ஆஷஸ் 2வது டெஸ்ட்; ஸ்டோக்ஸ் அதிரடி வீண்...இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி...!
இங்கிலாந்தின் வெற்றிக்கு கடுமையாக போராடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் எடுத்தார்.
லண்டன்,
உலகின் மிகவும் பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஷஸ். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரே ஆஷஸ் என அழைக்கப்படுகிறது.
இதனிடையே, நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட்கள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், 2வது ஆஷஸ் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 416 ரன்னும், இங்கிலாந்து 325 ரன்னும் எடுத்தன. இதையடுத்து 91 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 279 ரன்கள் குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையுடன் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து ஆட்டத்தின் 5வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் டக்கெட், ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடினர். டக்கெட் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த ஜானி பேர்ஸ்டோ சர்ச்சைக்குரிய வகையில் 10 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஜானி பேர்ஸ்டோவ் பந்தை விளாச முயற்சித்தபோது அது பேட்டிங் படாமல் கீப்பர் வசம் சென்றது. இதையடுத்து சில வினாடிகள் களத்தில் இருந்த ஜானி பேர்ஸ்டோ கிரீசை தாண்டி நடந்து சென்றார்.
அப்போது, கீப்பர் ஹேரி பந்தை வீசினார். அது ஸ்டம்பில் பட்டது. இதன் மூலம் பேர்ஸ்டோவ் ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். இந்த ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. பேர்ஸ்டோவின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்டை தொடர்ந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 155 ரன் குவித்தார். இதில் 9 போர், 9 சிக்ஸ் அடங்கும். அவர் அவுட் ஆனதும் அணியின் வெற்றி வாய்ப்பு சரிந்தது. அடுத்து களம் இறங்கிய பிராட் 11 ரன், ராபின்சன் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 81.3 ஓவர்களில் 327 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 43 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். வெற்றி பெற்றதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது.