக இறுதிசுற்றுக்குள் நுழைந்தது.

இன்னொரு பிரிவில் தென்ஆப்பிரிக்கா லீக் சுற்றில் 5 ஆட்டங்களிலும் வென்று கம்பீரமாக கால்இறுதிக்கு வந்தது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் 188 ரன்கள் குவித்தார். இது உலகக் கோப்பை போட்டியில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக 2015-ம் ஆண்டு வரை நீடித்தது. ஆனால் கால்இறுதியில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் பிரையன் லாராவின் சதத்திற்கு முன் தென்ஆப்பிரிக்கா 'சரண்' அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி அரைஇறுதியில் 5 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதில் 208 ரன் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 165 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த 37 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெற்றியை கோட்டை விட்டது.

மார்ச் 19-ந்தேதி ஆஸ்திரேலியா- இலங்கை இடையிலான இறுதிப்போட்டி லாகூரில் அரங்கேறியது. முந்தைய 5 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்ற நிலையில் இலங்கை கேப்டன் ரணதுங்கா 'டாஸ்' ஜெயித்து தைரியமாக பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மார்க் டெய்லர் 74 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடி முதல்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. அரவிந்த டி சில்வா 107 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். அவரே ஆட்டநாயகன் விருதையும் வாங்கினார். 221 ரன்களுடன் 7 விக்கெட்டும் வீழ்த்திய இலங்கையின் ஜெயசூர்யா தொடர்நாயகன் விருதை பெற்றார்.

கடந்த 5 உலகக் கோப்பை தொடர்களில் வெறும் 4 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்ற இலங்கை அணி இந்த முறை ராட்சச அணியாக உருவெடுத்து மிரட்டியது. ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. கென்யாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குவித்த 5 விக்கெட்டுக்கு 398 ரன்கள், ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக 2006-ம் ஆண்டு ஏப்ரல் வரை நீடித்தது.

இந்த உலகக் கோப்பையில் இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் 7 ஆட்டத்தில் 2 சதம், 3 அரைசதம் உள்பட 523 ரன்களுடன் ரன்குவிப்பிலும், அனில் கும்பிளே 15 விக்கெட்டுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலிலும் முதலிடம் பிடித்தனர்.


Next Story