ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல்-ஹக் ஓய்வு!


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல்-ஹக் ஓய்வு!
x

image courtesy; AFP

20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று நவீன் உல்-ஹக் தெரிவித்திருக்கிறார்.

அகமதாபாத்,

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளை பெற்றது. கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி வலுவான அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்து பாரட்டை பெற்றது.

அதேபோல 5 கோப்பைகளை வென்று மகத்தான அணியாக திகழும் ஆஸ்திரேலியாவையும் 91/7 என்று மடக்கி பிடித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த ஆப்கானிஸ்தான் கடைசி நேரத்தில் மேக்ஸ்வெல் அதிரடியால் அதை நழுவ விட்டது. அதன் காரணமாக லீக் சுற்று வாய்ப்பு நழுவி போனாலும் 9 ஆட்டங்களில் 4 வெற்றிகளை பதிவு செய்து பாகிஸ்தான், இலங்கை போன்ற இதர ஆசிய அணிகளை காட்டிலும் மிகச்சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் 2025ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கும் வரலாற்றிலேயே முதல் முறையாக தகுதி பெற்றது.

இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் உல்-ஹக் அறிவித்துள்ளார். இவர் நடப்பு தொடரில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். அதேநேரத்தில் 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

24 வயதான நவீன் உல்-ஹக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 15 ஒருநாள் போட்டியில் ஆடி 22 விக்கெட்டுகளும், 27 இருபது ஓவர் போட்டியில் ஆடி 34 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு முன்னதகாவே இவர் தனது ஓய்வு குறித்த முடிவை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story