வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்பின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு


வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்பின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு
x

image courtesy; AFP

தினத்தந்தி 2 Feb 2024 9:53 AM GMT (Updated: 2 Feb 2024 11:02 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார்.

செயின்ட் ஜான்ஸ் [ஆன்டிகுவா],

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய ஷமர் ஜோசப் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் 2 போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 13 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருதையும் தட்டி சென்றார்.

முன்னதாக இப்போட்டியில் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது அவருடைய பாதம் மிட்சேல் ஸ்டார்க் வீசிய யார்க்கர் பந்தில் காயமடைந்தது. அதனால் வலியால் துடித்த அவர் மேற்கொண்டு பேட்டிங் செய்ய முடியாமல் பாதியிலேயே வெளியேறினார். அதன் காரணமாக முக்கியமான 2வது இன்னிங்சில் விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் முதலுதவியை மட்டும் எடுத்துக்கொண்டு அட்டகாசமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற உதவினார்.

வறுமை காரணமாக மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பாதுகாவலராக வேலை செய்து வந்த ஷமர் ஜோசப் வீணான பாட்டில்கள் மற்றும் பழங்களை பந்தாக பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டை தொடங்கினார். அப்படியே படிப்படியாக பார்க் கிளப் அணிக்காக 2வது டிவிஷன் போட்டிகளில் விளையாடிய அவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோமரியா செபார்ட் உதவியுடன் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதில் அசத்தியதால் தற்போது சர்வதேச அரங்கிலும் அறிமுகமாகியுள்ள அவர் முதல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொடுத்த ஷமர் ஜோசப்பின் உரிமை ஒப்பந்தத்தை தற்போது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சர்வதேச ரிட்டைனர் ஒப்பந்தமாக மேம்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளம் ஷமர் ஜோசப்புக்கும் கிடைக்கும்.

அத்துடன் இந்த ஒப்பந்தத்தால் வரும் காலங்களில் வெஸ்ட் இண்டீசுக்காக நிறைய போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும். அதே போல 2024 டி20 உலகக்கோப்பையில் அவருடன் சேர்ந்து வேலை செய்ய உள்ளதாக பயிற்சியாளர் டேரன் சமி அறிவித்துள்ளார்.

அந்த வகையில் ஷமர் ஜோசப்பின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக இது பார்க்கப்படுகிறது.


Next Story