ஷமர் ஜோசப் அபார பந்துவீச்சு...முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 283 ரன்களில் ஆல் அவுட்...!


ஷமர் ஜோசப் அபார பந்துவீச்சு...முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 283 ரன்களில் ஆல் அவுட்...!
x

image courtesy; twitter/ @ICC

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 119 ரன்கள் குவித்தார்.

அடிலெய்டு,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்கன்சி 50 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஸ்மித் 12 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய லபுசாக்னே 10 ரன்னிலும் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப் பந்து வீச்சில் அவுட் ஆகினர். இதையடுத்து கேமரூன் க்ரீன் களம் இறங்கினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 59 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மட்டுமே நிலைத்து விளையாடினார். மற்ற வீரர்களில் உஸ்மான் கவாஜா மட்டுமே அவருக்கு சிறிது ஒத்துழைப்பு கொடுத்தார். ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகளை ஷமர் ஜோசப் விரைவாக கைப்பற்றி அசத்தினார்.

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 81.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 119 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 95 ரன்கள் பின்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.


Next Story