தோனியை விட அவர்தான் பெஸ்ட்- இங்கிலாந்து வீரரை புகழ்ந்த அலெக் ஸ்டீவர்ட்


தோனியை விட அவர்தான் பெஸ்ட்- இங்கிலாந்து வீரரை புகழ்ந்த அலெக் ஸ்டீவர்ட்
x

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பென் போக்ஸ் செயல்பட்டு வருகிறார். இவர் இந்திய விக்கெட் கீப்பர் கே.எஸ்.பாரத்தை விட பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி விக்கெட் கீப்பிங் செய்வதில் வேகமாக செயல்படக்கூடியவர் என்றால் பென் போக்ஸ் அவரை விட வேகமாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுக்கக் கூடியவர் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெக் ஸ்டீவர்ட் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

பென் போக்சை புகழ்ந்த நிலையில், இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு, "பென் போக்ஸ் யாராலும் செய்ய முடியாத விஷயங்களை செய்து வருகிறார். அவருடைய வேகம் வேறு யாருக்கும் கிடையாது. எம்.எஸ். தோனி வேகமான கைகளை கொண்டவர். ஆனால் போக்ஸ் அவரை விட அதிவேகமான கைகளைக் கொண்டுள்ளார். தோனியை விட அவர்தான் பெஸ்ட். குறிப்பாக இந்திய மைதானங்கள் சுழலுக்கு ஆதரவாக இருக்கும் என்பதால் வலைப்பயிற்சியில் தீவிர பயிற்சிகளை மேற்கொள்வார்.

இந்தியாவில் பந்து சுழலும், பவுன்சாகி கீழே வரும் என்பதை தெரிந்து அவர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் மணிக்கணக்கில் பயிற்சி செய்யும் காரணத்தால்தான் அவரைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த தொடரில் அவர் பிடித்த சில கேட்சுகள் அந்த உழைப்புக்கு வெகுமதியாக அமைந்தன. அவரை உலகின் சிறந்த வீரர் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அணியின் சமநிலைக்காக அவர் தொடர்ச்சியாக விளையாடுவதில்லை. இருப்பினும் அவர் 50 அல்லது 60 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவார் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.


Next Story