ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 393 ரன் குவித்து 'டிக்ளேர்'


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 393 ரன் குவித்து டிக்ளேர்
x
தினத்தந்தி 17 Jun 2023 5:04 AM IST (Updated: 17 Jun 2023 5:09 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரே நாளில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. ஜோ ரூட் சதம் அடித்தார்.

பர்மிங்காம்,

ஆஷஸ் டெஸ்ட்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டு பாரம்பரியமிக்க ஆஷஸ் யுத்தத்தில் முதலாவது டெஸ்ட் பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் காயத்தில் இருந்து குணமடைந்த ஹேசில்வுட் திரும்பினார். இதனால் மிட்செல் ஸ்டார்க் வெளியே உட்கார வைக்கப்பட்டார்.

'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். சமீபத்தில் நாட்டிங்காமில் நடந்த தாக்குதலில் இளம் கிரிக்கெட் வீரர் உள்பட 3 பேர் பலியானார்கள். அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.

ஜாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் டக்கெட் (12 ரன்) ஏமாற்றம் அளித்தார். 2-வது விக்கெட்டுக்கு ஆலி போப்பும், கிராவ்லியும் கைகோர்த்து துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். ஸ்கோர் 92-ஐ எட்டிய போது ஆலி போப் (31 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். சிறிது நேரத்தில் கிராவ்லி (61 ரன், 73 பந்து, 7 பவுண்டரி), ஸ்காட் போலன்ட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரிடம் சிக்கினார்.

மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய பவுலர்களை ஒரு மெய்டன் கூட வீச இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அனுமதிக்கவில்லை. கடந்த ஓராண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு அணி மதிய உணவு இடைவேளைக்குள் மெய்டன் ஓவர் ஒன்று கூட வீசாதது இது 3-வது நிகழ்வாகும்.

ஜோ ரூட் சதம்

4-வது விக்கெட்டுக்கு நுழைந்து அதிரடியாக ஆடிய ஹாரி புரூக் (32 ரன்) கவனக்குறைவால் விக்கெட்டை பறிகொடுத்தார். அதாவது சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பந்து வீச்சில் பந்து அவரது காலில் பட்டு மேலே எழும்பியது. புரூக் பந்து எங்கேயோ செல்வதாக நினைத்து பேட்டை உயர்த்தியபடி நின்றார். பந்து அவரது அருகே விழுந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (1 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட் சரிவால் இங்கிலாந்து கொஞ்சம் தடுமாற்றத்திற்கு உள்ளானாலும் சுதாரித்து மீண்டெழுந்தது.

6-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், ஜானி பேர்ஸ்டோவும் ஜோடி சேர்ந்து தளர்வின்றி ஸ்கோரை நகர்த்தினர். பேர்ஸ்டோ 78 ரன்களும் (78 பந்து, 12 பவுண்டரி), மொயீன் அலி 18 ரன்களும், ஸ்டூவர்ட் பிராட் 16 ரன்களும் எடுத்தனர்.

மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை கொண்டு மட்டையை சுழற்றிய ஜோ ரூட் தனது 30-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஆஷஸ் கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இது தான்.

இங்கிலாந்து 'டிக்ளேர்'

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 78 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்து ஆச்சரியமளித்தது. ஜோ ரூட் 118 ரன்களுடனும் (152 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), ஆலி ராபின்சன் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


Next Story