ஆஷஸ் 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா...!
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
லண்டன்,
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 28ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்னும், பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 325 ரன்னும் எடுத்தது.
இதையடுத்து 91 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 101.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கவாஜா 77 ரன்னும், ஸ்மித் 34 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், ஜோஷ் டங்கு, ராபின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 91 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 370 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.